மாவடியில் மகேஸ்வர தரிசனம்..!

பித்தன் என்று சுந்தரரால் அழைக்கப் பெற்றாலும்கூட, அவரிடம் கோபம் சிறிதும் கொள்ளாத கருணை மனம் கொண்டவர் சிவபெருமான். அதனால்தான் சுந்தரரை ஆட்கொண்டதுடன், அவருக்காகக் காதல் தூதும் சென்றார் நம் ஐயன். அதுமட்டுமா, பிற்காலத்தில் பார்வையை இழந்துவிட்ட சுந்தரருக்கு, அவருடைய இரண்டு கண்களில் இடது கண்ணுக்குப் பார்க்கும் சக்தியை வழங்கி அருள் புரியவும் செய்தார். (அவருடைய வலது கண்ணுக்கு பார்க்கும் சக்தியை திருவாரூரில் வழங்கி அருளினார்) அப்படி, சிவபெருமான் சுந்தரருக்கு ஒரு கண் பார்வையை வழங்கி அருளிய திருத்தலம்தான், முக்தி தரும் நகரேழில் முதன்மை பெற்ற நகரமான காஞ்சி மாநகரம்.
இந்த நகரத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சிறப்பு? நிலம்பிருத்வி, நீர்அப்பு, நெருப்புஅக்னி, காற்றுவாயு, ஆகாயம்வெளி என்ற பஞ்ச பூதங்களின் நாயகராம் சிவபெருமான், பிருத்வி லிங்கமாய் எழுந்தருளியதால்தான் அந்த நகரத்துக்கு அப்படி ஒரு தனிச் சிறப்பு! அங்கே அவர் பிருத்வி லிங்கமாய் எழுந்தருளுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது?
அங்கேதான் அம்பிகையின் தனிப்பெரும் தாயன்பின் மகத்துவம் நமக்குப் புரியவருகிறது. உலக மக்களாகிய நம்மிடத்தே அம்பிகை கொண்டிருக்கும் அந்த மகத்தான அன்பானது, அவளை நம்மையெல்லாம் பார்க்கும்படி தூண்டுகின்றது. அந்தத் தூண்டுதலின் விளைவாக, அவள் சிவபெருமானின் கோபத்துக்கும் சாபத்துக்கும் தன்னை ஆளாக்கிக்கொண்டு, இந்த பூமியில் வந்து தோன்றுகிறாள். நம்மை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவள் பூமிக்கு வந்ததுமே, அவள் மனதில் மற்றுமோர் ஆசையும் ஏற்படுகின்றது. ஐயனும் இங்கே வந்துவிட வேண்டும்; வந்து நம் எல்லோருக்கும் அருள் புரியவேண்டும் என்ற ஆசைதான் அது.
ஐயன் சிவபெருமானும் பூமியில் எழுந்தருள வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்திக்கொண்டு தவம் இயற்றத் தொடங்கிவிடுகிறாள் அம்பிகை. முதலில் மாங்காட்டிலும், தொடர்ந்து மற்றுமொரு திருத்தலத்திலும் தவம் இயற்றத் தொடங்குகிறாள். அப்படி அம்பிகை தவம் இயற்றிய மற்றுமொரு புனிதபூமிதான் இந்தக் காஞ்சி திருத்தலம்! அதனாலேயே காஞ்சி திருத்தலத்துக்கு தனிச் சிறப்பு சேர்ந்துவிட்டது.
ஐயனின் வரவும் தரிசனமும் வேண்டி, கம்பா நதிக்கரையில் அம்பிகை மணலால் லிங்கம் அமைத்து, ஐயனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கிய வேளையில், கதிரவனின் வெங்கதிர்கள் அம்பிகையைத் தகிக்கக்கூடாதே என்று எண்ணியதுபோல், நான்கு வேதங்களே நான்கு கிளைகளாகப் படர்ந்து விரிந்த மாமரமாகத் தோன்றி, அன்னைக்குக் குளிர்நிழல் தந்தன. அந்த மாமரத்தின் அடியில் தவம் இயற்றிய அம்பிகையைப் பலவகையிலும் சோதித்துப் பார்த்த சிவபெருமான், ஒரு கட்டத்தில் அம்பிகை மணலால் அமைத்த லிங்கத் திருவுருவை அடித்துச் செல்லும்படியாக கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். எங்கே வெள்ளம், தான் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருவுருவை அடித்துச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் அம்பிகை தான் அமைத்த அந்த லிங்கத் திருவுருவைத் தன் இரு வளைக் கரங்களால் தழுவ, அதுதான் சமயம் என்று காத்திருந்ததுபோல் மனம் குழைந்து மகிழ்ந்த சிவபெருமான் அம்பிகைக்குக் காட்சி தந்து அருளினார். இதனையே சுந்தரர், 'தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பன்’ என்கிறார். இங்கே இறைவன் ஒற்றை மாமரத்தின் அடியில் தோன்றியபடியால், இறைவனுக்கு ஏக்ஆமரம், அதாவது ஏகாம்பரம் என்ற திருநாமமும் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி, இறைவன் மாமரத்தின் அடியில் அம்பிகைக்கு தரிசனம் தந்து அருளியதை நினைவுகூர்வதுபோல், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின் 9வது நாள், 'மாவடி சேவை’ என்ற வைபவம் நடை பெற்று வருகிறது. அந்த மகத்தான வைபவத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையில், இதோ காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நாம்!
