ஓங்கார வடிவத்து உள்ளிருந்து உலகீன்ற உமையவள் ஆதிசக்தி பாங்காக மறை நான்கும் பரிமளித்துப் பல்லுயிர்கள் வாழப் பராமரித்து ஆங்காங்கே அறமுயரநெறி வளர அருள் சுரந்துரட்சிக்கும் கொப்புடையாளைநீங்காது நெஞ்சகத்தே வணங்கிடுவோர் நிகரில்லாச் செல்வத்தைப் பெறுவர்தாமே!_ சொக்கலிங்க அய்யா
இ ன்பங்களும் இன்னல்களும் இணைந்து, இயைந்து இருப்பதுதான் இவ்வுலக வாழ்க்கையின் இயல்பு.
துயர் களைந்து, துன்பம் துடைத்து, தூய வாழ்வு நெறியை அமைத்துக் கொள்ள என்றும் துணை புரிபவை தெய்வ நம்பிக்கையும் இறை வழிபாடுமே என்பது என்றென்றும் மாறாத சத்தியம். அதனால்தான் நம் ஆன்றோர், பல ஆலயங்களை அழகுற அமைத்துள்ளனர்.
அவற்றுள் அன்பு வடிவாக, அருள் உருவாகக் காட்சி தரும் அகிலத்தின் நாயகியான அன்னை ஆதிபராசக்தி, கோயில் கொண்டுள்ள திருத்தலங்கள் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் அரிய இடங்களாக அன்றும் இன்றும் என்றும் விளங்கி வருகின்றன.
அத்தகைய தலங்களுள் நெஞ்சையள்ளும் சிறப்புடைய கொப்புடைய நாயகி அம்மன் திருக்கோயிலும் ஒன்று. பாண்டிய நாடு முழுவதிலும் சக்தியின் சத்திய வடிவங்களை பக்தியுடன் பணிந்து வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
பைந்தமிழும் பக்தியும் தழைத்துச் சிறந்த பாண்டிய நாட்டில் பல்கலை வித்தகர்களும் பண்பாளர்களும் பல்கிப் பெருகிய பெருமைமிகு பகுதி _ நகரத்தார் நாடாகும்.
இந்தப் பகுதியின் இணையற்ற தலைநகராகவும், சீரும் செல்வமும் செந்தமிழ்ச் சிறப்பும் சேர்ந்தமைந்த திருநகராகவும் திகழ்வது காரைக்குடி. இந்த நகரின் நடுவில் அருள்மிகு கொப்புடை அம்மன், கோயில் கொண்டு அருள் புரிகிறாள். கொப்புடை அம்மனை கொப்பாத்தாள் என்றும் கொப்புடையாள் என்றும் கொப்புடைய நாயகி என்றும் அன்பர்கள் அழைத்து அக மகிழ்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்து வளர்ந்த காடுகள் நிறைந்து இருந்தன. நாளடைவில் காடுகள் அழிக்கப்பட்டு நகர்ப் பகுதிகளும், குடியிருப்புகளும் உருவாகத் தொடங்கின. காரை மரங்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட ஊர் ஆதலால், காரைக்குடி என்ற பெயர் இயல்பாகவே எழுந்து நிலைத்தது.
கூறு புகழ் கொண்ட கொப்புடைய நாயகி, காரைக்குடிக்கே உரிய கிராம தேவதையாவாள். காரைக்குடியின் தென்பகுதியில் சுமார் நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செஞ்சை சங்கராபுரம் என்னும் சிற்றூர். அவ்வூரில் கிராம தேவதையாகக் கோயில் கொண்டுள்ளவள் காட்டம்மன்.
காட்டம்மனுக்குத் தங்கை ஒருத்தி உண்டு. அவள்தான் கொப்புடையம்மன். இந்த கொப்புடையாள் பிள்ளைப்பேறு அற்றவள். ஆயினும், தன் சகோதரி காட்டம்மனின் ஏழு பிள்ளைகள் மீதும் பெரிதும் பாசம் கொண்டு அவர்களைப் பார்க்க அடிக்கடி வருவாள். அப்படி வரும்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகக் கொழுக்கட்டை போன்ற தின்பண்டங்களை ஆசை ஆசையாகச் செய்து கொண்டு வருவாள்.
