திருமணம் கைகூட...

கடல் மட்டத்திலிருந்து 270 அடி உயரத்தில் சஹ்யாத்ரி மலையில் அமைந்துள்ளது துல்ஜாபூர். ஆலயம் அமைந்துள்ள தெருவின் பெயரே பவானிதான்! ஊரின் மத்தியில் மகாராஜா சிவாஜிக்கு ஒரு சிலை இருக்கிறது. சுமார் 800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்றும், கி.பி. 1398ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. 90 கருங்கற்படிகளில் ஏறி கோயிலை அடைய வேண்டும். இரண்டு முக்கிய நுழைவாயில்கள். ஒன்று ஷாஹாஜி வாயில். மற்றொன்று ராஜ மாதாதா ஜிஜாவி வாயில்!
ஷாஜாஜி வாயிலில் நுழைந்தவுடன் படி இறங்கும் இடத்தில் வலதுபுறமாக கல்லோல தீர்த்தம். 40 அடி நீளம் 15 அடி அகலத்தில் ஒரு திருக்குளம். அதில் ஒரு கோமுகத்திலிருந்து சுத்தமான குளிர்ந்த நீர் 24 மணி நேரமும் வருகிறது. பல நதிகளிலிருந்து இந்தக் குளத்துக்கும், கோமுகத் தண்ணீர் வருவதாலும், மக்கள் கூட்டத்தாலும் ஒரே இரைச்சல்! கல் லோலம் என்றால் இரைச்சல்! இதில் நீராடலாம். தீர்த்தம் தெளித்துக் கொள்ளலாம். ஜல பாத்திரங்களில் நீரை எடுத்துக் கொள்ளலாம். சித்தி விநாயகர், ஆதி மாதா மாதங்கி தேவி, அன்னபூரணி தேவி ஆகியோருக்கு சிறு சன்னிதிகள். இவர்களையெல்லாம் வணங்கி, பிறகு பவானி மாதாவின் தனிக்கோயிலை அடையலாம். நான்கு பக்கமும் அகலமான பிரகாரம்.
சன்னிதிக்கு எதிரில் பெரிய ஹோம குண்டம்! இரண்டு புறமும் பெரிய தீபத் தூண்கள்! பண்டிகை நாட்களில் இவை ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்குமாம். அப்சல்கானை வெற்றிகொண்ட சத்ரபதி சிவாஜி இவற்றை காணிக்கையாக்கினா ராம்!
சபா மண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டது. பல தெய்வங்களின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு எதிரில் பவானி தேவியின் வாகனமான சிங்கம் வெள்ளை மார்பிளில் ஒரு பெரிய கன்றுக்குட்டி அளவில் கண்களில் சினம் பொங்க கம்பீரமாகக் காட்சி தருகிறது.
கருவறையில் பவானி மாதா! கண்டகீ எனப்படும் ஒரு வகை கறுப்பு கருங்கல்லால் வடிக்கப்பட்ட சிலை. நாங்கள் சென்றபோது டிசம்பரில் திருவிழா காலம்! அதனால் பவானி தேவி ஒருவாரம் சயனக் கோலத்தில் இருக்கிறாள்! வெள்ளியாலான ஊஞ்சலில் படுத்து இருக்கிறாள்! சிறிய கறுப்பு நிறமுகம்! மூக்குத்திகள் இரண்டு புறமும் ஒளி வீசுகின்றன. வெள்ளிக்கண்கள்! நடுவில் குங்குமமும், இரண்டு புறமும் சந்தனமும் விளங்கும் கிரீடம்! கண்களில் கனிவு! கருணை! முகத்தில் சாந்தம். தேவியின் சயனக் கோலத்தில் கருவறையில் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிப் பாதங்கள் வெளியில் வைத்திருக்கிறார்கள். அவற்றை நமஸ்கரிக்கலாம்! இந்த சன்னிதிக்கு இடதுபுறம் மற்றொரு சன்னிதி! ஒரு வாரம் சயனக்கோலம் தவிர, இங்குதான், தேவி காட்சி தருகிறாள். இங்கு ஒரு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளி சிம்மாசனம்! தேவி அதில் அமர்ந்த கோலத்தில் அற்புதக் காட்சி வழங்குகிறாள்! சுமார் 3 அடி உயரத்தில் ஒரு அற்புத சிலை. தேவிக்கு வலதுபுறம் ஒரு வெள்ளி சிங்கம். இடது புறம் அனுபூதி என்ற பக்தையின் திருவுருவம்! வலது தோளுக்கு அருகில் சந்திரனும், இடது தோளுக்கு அருகில் சூரியனும் பொறிக்கப்பட்டுள்ளன. பவானி தேவியின் எட்டு திருக்கைகளும், அவைகளில் விதவிதமான ஆயுதங்களும்! வலது ஒரு கையில் ஒரு திரிசூலம்! அது மகிஷா சுரனின் நெஞ்சில் குத்திய வண்ணம் காட்சி! வலது காலை அசுரனின் மேல் வைத்திருக்கிறாள தேவி! இடது கால் நேரிடையாக தரையில் பதிகிறது! இரண்டு கால்களுக்கும் இடையே கொம்புடன் கூடிய எருமையின் தலை! தலையில் கிரீடம்!