நாம் கோயிலுக்குள் செல்லும் போதே, முதல் பிராகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெள்ளிச் சப்பரம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அந்தச் சப்பரத்தின் நடுவில் வெள்ளியினால் ஆன மாமரம் அமைக்கப்பட்டிருக்க, அந்த மரத்தில் அப்போதுதான் பறித்து வந்த மாவிலை களைக் கட்டிக் கொண்டிருந்தனர். தூரத்தில் இருந்து பார்த்தால், வெள்ளிச் சப்பரத்தில் ஒரு மாமரம் தோன்றியதுபோல் காணப் பட்டது. அந்த அளவுக்கு நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தனர். நாம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெடிச் சத்தம் கேட்கவே, பக்கத்தில் இருந்த அன்பரிடம் விவரம் கேட்டோம். சுவாமிக்கு அபிஷேகம் தொடங்கியதற் கான அறிவிப்பு தான் அந்த வெடிச் சத்தம் என்று அவர் சொல்லவும், அபிஷேகத்தை தரிசிக்க ஆலயத்துக்குள் செல்கிறோம்.
அபிஷேகம் நடைபெறும் மண்டபத்துக்குள் செல்லும் வழியில்,  ஒரு கண்ணாடிப் பெட்டகத்துள் பெரியதொரு மரத்தின் ஒரு பகுதியும், அதன் அருகில் சிவலிங்கத்தை அம்பிகை தழுவுவது போன்ற ஒரு வண்ணச் சிற்பமும் இருந்ததைக் கண்டோம். அதுபற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, அபிஷேகத்தை தரிசித்துவிடலாமே என்று மண்டபத்துக்குள் சென்றோம். அங்கே உற்ஸவ மூர்த்தங்களுக்கு விபூதி அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் அங்கே அபிஷேகத்தைக் கண்ணார தரிசித்துக் கொண்டிருந்தனர்.
மாலை 6.00 மணி அளவில் ஸ்வர்ணாபி ஷேகத்தைத் தொடர்ந்து கலச அபிஷேகத்துடன் அபிஷேகங்கள் நிறைவுபெற்றதும், பஞ்ச மூர்த்தங்களுக்கும் அலங்காரம் செய்வதற்காகத் திரை போடப்பட்டது. நாம் பிராகாரத்தை வலம் வர, மாவடி 'செல்லும் வழி’ என்பதாக ஓர் அறிவிப்பு நம்முடைய பார்வையில் படவே, நாம் மாவடியை நோக்கிச் சென்றோம். சற்றே உயரமான ஓர் இடத்தில் மாமரம் ஒன்று செழித்து வளர்ந்திருக்க, அதன் அடியில் அம்மையப்பரின் தரிசனம் நம் கண்ணையும் மனதையும் நிறைக்கிறது. யுகயுகாந்தரங்களுக்கு முன்னால், அந்த இடத்தில்தான் அம்பிகைக்கு ஈசன் தரிசனம் தந்து அருளினாராம்! செழித்து வளர்ந்திருந்த அந்த மாமரத்தைப் பார்த்து பக்தர்கள் பூரித்துப் போகின்றனர். வேதங்கள் நான்கின் வடிவம் அல்லவா அந்த மாமரம்?! பூரிப்பு ஏற்படத்தானே செய்யும்?! மாவடி தரிசனம் முடித்து, திரும்பவும் அபிஷேக மண்டபத்துக்கு வருகிறோம். அங்கே இன்னும் அலங்காரம் முடிந்தபாடாக இல்லை. அப்படி என்னதான் அலங்காரம் செய்கிறார்களோ என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.பக்தர்களின் முகங்களில், 'அலங்காரம் எப்போது முடியும், ஐயனின் தரிசனம் எப்போது கிடைக்கும்?' என்பதாக ஓர் எதிர்பார்ப்பு இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது திரையை விலக்கிக் கொண்டு வெளியில் வந்த ஒருவரிடம், அலங்காரம் எப்போது முடியும் என்று கேட்டதற்கு, அவர் சுமார் ஒருமணிநேரம் ஆகும் என்று சொல்லவே, அதற்குள் நாம் கண்ணாடிப் பெட்டகத்துக்குள் பார்த்த மரத்தின் பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்து, அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த கோயில் மணியம் ராஜேந்திரன் என்பவரிடம் விவரம் கேட்டோம்.

