பூவும் பொட்டுமாக, தீர்க்கசுமங்கலியாக வாழ வேண்டும்’ என்பதுதான் சுமங்கலிப் பெண்கள் ஒவ்வொருவரது விருப்பமும். இறைவனிடம் அவர்கள் வேண்டிக்கொள்ளும் மகோன்னதமான வரமும் இதுவே! எனவேதான், நமது சனாதன மதத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற வழிபாடுகளும், 'வரலக்ஷ்மி பூஜை’, 'காரடையான் நோன்பு’ போன்ற பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கற்புக்கரசி சாவித்திரி 'பதி ஸஞ்சீவினி விரதம்’ என்ற விரதத்தை அனுஷ்டித்து, தன் கணவனைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்துடன், அவளுக்கு சுமங்கலி வரம் பெற்றுத்தந்த திருத்தலம் ஒன்றையும் ஞானநூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அந்தத் தலத்தின் திருப்பெயரும் 'சுமங்கலி’ என்பது சிறப்பு!
காஞ்சியிலிருந்து கலவை போகும் வழியில், சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுமங்கலி திருத்தலம். மகா பெரியவாளின் அபிமான க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தலத்துக்குப் பலமுறை விஜயம் செய்திருக்கிறார் பெரியவா.
ஒருமுறை, மகா பெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்யும் அன்பர் ஒருவரை அழைத்து, சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஒரு பெண்மணியைச் சுட்டிக்காட்டி, ''அதோ, அந்த மாமி சுமங்கலியானு கேட்டுண்டு வா!'' என்றாராம்.
நெற்றி நிறைய குங்குமம், கை நிறைய வளையல்கள், காது- மூக்கில் ஆபரணங்கள், கால்களில் மெட்டி, கழுத்தில் திருமாங்கல்யம் என பூரண சுமங்கலிக் கோலத்தோடு நின்றிருந்த அந்தப் பெண்மணியிடம் போய், 'நீங்கள் சுமங்கலியா?’ என எப்படிக் கேட்பது என்ற தயக்கத்தில், அந்த இடத்தைவிட்டே அகன்றுவிட்டார் அந்த அன்பர். மகா பெரியவா மற்றொருவரை அழைத்து, அதே கேள்வியைச் சொல்லி, அந்தப் பெண்மணியிடம் கேட்டுவரும்படி பணித்தார். அந்த அன்பர், 'பெரியவா அனுக்ஞையை நிறைவேற்ற வேண்டும்; அதே நேரம், அந்தப் பெண்மணியின் மனம் கோணாமலும் கேட்கவேண்டும்’ என்ற எண்ணத்துடன் சென்று, வெகு ஜாக்கிரதையாக அந்த அம்மாளிடம், 'நீங்கள் சுமங்கலியானு பெரியவா கேட்டுண்டு வரச்சொன்னா’ என்றார்.
உடனே அந்தப் பெண்மணி வியப்புடன், ''அட! ஆமாம், நான் சுமங்கலிதான்'' என்றபடியே, மகா பெரியவா அமர்ந்திருந்த இடத்துக்கு ஓட்டமும் நடையுமாக வந்து வணங்கினார். அருகில் இருந்தவர்கள் எல்லாரும் குழப்பமும் வியப்புமாகப் பார்த்துக்கொண்டிருக்க, ''இந்த அம்மா சுமங்கலின்னு எனக்குத் தெரியாதா? அப்படியிருந்தும், ஏன் கேட்கச் சொன்னேன், தெரியுமோ? 'சுமங்கலி’ங்கிற ஊரைச் சேர்ந்தவர் இந்த தீர்க்கசுமங்கலி!'' என்று சொல்லிப் புன்னகைத்தாராம் பெரியவா. அதன்பிறகு, அந்த மாமிக்கு 'சுமங்கலி மாமி’ என்றே பெயர் நிலைத்துவிட்டது.
1976-ம் ஆண்டு, அடியேன் எழுதிய 'மங்களம் தந்திடும் மாங்காட்டு அம்மை’ எனும் சிறு நூல் ஒன்றை மகாபெரியவாளிடம் சமர்ப்பிக்க, காஞ்சிக்குச் சென்றேன். அவர், கலவைக்குச் செல்வதாக அறிந்து, நானும் கலவை செல்ல, பேருந்தில் ஏறினேன். அப்போது மகா பெரியவா 'சுமங்கலி’யில் முகாமிட்டிருப்பதாக நடத்துநர் கூறினார். எனவே, நான் 'சுமங்கலி’யில் இறங்கிக் கொண்டேன்.
