வில்வ மாலை... விரைவில் திருமணம்!

கன்னிவாடிஸ்ரீசோமலிங்க ஸ்வாமி கோயில்
லைக்கோயில், குகைக் கோயில், தரைக்கோயில் என ஆலயங்கள் பலவகைப்படும். அந்த வரிசையில், மலையடிவாரத்தில், ஒரு சிறிய குன்றின் மீது எழிலுற அமைந்துள்ளது ஸ்ரீசோமலிங்க ஸ்வாமி திருக்கோயில்.
எங்கே இருக்கிறது?
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி- ஒட்டன் சத்திரம் நடுவே அமைந்துள்ளது கன்னிவாடி கிராமம். திண்டுக்கல்லில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், செம்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் கோயில் கொண்டு அருளாட்சி செய்கிறார் ஸ்ரீசோமலிங்க ஸ்வாமி. கன்னிவாடி வரை பேருந்து உண்டு. அங்கிருந்து கோயிலுக்கு ஆட்டோ வசதி உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில், ஹரிகேச பர்வதம் எனும் மலையின் அடிவாரத்தில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீசோமலிங்க ஸ்வாமி திருக்கோயில். மலையே சிவலிங்கம் என்றும், அந்த சிவலிங்கத்துக்கு ஆதிசேஷனே குடை பிடித்தபடி உள்ளது என்றும் சொல்வார்கள்.
சித்தர்கள் வழிபட்ட தலம்!
தமது சித்து விளையாட்டுகளின் மூலம் கொங்கணச் சித்தரை தவளையாக மாற்றி, கருவூராருக்கு சித்தப் பிரமை ஏற்படும்படி செய்தாராம் போகர். அங்கு வந்த அகத்திய மாமுனி அனைத்தையும் அறிந்து, 'முருகப்பெருமானின் நவபாஷாண விக்கிரகத் திருமேனியை நீ வடிவமைக்கும்வரை, உன் சித்து வேலை இனி பலிக்காது!’ என சொல்லிச் சென்றார். அதையடுத்து, ககன குளிகை எனும் மூலிகையைக் கொண்டு, கந்தனின் விக்கிரகத் திருமேனியை அமைத்தார் போகர் என்கிறது புராணம். அதுவே பழநியில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம்.
மைந்தனின் விக்கிரகக் திருமேனியை அமைப்பதற்கு தந்தையை வணங்கினார் போகர்; அப்போது அவர் வழிபட்ட இடமே சோமலிங்க ஸ்வாமி திருத்தலம் என்கிறது இந்தக் கோயிலின் ஸ்தல புராணம்.
ஓம் விநாயகர்!
ஆலயத்தில், வேம்பு மற்றும் வில்வ மரங்களின் கீழே உள்ள ஸ்ரீவிநாயகப் பெருமான், 'ஓம்’ வடிவில் காட்சி தருகிறார். அதேபோல், இங்கு விநாயகருக்கு எதிரில், அவரின் தந்தை சிவனாரின் வாகனமான நந்தி அமைந்துள்ளது சிறப்பு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஓம் விநாயகரை வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம் என்கிறார் கோயிலின் ஆண்டவன் குருக்கள்.  
நந்தியின் கழுத்தில் லிங்கம்!
பொதுவாக, நந்தியின் கழுத்தில் மணிகள் கோத்த மாலை காணப்படும். ஆனால் இங்கே, மூலவர் ஸ்ரீசோமலிங்க ஸ்வாமி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ள நந்தியின் கழுத்தில் மணி மாலைக்குப் பதிலாக சிவலிங்கம் காணப்படுவது அரிதான ஒன்று! அதேபோல், நந்தி முன் கால்களை மடக்கியபடி அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இங்கு, மூன்று கால்களும் தெரிய நந்தி அமைந்திருப்பது விசேஷம் என்கிறார் ஆண்டவன் குருக்கள்.  
மெய்க்கண்ட சித்தர் இங்கு நெடுங்காலம் தங்கி சிவலிங்க பூஜை செய்து, தவமிருந்தார் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம். இங்கே உள்ள ஊற்று நீர், தீர்த்தப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதான் சிவனாருக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன என்றும், அந்தத் தீர்த்தத்தை உட்கொண்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் யாவும் உடனே நீங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். சித்தர்கள் தவமியற்றிய குகையையும் இங்கே தரிசிக்கலாம்.
கல்யாண வரம்!
''தினமும் காலையில் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது ஸ்ரீசோமலிங்க ஸ்வாமியைத் தரிசித்தால், இன்னல்கள் யாவும் நீங்கி, மனத் தெளிவுடன் சந்தோஷமான இல்லறம் அமைந்து வாழலாம்'' என்கிறார் கோயில் குருக்கள்.
அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஞானாம்பிகை. திங்கட் கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீசோமலிங்க ஸ்வாமிக்கு வில்வமாலை சார்த்தி, ஸ்ரீஞானாம்பிகை அம்பாளுக்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால், கல்யாணத் தடைகள் யாவும் விரைவில் விலகும்; நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

Comments