பழைமைச் சிறப்பு!
கோவை இருகூரில் சுமார் 1500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயத்தில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். கோயம்புத்தூரில் இருந்து இருகூர் செல்லும் பேருந்தில் சென்றால், கோயிலை அடையலாம்.
மேற்குப் பார்த்த ஆலயம்!
பிரமாண்டமான ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். கிழக்குப் பார்த்தபடி உள்ள 108 ஆலயங்களைத் தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலன், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஒரு சிவாலயத்தைத் தரிசித்தால் கிடைக்கும் என்கின்றனர் பெரியோர். இதோ... இந்த இருகூர் நீலகண்டேஸ்வரர் கோயில், மேற்குப் பார்த்தபடி அமைந்துள்ள சிறப்புப் பெற்ற திருத்தலம்!
மூவேந்தர் வழிபட்ட கோயில்!
சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட தலம் இது. ராஜராஜதேவன், அமரபுயங்கன், சேரன் வீரகேரளன், கரிகால் சோழன் முதலான பலரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர், திருப்பணிக்கு உதவியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. முக்கியமாக, கரிகால் சோழன் இந்தத் தலத்துக்கு வந்து சிவ வழிபாடு செய்ததால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்கிறது ஸ்தல வரலாறு.
கொங்கு தேசத்தில் கோயம்புத் தூரில் இருந்து கரூர் வரை உள்ள பல தலங்களில், காமதேனுப் பசு வந்து சிவலிங்க பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக் கின்றன. அதேபோல், இருகூர் ஸ்ரீநீலகண்டேஸ்வரரின் லிங்கத் திருமேனியையும் காமதேனுப் பசு வழிபட்டது என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.
இங்கே, ஞானம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மூர்த்தம் கொள்ளை அழகு! ஸ்ரீசௌந்தரலிங்கேஸ்வரர், ஸ்ரீசுயம்வர கல்யாண பார்வதி, ஸ்ரீகால பைரவர், ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. அதேபோல், இங்கே ஸ்ரீபிரம்மா வும் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.
சேர மன்னன் ஒருவன், தங்கள் தேசத்தை நோக்கி இறைவன் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலை, மேற்கு நோக்கிக் கட்டினான் என்றும், அதையடுத்து சோழ மன்னன், இறைவன் தங்கள் தேசத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என விரும்பி, ஸ்ரீசௌந்தரலிங்கேஸ்வரரை பிரதிஷ்டை செய்தான் என்றும் சொல்வர்.
சூரிய நமஸ்காரம்!
சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் மூலவரின் லிங்கத் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுந்து வணங்குவது சிறப்புக்கு உரிய ஒன்று. அப்போது, லிங்கத் திருமேனி முழுவதும் ருத்திராட்சமென ஜொலிப்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.
கல்வியும் ஞானமும் நிச்சயம்!
வியாழக்கிழமைகளில், இங்கு வந்து ஸ்ரீநீலகண்டேஸ்வரருக்கும் ஸ்ரீசௌந்தர லிங்கேஸ்வரருக்கும் வில்வ மாலை சார்த்தி, ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஸ்ரீபிரம்மாவையும் வணங்கி வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞானத் துடன் யோகமும் கைவரப் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!
தேர்வுக் காலங்களில், மாணவர்கள் இங்கு வந்து சிவ வழிபாடு செய்வதுடன், குரு பிரம்மாவையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். இருகூர் நீலகண்டேஸ்வரர் தலத்துக்கு வாருங்கள். கல்வி ஞானத்துடன் திகழ்வீர்கள்!
ஒருமுறையேனும் இந்த நீலகண்டரை தரிசிப்போம்
ReplyDelete