அற்புதமான அந்த க்ஷேத்திரத்தில், ஒரு மரத்தடியில் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சொரூபமாக அந்த மகானை தரிசித்ததும், ஆரம்பம் முதல் கடைசி வரை பொறுமையாக என் புத்தகத்தைப் படித்து அவர் அருளாசி புரிந்ததும் எனக்குக் கிடைத்த பெரும்பேறு. சிறிது காலம் கழித்து, என் உறவினர் ஒருவர் மூலம், அந்த ஊர்தான் என் முன்னோர்களின் பூமி என்பதை அறிந்தபோது, உடலும், உள்ளமும் சிலிர்த்துப்போனது.
'தொண்டை நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்றான காலீயூர் கோட்டத்து பிரம்மதேச நாட்டைச் சேர்ந்த சுமங்கலி’ என்று கல்வெட்டுகள் குறிக் கின்றன. இங்கு கோயில் கொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஸ்ரீசத்திய நாதேஸ்வரர்; அம்பிகை- ஸ்ரீசுமங்கலியம்மன்.
பல பெருமைகளைப் பெற்ற இத்திருக்கோயில், அளவில் மிகச் சிறியது. கோயிலுக்குக் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு வாயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலுக்குள் நுழையும் முன்பே, வெளிச்சுற்றில் நந்தியும் பலிபீடமும் இடம்பெற்றுள்ளன.
நுழைவாயிலுக்கு மேற்குப்புறத்தில் ரிஷப வாகனத்தில் அப்பனும் அம்மையும் தரிசனம் தருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததும் முக மண்டபம் உள்ளது. நமக்கு நேர் எதிரே ஈசனின் கருவறை, கருவறை வாயிலுக்கு இருபுறமும் கணபதியும், வள்ளி- தெய்வானையுடன் கூடிய ஆறுமுகப் பெருமானும் காட்சி தருகிறார்கள். முருகனின் முகம் சற்றுத் தூக்கிய நிலையில் வித்தியாசமாகக் காணப்படுகிறது. கருவறையில், எட்டுப் பட்டைகளுடன் கூடிய லிங்கத் திருமேனியராக எழிற்கோலம் காட்டுகிறார் அருள்மிகு சத்தியநாதேஸ்வரர். பல்லவர்கள் எழுப்பிய கோயில்களில்தான் இது போன்ற லிங்கத் திருமேனியை தரிசிக்க முடியும்.
அடுத்து, தெற்கு நோக்கிய சிறிய கருவறையில் சுமங்கலி அம்மன் காட்சி தருகிறாள். நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு திருக்கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு திருக்கரங்களில் அபய, வரத முத்திரைகளும் தாங்கியபடி அருள்புரிகிறாள் இந்த அம்பிகை.
சத்தியவானுக்கு அருள் புரிந்ததால் இங்கு உறையும் ஈசனுக்கு ஸ்ரீசத்தியநாதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. சாவித்திரிக்கு சுமங்கலி வரம் அருளியதால் இந்த அம்பிகைக்கு சுமங்கலியம்மன் என்ற பெயர் அமைந்தது.
நவகிரக சந்நிதியும் இக்கோயிலில் உள்ளது. வெளிச்சுற்றில் பஞ்ச கோட்டங்களில் அதற்குரிய தெய்வங்களையும், சண்டிகேஸ்வரரை வடக்குச் திருச்சுற்றிலும் தரிசிக்கலாம்.
சத்தியவான்- சாவித்திரி மட்டுமின்றி, காகபுஜண்டர், கண்ணுவர், புலத்தியர் ஆகியோரும் இங்கு வழிபட்டதாகத் தெரிகிறது. இவர்கள் மூவரும் ஜீவசமாதியாக இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாக நம்பப்படுகிறது.
காஞ்சி முனிவர் முதன்முறை இந்தக் கோயிலுக்கு வந்தபோது, இது புதர் மண்டிக்கிடந்துள்ளது. உடனே ஊர் மக்களை அழைத்து, அவர்களுக்கு இந்தக் கோயிலின் பெருமைகளை எடுத்துக் கூறி, கோயிலைத் துப்புரவு செய்யச் சொல்லி, வழிபட்டாராம்.
