நமது கோயில்களில் தல விருட்சங்கள் என்ற கருத்தாக்கம் உருவாக, வழிபாடு உள்ளிட்ட காரணங்கள் பல இருந்தாலும், தாவரங்களைப் பாதுகாப்பது என்ற உயரிய தத்துவம் இருப்பதையும் நாம் உணர வேண்டும்” என்கிறார், சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மைய அமைப்பின் இயக்குநரான டாக்டர் நந்திதா கிருஷ்ணா. சுற்றுச்சூழல் தொடர்பான பல புத்தகங்களை வெளியிட்டிருக்கும் இந்த மையம், அமிர்ந்தலிங்கம் என்பவர் எழுதிய ‘தமிழகத்தின் புனித மரங்கள்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறது. நந்திதாவைச் சந்தித்தோம்.
விருட்சங்கள் (மரங்கள்), எப்படி நமது கோயில்களுடன் தொடர்புடையதாயிற்று?
மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்த்தோமானால், நமது முன்னோர்கள், பஞ்சபூத வழிபாடுகளின் மூலம், இயற்கையை வணங்கி வந்தது தெரியவரும். தனது வாழ்வாதரத்துக்குரிய எல்லாவற்றையும் மனிதன் வணங்கி, போற்றிப் பாதுகாத்து வந்தான். அந்த அடிப்படையில், தாவரங்களையும் மனிதன் நேசித்தான். தனது சுவாசத்துக்கு காரணமான மரங்கள், செடிகள், கொடிகள் அவனது வழிபாட்டுக்குரியதாயின. ரிக் வேதத்தில் மரங்களின் முக்கியத்துவம் பற்றியும், அவைகள் வணங்கப்பட வேண்டியவை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் சில குறிப்பிட்ட மரங்களில், சில தெய்வங்கள் வாழ்வதாக மனிதன் கருதினான். எனவே, அதுபோன்ற தாவரங்கள் இருந்த இடத்தில் அந்தத் தெய்வங்களுக்கு கோயில் கட்டினான். உதாரணமாக ‘ஏகாமா’ என்றால் மாமரம். ஈசன், மாமரத்தில் உறைவதாகக் கருதிய மனிதன், பல ருசிகளைக் கொடுக்கும் அபூர்வ மாமரம் இருந்த காஞ்சிபுரத்தில் கோயில் கட்டி, ஏகாம்பரேஸ்வரை பிரதிஷ்டை செய்தான். இப்படி நெல்லி மரங்கள் இருந்த இடம் திருநெல்லிக்கா எனவும், பனை மரங்கள் இருந்த இடங்கள் திருப்பனையூர் என்றும் புனிதத் தலங்களாக உருவாயின. வேதங்களில் மட்டுமல்ல; நமது புராணங்களில்கூட, மரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வால்மீகி ராமாயணத்தில் பல இடங்களில், அவர் குறிப்பிட்டிருக்கும் மரங்களை, விவரம் தெரிந்தவர்களின் துணைகொண்டு, எங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டாரோ, அங்கேயே அடையாளம் காண முடியும். நமது சங்க இலக்கியங்கள் மரங்களை வழிபாட்டுக்குரியவை என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல், அவை எந்த கடவுளுக்குரியவை என்றும் குறிப்பிட்டிருக்கின்றன. ஆலமரம் என்பது சிவன், விஷ்ணு என்று இருவருக்கும் தொடர்புடைய மரமாகும். இப்படி ஒவ்வொரு மரங்களின் தெய்வத் தன்மையைச் சொல்ல முடியும். இந்த பாரம்பரியத்தில் காலப்போக்கில் மரங்களின் கீழே, அதே தெய்வத்தை வைத்தும் மனிதன் வழிபடத் தொடங்கினான். இதை ‘வ்ரிக்ஷ சைத்தியர்’ என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மரங்களின் பெயரிலேயே ஊரையும் அமைத்தார்கள். வேப்ப மரங்கள் இருந்த இடம் திருவேற்காடு எனவும் தில்லை மரங்கள் இருந்த இடம் தில்லை (சிதம்பரம்) எனவும் அழைக்கப்பட்டன. புத்த, சமண மதங்களிலும் மரங்கள் புனிதமாகக் கருதப்படுவது குறித்து விபரங்கள் உண்டு.
ஆயிரக்கணக்கான வகை மரங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட மரங்களே தல விருட்சங்களாக கருதப்படுகிறதே!
