ஆதிக் கடவுளான விநாயகரை எப்படித் தரிசித்தாலும் அழகுதான்! பெரிய உருவமாக, சின்னவராக, நர்த்தன விநாயகராக, தொப்பியுடன் கிரிக்கெட் விளையாடும் விநாயகராகக் கூடக் கண்டு, ரசித்து வணங்கலாம். கோயில்களில் தங்கம் அல்லது வெள்ளிக் கவசங்களுடன், சந்தனக் காப்புடன், வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழியாக, சித்தி புத்தி சமேத விநாயகராக... எவ்வளவு வடிவங்கள்! மஞ்சள் அல்லது வெல்லத்தால் கூட விக்னேஸ்வரனை உருவகித்து ஆராதனை செய்யலாமே! எல்லோரும் எளிதில் அடைந்து வணங்கும் வண்ணம் ஆற்றங்கரைகளிலும், ஆல், அரசு மரங்களுக்கு அடியிலும் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டு எளிய பக்தர்களுக்கும் நெருக்கமான, இணக்கமான கடவுளாகத் திகழ்கிறார் தும்பிக்கையான்!இந்த வக்ரதுண்ட ஸ்வரூபனை மிகப் பெரிய உருவமாக ‘படா (பெரிய) கணபதி’ என்ற திருநாமத்துடன் மத்தியப் பிரதேசத்தில் நர்மதை நதிக்கருகில் தரிசித்தோம்.
ஜ்யோதிர்லிங்கத் திருத்தலமான மகா காளேஸ்வரர் ஆலயத்தின் அருகில் குடிகொண்டு இறையன்பர்களுக்கு வரப்பிரசாதியாக கோலோச்சுகிறார் ஸ்ரீவிக்னேஸ்வரர்! இந்தத் திருத்தலத்தின் முதன்மைக் கடவுள் கௌரீ புத்ரனான மூஷிக வாகனன்தான்!
சுமார் 20 அடி உயரத்துடன் மிகப் பெரிய சுதை வடிவம்! ஸ்ரீ சூர்ணம் தடவப்பட்டு செந்நிற வடிவத்தில் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறார் இந்த ஸ்ரீப்ரதாய கணபதி! இரண்டு பக்கமும் மிகவும் அழகான வடிவங்களாக சித்தியும், புத்தியும்! மை வடித்த விநாயகரின் கண்களில் மின்னும் அருளும் பிரகாசமும் சஞ்சலப்பட்ட மனதுடன் செல்லும் பக்தர்களுக்கு ஆறுதலும் இதமும் அளிக்கும் என்பது நிதர்சனம். சுதை வடிவ மூஷிக வாகனமும் உண்டு.
மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பிதஸுத்ர
வாமனரூப மஹேச்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
என்று இந்த படா கணபதியை மனதாரப் பிரார்த்தித்தோம். இந்த ஸ்லோகத்தில் வரும் வாமன ரூப (சிறிய வடிவம்) என்ற வார்த்தை இவருக்குப் பொருந்தவில்லை. ஆனால், சாமர கர்ண - முறம் போன்ற காதுகள் என்ற வார்த்தை மிகமிகப் பொருத்தம்.
இந்தக் கோயிலில் மாலை ஆரத்தி மிகவும் அருமையாக இருக்குமாம். நாங்கள் படா கணபதியைத் தரிசிக்கச் சென்ற நேரம் காலை 7.30 மணி அளவில்! மாலை ஆரத்தியின் போது கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு ‘ஜெய் கணேச பாஹிமாம், ஜெய கணேச ரக்ஷமாம்’ என்று கூடியிருக்கும் பக்தர்கள் ஒன்றாகக் குரலெடுத்து பாடுவார்களாம். மின்னும் சிவந்த உருவத்துடன் கூடிய விநாயகர் தீப ஒளி வெளிச்சத்தில் மின்னுவாராம். காணக் கண்கோடி வேண்டுமாம்!
இந்தக் கோயிலில் மற்ற தெய்வங்களும் கண்களை ஈர்க்கின்றன. வெண்கலச் சிலை வடிவமாக சுமார் நான்கு அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர்! மாருதியின் கண்களில் தெரியும் தீர்க்கம் நம்மை வியக்க வைக்கிறது. அழகாக வடிவமைக்கப்பட்ட 10 கைகள்! ஒவ்வொன்றிலும் ஒரு ஆயுதம். சிலையை வடித்த சிற்பியை மனதாரப் பாராட்டினோம். அஞ்சனா நந்தனை வணங்கினோம்.
அடுத்ததாக, ரிஷபாரூடனாக நஞ்சுண்ட கண்டனின் கைலாயக் காட்சி! கருங்கல்லால் ஆன அர்ச்சா மூர்த்தி! அடுத்தது, பல கைகளுடன் கூடிய துர்கா பரமேஸ்வரியின் கற்சிலை! தேவி, ரௌத்ர ரூபிணியாகக் கண்களை உருட்டிக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல், தனி உருவமாகக் கைகளைக் கட்டி நிற்கிறார் கங்காதரனாகிய சந்திரசூடன்! இதன் தாத்பர்யம் புரியவில்லை. அடுத்ததாக யசோதை, குழந்தையான மாயக் கண்ணனை நெஞ்சோடு அணைத்து பாலூட்டுவது போன்ற ஒரு கற்சிலை! ‘உலகளந்த பெருமாளை குழந்தையாகப் பெற்று பாலூட்டி, தாலாட்ட என்ன தவம் செய்தேன் நான்’ என்ற பெருமையும், தாயின் களங்கமற்ற அன்பும், யசோதையின் கண்களிலும் முகத்திலும் பிரதிபலிக்கிறது! இந்த அர்ச்சாவதாரத்தை தரிசிப்பதே மிகவும் புண்ணியம்.
தாமரை போன்ற அழகுடைய பூர்ண சந்திர நிபானனான கண்ணனையும், யசோதையையும் வணங்கினோம். அடுத்ததாக ஒரு காளியமர்த்தனக் காட்சி! கல் வடிவமாக ஐந்து தலை நாகமான காளியனின் தலைமேல் நடனக் கோலத்தில் நிற்கும் பால முகுந்தன்!
கண்ணனின் கண்களில்தான் என்ன மந்தகாசமும், குறும்பும்! அடுத்ததாக ஒரு வெள்ளி ஊஞ்சலில் அழகு கொஞ்சும் குழந்தையாக பாலகிருஷ்ணன்! நாமும் இந்த யாதவக் குலத்திலகத்தை தொட்டிலை ஆட்டித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயற்சிக்கலாம்!
‘படா கணபதி மந்திர்’ என்று குறிக்கப்பட்டாலும் இங்கு பல இறை வடிவங்களும் உள்ளன. சைவம், வைணவம், சாக்தம் என்று எதுவானால் என்ன? எல்லா இறைவடிவங்களும் நாம் ஆராதிக்கத்தான்; நமக்கு அனுக்ரகம் செய்யத்தான். எல்லாப் பெருமைகளுடன் கூடிய இறைவன் ஒருவனே! அவனே பரம்பொருள் என்று மனதில் தோன்றியது.
Comments
Post a Comment