காஞ்சி காமகோடி மடத்தின் ஆதரவில் 1.7.1988 அன்று இந்தத் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கும் செய்விக்கப்பட்டது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்தத் திருக்கோயிலுக்கான தீர்த்தம், சோமசிவன் குளம் என்று அழைக்கப்படும் திருக்குளம் ஆகும். அது இப்போது பாழடைந்து குட்டையாகக் காட்சியளிக்கிறது. சிவநேசச் செல்வர்களும் பக்தர்களும் இந்தத் திருக்குளத்தைச் சீரமைக்க முனைந்தால், பெரும் புண்ணியம் வந்துசேரும்.
காஞ்சி மண்டலத்துக்கு 'சத்திய விரத க்ஷேத்திரம்’ என்ற பெயர் உண்டு. காஞ்சியின் ஒரு பகுதியான திருக்காலி மேட்டில் (தேவாரப் பெயர் கச்சி நெறிக்காரைக்காடு) எழுந்தருளிய ஈசனுக்கும் ஸ்ரீசத்திய விரதேஸ்வரர், ஸ்ரீசத்தியநாதேஸ்வரர் எனும் திருநாமங்கள்!
தொண்டை நாட்டில் வாழ்ந்தவர்களை 'சத்திய புத்ர’ என்று, அசோகர் தனது சிலாசாஸனத்தில் குறித்திருப்பதாகக் காஞ்சி மகான் கூறியிருக்கிறார். 'கஞ்சிவாடு மஞ்சிவாடு’என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு.
இவ்வளவு புகழ்வாய்ந்த இந்த காஞ்சி மண்டலத்தில் திகழும் சுமங்கலி திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்வில் சகல மங்கலங்களும் பெருகும்.
படங்கள்: கா.முரளி
நாடி போற்றும் கற்புக்கோட்டம்
காகபுஜண்டர் நாடியில் 'சிவத்தல மஞ்சரி’ என்னும் பகுதியில், உதய காண்டத்தில், சாவித்திரி இந்தத் தலத்தின் இறைவனையும் இறைவியையும் வழிபட்ட பெருமைகள் பேசப்பட்டுள்ளன.
உற்றதோர் கற்புக்கோட்டம் உன்னத தலத்தில் மேவும்
நற்றவ கற்பின் மூத்த நம்பிடு அடியர் காக்கும்
சொற்றதோர் சுமங்கலிப் பதியில் சொல்லொணாவருளால் வாழும்
பற்றுடை விநாயகன்றாள் பரவினோர் பாபம் நீங்கும்
நற்றவ கற்பின் மூத்த நம்பிடு அடியர் காக்கும்
சொற்றதோர் சுமங்கலிப் பதியில் சொல்லொணாவருளால் வாழும்
பற்றுடை விநாயகன்றாள் பரவினோர் பாபம் நீங்கும்
நாட்டதின் வளன்கள்ளாம்மை நவிலுவேன் கோரக்காக்கேள்
ஈட்டிடு முன்னாடம்மில் இப்புவி சத்தியம்நாதன்
வாட்டமில் வாழ்ந்துப் பின்னும் வளர்புவி காலன் நோக்க
சாட்டிடு, வன்னாடம்மின் சுமங்கலி வரமும் வேண்டி
ஈட்டிடு முன்னாடம்மில் இப்புவி சத்தியம்நாதன்
வாட்டமில் வாழ்ந்துப் பின்னும் வளர்புவி காலன் நோக்க
சாட்டிடு, வன்னாடம்மின் சுமங்கலி வரமும் வேண்டி
வேண்டியே சாவித்திரிதானும் வெருப்பிலாயிறையோர் தம்மை
காண்டிடு விரதம் காத்து சுமங்கலி நோன்புமிருந்து
ஈண்டுமே வேட்டம் செய்ய, இறையவர் மெச்சிப் பின்பும்
ஆண்டுபல் நூறும்தானே அழியாத வாழ்வும் பெற்று
காண்டிடு விரதம் காத்து சுமங்கலி நோன்புமிருந்து
ஈண்டுமே வேட்டம் செய்ய, இறையவர் மெச்சிப் பின்பும்
ஆண்டுபல் நூறும்தானே அழியாத வாழ்வும் பெற்று
தலத்தின் மகிமையை விவரிப்பதுடன், சுமங்கலி எனும் இந்த ஊரை 'கற்புக்கோட்டம்’ என்றும் போற்றுகிறது காக புஜண்டரின் நாடி. ஆக, காமகோட்டம், குமர கோட்டம், கந்த கோட்டம் வரிசையில் புராணங்கள் புகழ்பாடும் மற்றொரு அரிய தலம் - சுமங்கலி!
Comments
Post a Comment