தல விருடங்கள் குறித்த செவிவழிச் செய்திகள் நிறைய. அடர்ந்த மரங்கள் அடங்கிய வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கங்களை, தேவர்கள் வழிபட்டு வந்தார்கள் என்று ஒரு செய்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் எந்த மரத்துக்கு கீழே லிங்கம் இருக்கிறதோ, அந்த மரம் தல விருட்சமாக மாறியது. அடுத்து மனித நாகரிக பரிணாம வளர்ச்சியின்போது, வாழ்வாதாரம் வேண்டி, பல இடங்களுக்கு மக்கள் குடி பெயர்ந்தார்கள். தான் இருந்த இடத்தின் நினைவாக, அங்கு இருந்த மரம் ஒன்றை எடுத்துச் சென்று, தான் புதிதாக வாழத்தொடங்கிய இடத்தில் நட்டு போற்றி பாதுகாத்து வந்ததாகவும், அதுவே தல விருட்சமாயிற்று என்றும் செய்திகள் உண்டு.
மேலும் 27 நட்சத்திரங்களுக்கும் பொருத்தமான மரங்களை அடையாளப் படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஒரு இடத்தில் கோயில் கட்டும்போது, ஊர் பெயர், அரசரின் பெயர் ஆகியவற்றை கணக்கிட்டு, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய மரத்தை முதலில் நட்டார்கள். அதுவே, தல விருட்சமானது என்றும் சொல்வார்கள். கட்டுமான கலையில் வல்லவர்களான நமது முன்னோர்கள், முதலில் மரத்தை நடுவதன் மூலம், அந்த மண்ணின் குணத்தையும் கண்டறிந்தார்கள். மற்றும் ஒரு முக்கியமான காரணம், நமது தாவரங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நமக்குத் தெரியும். தமது நோய்களைத் தீர்க்கும் மரங்களை வழிபடும் கலாசாரமும், தல விருட்சங்களுக்கு அடிப்படையாக அமைத்திருக்கக்கூடும். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. தாவரங்களைப் பாதுகாத்துப் போற்ற வேண்டியதன் அவசியத்தை, மனித குலத்துக்கு உணர்த்த, பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டு, அவைகளில் ஒன்றாக, வழிபாட்டுத் தத்துவமும் உள்ளடங்கிப்போனது.
நமது கோயில்களில் தல விருட்சங்கள் நன்றாகப் பராமரிக்கப்படுகிறதா?
சில விருட்சங்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கின்றன. கோயில்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டால், தல விருட்சங்களும் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. கோயில்கள் ஷீணமாகிப் போகும் நிலையில், தல விருட்சங்களும் அழிவைச் சந்திக்கின்றன. புன்னை மரங்கள் நிறைந்த ஊர் மைலாப்பூர். “மட்டிட்ட புன்னயங்கானல் மடமயிலை” என்று பாடினார் ஞானசம்பந்தர். இப்போது சாந்தோம் சர்ச் அருகில் உள்ள பங்களாவில் ஒரு மரமும், கோயிலில் ஒரு மரமும் உள்ளது. தில்லை வனம் என்று அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் தில்லை மரங்கள் இல்லை. பிச்சாவரம் கடற்கரைப் பகுதியில் ஏதோ கொஞ்சம் இருக்கின்றன. கவனிக்கத் தவறினால், காலப்போக்கில் அவை அழிந்துவிடும்.
புனித மரங்களைக் காக்க என்ன செய்கிறீர்கள்?
நமது கிராமங்களில், எல்லைப் புறங்களில் கிராம தேவதைகளின் கோயில்களைச் சுற்றி வனங்கள் அமைந்திருக்கின்றன. இவைகளைக் கோயில் காடுகள் என்பார்கள். தமிழ்நாட்டில் 52 இடங்களில் கோயில் காடுகளை சீரமைத்துப் பராமரிக்கிறோம். மதுரை அருகே மீனாட்சி அம்மனுக்கு சொந்தமான இடத்தில், 300 ஏக்கரில், நட்சத்திர வனம், ராசிவனம் என்ற கோட்டத்தை உருவாக்கி பராமரிக்கிறோம். ஒருவர் தனது நட்சத்திரம், ராசிக்குரிய மரத்தைத் தேர்ந்தெடுத்து, கோயிலில் பணம் கட்டினால், அந்த மரத்தை நாங்கள் இந்தத் தோட்டத்தில் நட்டு பராமரிப்போம்.
சில மரங்கள்; சில தலங்கள்:
திருவானைக்காவல்: நாவல்
திருப்பதி: வன்னி
ஸ்ரீரங்கம்: புன்னை
உத்தரகோசமங்கை: எலந்தை
திருவெண்காடு: ஆலமரம்
ஆழ்வார்திருநகரி: புளிய மரம்
காஞ்சிபுரம் (வரதர்): அரச மரம்
சில நட்சத்திரங்கள்; சில மரங்கள்:
அஸ்வினி: எட்டி
ரோஹிணி: நாவல்
பூசம்: அரசமரம்
மகம்: ஆலமரம்
சித்திரை: வில்வம்
பூரட்டாதி: மாமரம்
ரேவதி: இலுப்பை
Comments
Post a Comment