மூத்தவள் காட்டம்மனுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. மலடியான தங்கை தன் பிள்ளைகளைப் பார்க்கக் கூடாது என்று அவள் நினைத்தாள். அதனால் தங்கை வரும்போதெல்லாம் குழந்தைகளை எங்காவது ஒளித்து வைக்கலானாள்.
கல் மனம் கொண்ட சகோதரி காட்டம்மனின் இந்தச் செயல் கொப்புடையம்மனுக்குப் பொறுக்கவில்லை. வருத்தமும் வேதனையும் அவளை வாட்டின. பற்றும் பாசமும் கொண்டால் வேதனையும் வாதனையும்தான் மிஞ்சும் என்பது அவளுக்குப் புரிந்தது. தாமரை இலைத் தண்ணீராக இருந்து விடுவது என்று தீர்மானித்தாள். பற்றறுத்து, துறவு நிலை பூண்டு... தனிமைத் தவம் புரிவது என்று தீர்மானித்தாள். காட்டம்மனின் கானகக் குடிலில் இருந்து ஒரேயடியாக விலகி வந்தாள். அப்படி விலகி வந்தவள் விரும்பித் தேர்ந்தெடுத்துக் குடியேறிய இடமே காரைக்குடி!
வேறொரு செவிவழிச் செய்தி, சற்று வித்தியாசமான தகவலைச் சொல்கிறது. அந்தக் காலத்தில் இங்கு ஆட்சி செய்த அரசன் ஒருவன் காட்டம்மன் மீது அளவில்லா அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் அம்மனை முறைப்படி வழிபட்டுத் தன்னுடைய அன்றாட வரவு- செலவுகளையும், மற்ற விஷயங்களையும் காட்டம்மனிடம் ஒப்புவித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
முகலாயர் ஆட்சியின்போது, அவர்களிடம் இருந்து காட்டம்மனின் தெய்வத் திருவுருவைப் பாதுகாக்க நினைத்தான் அரசன். எனவே, செஞ்சை சங்கராபுரத்தில் இருந்த காட்டம்மன் கோயில் உற்சவ விக்கிரகத்தை, அன்றாட வழிபாடுகள் முடிந்த பிறகு ஒரு முதிர்ந்த வேப்ப மரத்தடியில் இருந்த பெரிய பொந்தில் மறைத்து வைத்தான். இதைப் பத்திரமாகக் கவனித்துப் பராமரிக்கும் பொறுப்பைத் தனக்கு நம்பகமானவர்களிடம் ஒப்படைத்திருந்தான்.
மரப் பொந்தில் இருந்த காட்டம்மனை, மாடு மேய்க்கும் இடையர் குலத்தைச் சேர்ந்த சிலர் கண்டெடுத்து, அதை செஞ்சை சங்கராபுரத்தில் ஒரு மகிழ மரத்தடியில் வைத்துப் பூஜைகள் புரிந்து வந்தனர். காரைக்குடி நகர் நன்றாக விரிவடைந்து வளர்ச்சியடைந்த பிறகு அந்தச் சிலையை இப்போதுள்ள இடத்தில் நிறுவினர். இப்படி, ‘ஒப்படை’ செய்யப்பட்டதால் ‘ஒப்படையாள்’ என்ற பெயர் உண்டானதாக உரைக்கப்படுகிறது. இதுவே, நாளடைவில் மருவி மாற்றங்கள் அடைந்து ‘கொப்புடையாள்’ என ஆனதாகவும் நம்பப்படுகிறது.
அன்னையின் பெயர் குறித்து இலக்கியவாதிகள் இயம்பும் இனிய தகவல் ஒன்று உண்டு. ‘கொப்பு’ என்பது மகளிர் அணியும் காதணிகளில் ஒரு வகை. ‘இந்த அம்மன் காதில் கொப்பை அணிந்திருப்பதால் கொப்புடைய நாயகி என்று கூறப்படுகிறாள்’ என்பது அவர்கள் தரும் விளக்கம்.
காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கூடிய எடுப்பான எழில் தோற்றத்துடன் இலங்குகிறது.
அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’ சோபையுடன் காட்சி தருகிறது.
இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள் புரிகிறான்.
மண்டபத்தில் தூண்கள் நல்ல வேலைப்பாடுடனும், சீரிய சிற்பங்களுடனும் சிறப்புற அமைந்துள்ளன.
கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் கன்னிமூல கணபதியைக் காணலாம். மற்றும் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
உள் பிராகாரத்தில் வள்ளி- தெய்வானையுடன் உவந்தருள் செய்கிறார் சுப்பிரமணியர். எதிரே பைரவர் சந்நிதி.