இந்த மூலவரான தேவி உருவம் சன்னிதியில் நிலைநிறுத்தப்படவில்லை. மூலவரையும் வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். சயனத் திருக்கோலத்தில் தேவியை தரிசிப்பது மிகவும் பெரிய புண்ணியமாம்! இந்த அபூர்வக் காட்சி எதிர்பாராமல் கிடைத்தது.
தனது படைகள் வெற்றிபெற்றதற்காக, அசோகர் பவானியை வழிபட்ட தினம் அசோகாஷ்டமி தானாம்.
சைத்ர மாதம் சுக்லபட்ச அஷ்டமி நாளில், பவானியாக வெளிப்பட்டாள் அம்பிகை. அந்த நாளே, ‘பவானி ஜயந்தி’ என விசேஷமாக கொண்டாப்படுகிறது. ‘அந்த நாளில், பவானியை, அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்; அவரை சோகம் அண்டாது; வாழ்க்கை ஆனந்தமாக அமையும்’ என்கிறது காசி காண்டம்.
சன்னிதியை விட்டு வெளியில் வந்ததும், பவானி சங்கர் என்ற திருப்பெயருடன் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார் சிவ பெருமான்!
இந்தக் கோயிலில், மங்கை நல்லாளுக்குத்தான் முக்கியத்துவம்! வெள்ளிக் கவசமிட்ட முகரூபம் மட்டும் கொண்டு, பெரிய மீசையுடன் அமர்ந்த நிலையில் சிவன்! காலடியில் ஒரு சிவலிங்கம்! இவருக்கும் ரிஷபத்துக்கும் பெரிய ருத்திராட்ச மாலை. இங்கு ஒரு அடி நீளமுள்ள ஒரு இரும்பு சங்கிலி! இதைத் தொட்டு வணங்கி கழுத்தைச் சுற்றி வைத்துக்கொண்டு பக்தர்கள் பார்வதி-பரமேஸ்வரரை வேண்டுகின்றனர். இதனால் செய்த கர்ம வினையும், பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை!
வெளிச்சுற்றில் யமயா தேவர் என்று யமனுக்கு சன்னிதி, லட்சுமி நரசிம்மர், சிந்தூரம் பூசிய ஹனுமன், பெரிய கல் சூலங்கள், பல சிவலிங்க உருவங்கள் என்று பற்பல சன்னிதிகள்.
சாதா நவராத்திரி, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், அசோகாஷ்டமி போன்றவை திருவிழாக்காளாக அனுசரிக்கப்படுகின்றன. இந்த தேவியின் நித்யானுஷ்டங்களும் வித்தியாசமானவை.
இரண்டு வேளை கல்லோல தீர்த்தத்தால் அபிஷேகம். ரொட்டியும், காய்கறிகளும், பால் பாயசத்துடன் நைவேத்தியம்!
பவானி கோயிலில் பின்புறத்தில் இரண்டு பெரிய பந்துகள் போன்ற வழுவழுப்பான கறுப்பு கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சிந்தாமணி கல் என்று அழைக்கப்படுகிறது. நமது இரு கைகளையும் கல்லின்மேல் வைத்து தேவியை வேண்டி நமது பிரச்னைகளை நினைக்க வேண்டும். கல் வலது புறம் நகர்ந்தால், பிரச்னை தீரும்! என்பது ஒரு நம்பிக்கை!
‘ராம வர தாயினி’ என்று பவானியை விளிக்கிறார் ராமதாசர். ஸ்ரீராமசந்திரமூர்த்தி சீதையைத் தேடி கானகத்தில் அலையும் போது, தனது வலது சுண்டுவிரலால் இலங்கையை சுட்டிக்காட்டினாளாம். அதற்காக இந்தப் பெயர். இப்போதும் பாறை மேல், பவானி தேவியின் பாதங்களுடன் ஸ்ரீராமருக்கு ஒரு கோயில் உள்ளது.
இருப்பிடம்: சென்னை-மும்பை ரயில் பாதையில், ஷோலாப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 44 கி.மீ.
தரிசன நேரம்: காலை 5.30 முதல் மதியம் 1 மணி வரை; 3 முதல் இரவு 9 மணி வரை!
தலபுராணத் தகவல்!
பக்தை அனுபூதி கர்த்தம மகரிஷியின் மனைவி.இவள் கருவுற்று இருந்தபோது, கர்த்தமர் இறைவனடி சேர்ந்தார். சூல் கொண்டு இருந்ததால், அனுபூதி உடன் கட்டை ஏற முடியவில்லை. மகன் பிறந்தான். குழந்தையை வேறு ஒரு முனிவரிடம் ஒப்படைத்துவிட்டு, சீரிய தவத்தில் ஈடுபட்டாள்! தவ வலிமையால் முகப்பொலிவு பெற்ற அவளை மோகித்தான் குகுரம் என்ற அரக்கன். அனுபூதி ஆதி சக்தியை வேண்டினாள். எட்டு கரங்களுடன் சினத்துடன் தோன்றி பவானி தேவி அவனுடன் போரிட்டாள். ஆண் காட்டு எருமை உருவம் தரித்த குகுரனை வதைத்தாள். அந்த இடம் தான் துல்ஜாபூர். பவானி தேவியின் சன்னிதியில் அனுபூதி இருப்பதற்கான காரணம் இது என்கிறது ஸ்காந்த புராணம்.்


Comments