ஒப்பிலா நாயகி, உலகேழும் காக்கும் கருணைக் கடல், செப்பரும் சிறப்புடைய செல்வி, இப்பிறவித் துன்பத்தால் துயருறும் மாந்தர்க்குத் தப்பாமல் தயங்காமல் அருள் புரியும் தாய், கொப்புடை அம்மனாகக் கருவறையில் கிழக்கு நோக்கிக் கனிவுடன் காட்சி தருகிறாள்.
நின்ற திருக்கோலத்தில், நீள் கரங்கள் நான்குடனும் சுடர் வீசிப் பிரகாசிக்கும் சுவாலைக் கிரீடத்துடனும் கம்பீரமாக விளங்கும் அன்னையின் சுந்தரத் தோற்றத்தைச் சொற்களால் வர்ணிக்க இயலாது.
வலது முன்கை, அஞ்சிடும் அடியவர்க்கு அபயம் அளித்து ஆறுதல் அருள்கிறது. வலது மேல் கை, தீமைகளை வேருடன் தோண்டிக் களையும் சூலத்தைச் சுமந்துள்ளது. இடக் கைகள் பாசத்தையும் கபாலத்தையும் ஏந்தியுள்ளன.
காணத் தெவிட்டாத அன்னையின் திருவுருவம் பஞ்ச லோகத்தால் ஆன உற்சவத் திருமேனியாகும். இதுவே மூலவராக, முழு முதல் தேவியாகத் திகழ்வது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு.
‘கொப்பு’ என்பதற்கு ‘கிளை’ என்ற பொருளும் உண்டு. கிளையாகிய ‘கொப்பே’ மூலவராக, அருள் நிழல் பரப்பும் கற்பக மரமாக, கொப்புடையாளாக அமைந்திருப்பது அளவில்லா ஆனந்தம் அளிக்கும் அதிசயமும் அற்புதமும் ஆகும்.
குழந்தை வரம் வேண்டுவோர், இந்தக் கோயிலில் கரும்பினால் ஆன தொட்டில்களைக் கட்டுகின்றனர். சித்திரைத் திரு விழாவின்போது கோயில் அருகே தொங்க விடப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கரும்புத் தொட் டில்கள், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு காட்சி மட்டு மல்லாமல், கொப்புடையாள் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தெரிவிக்கும் ஒரு சான்றும் ஆகும்.
கொப்புடைய அம்மன் கோயிலின் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர், பனைமரச் சட்டங்களால் உருவாக்கப்பட்டது.
இந்தப் பனை மரச் சட்டங்கள், காட்டிலிருந்து கொண்டு வரப்படும் தையிலான் கொடி என்னும் ஒரு வகைக் கொடியால் இணைத்து முறுக்கேற்றிக் கட்டப்படும்.
தேரானது கொப்புடைய அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கண்மாய் வழியாக காட்டம்மன் கோயிலுக்குச் செல்லும். பின் அங்கிருந்து மீண்டும் கண்மாய் வழியே காரைக்குடி வந்து நிலை சேரும்.
திருத்தேர் எழுந்தருளும் பாதை கண்மாய் பகுதியாக இருப்பதாலும், சில சமயங்களில் கண்மாயில் நீர் இருந்தால், நீரில் செல்ல நேர்வதாலும் முன்னோர்கள் சட்டத்தால் ஆன தேராகவே செய்துள்ளனர்.
கரடுமுரடான பாதையில் கண்மாய்க்குள் செல்லும்போது ஏற்படும் ஆட்டத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இயற்கையான தையிலான் கொடியைக் கொண்டு சட்டங்களை இணைத்துக் கட்டி அமைத்தனர் நம் முன்னோர்.
காரைக்குடி பகுதியில் உள்ள வேறு சில ஊர்களிலும் கொப்புடை நாயகி என்ற இதே பெயரில் அன்னை அருள் பாலித்து வந்தாலும், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மனே பெரும் சிறப்பையும் பக்தர்களின் மனதில் பிரியமான இடத்தையும் பெற்றுத் திகழ்கிறாள்.
காரைக்குடியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் உள்ள தேவதைகளைக் கொப்புடைநாயகியின் உடன்பிறப்புகளாகக் கூறும் ஒரு வழக்கமும் இங்கு உள்ளது!
Comments
Post a Comment