''நீங்கள் பார்த்த அந்த மரத்தின் பகுதி, சுமார் 3000 வருஷங்களுக்கு முந்தையதாகும். அந்த மரத்தின் அடியில்தான் சிவபெருமான் தவக்கோலத்தில் இருந்த அம்பிகைக்கு தரிசனம் தந்ததாக தலபுராணம் சொல்கிறது. அந்த மரத்தை பிரதட்சிணம் செய்து, அம்மையப்பரை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலப்போக்கில் அந்த மரம் பட்டுப்போகவே, வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் பழைய மரத்தின் மரபணுக்களைக் கொண்டு ஒரு புதிய மரத்தை உருவாக்கினோம். இன்றைக்கு அது தழைத்துச் செழித்து வளர்ந்திருப்பதைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்களே!'' என்றவர் தொடர்ந்து, ''பட்டுப்போன அந்த மரத்தின் ஒரு பகுதியைத் தான் பொக்கிஷம்போல் அந்தக் கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறோம்'' என்றார்.
அவரிடம் வெள்ளி மாவடி சேவை பற்றி விவரம் கேட்டபோது, அந்த வைபவத்தை உபயதாரர்களாக இருந்து நடத்திவரும் காஞ்சிபுரம் காந்தி சாலை ஜவுளி வியாபாரிகள் சத்திர தரும பரிபாலன மகிமை சங்கத்தின் தலைவரான பா.ஷண்முகம் என்ற பெரியவரிடம் நம்மை அறிமுகப்படுத்தி, நாம் கேட்கும் விவரங்களைச் சொல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
''இந்தக் கோயிலில் சிவபெருமான் அம்பாளுக்கு மாமரத்தின் அடியில் தரிசனம் தந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில், வருஷம்தோறும் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவத்தின்போது, 9வது நாள் திருவிழாவில் இந்த வெள்ளி மாவடி சேவை வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தை சுமார் 100 வருஷத்துக்கும் மேலாக எங்கள் சங்கத்தின் சார்பில்தான் நடத்திவருகிறோம். ஆரம்ப காலங்களில் மரத்தால் ஆன மாவடி சேவைதான் நடைபெற்று வந்தது. சுமார் 70 வருஷத்துக்கு முன்புதான் வெள்ளி மாவடி சேவை தொடங்கியது. அதுமட்டுமல்ல, இந்தக் கோயிலின் முதல் வெள்ளி வாகனம் இந்த மாவடி சேவைதான். வெள்ளித் தேர் எல்லாம் பிறகுதான் வந்தது!'' என்று பெருமிதத்துடன் கூறினார் பா.ஷண்முகம். தான் தலைவராக இருக்கும் சங்கத்தின் உபயத்தில் நடைபெறும் வெள்ளி மாவடிதான் கோயிலின் முதல் வெள்ளி வாகனம் என்ற பெருமிதம் அவருக்கு!
அவரிடம் பேசி முடிக்கவும், அலங்காரம் முடிந்து தீபாராதனை நடைபெறப் போவதாக ஒருவர் வந்து அவரிடம் சொல்லவே, அவர் நம்மிடம் விடைபெற்றுக்கொண்டு மண்டபத்தை நோக்கிச் சென்றார். நாமும் மண்டபத்துக்கு விரைந்தோம். நாம் அங்கே செல்லவும், திரை விலகவும் சரியாக இருந்தது. மண்டபம் முழுக்க மல்லிகை மணம் கமழ்ந்தது. சுவாமிக்கும் அம்பிகைக்கும் மற்றுமுள்ள மூர்த்தங்களுக்கும் விதம்விதமான ஆபரணங்களுடன் பெரிய பெரிய மாலைகளும் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டபோது, அலங்காரத்துக்கு அத்தனை நேரம் ஆனதில் ஆச்சரியம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு அலங்காரம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது.
தீபாராதனை முடிந்து, சுவாமி புறப்பாடு தொடங்கிவிட்டது என்பதை அறிவிப்பதுபோல் கோயிலுக்கு வெளியில் வெடிச் சத்தம் கேட்டது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்தெல்லாம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தல விசேஷ மகிமையை உணர்த்தும் அந்த வெள்ளி மாவடி சேவை வைபவத்தைத் தரிசிக்கத் திரண்டி ருந்தனர். மண்டபத்தில் இருந்து புறப்பாடு கண்ட பஞ்சமூர்த்தியரும், பக்தர்கள் கூட்டத்தின் இடையில் மெள்ள மெள்ள ஊர்ந்து வந்து, வெள்ளி மாவடி வாகனம் இருந்த மண்டபத்தை அடையவே சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது.
வெள்ளி மாவடி நிறுத்தப்பட்டிருந்த மண்டபத்தின் அருகில் இருந்த காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திர தரும பரிபாலன மகிமை சங்கத்தின் செயலாளரான சிவகுமாரன் என்பவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவாமி புறப்பாடு எப்போது தொடங்கும் என்றும், இந்த வைபவத்தின் உபயதாரராக இருப்பதுடன், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அவர்களுடைய சங்கத்தின் சார்பில் ஏதேனும் உதவிகள் செய்யப்படுகிறதா என்றும் கேட்டோம்.
''சுவாமி புறப்பாடு தொடங்குவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும். நான்கு ராஜ வீதிகளையும் வலம் வந்து கோயிலை அடைவதற்கு எப்படியும் நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். அதுவரை பக்தர்கள் தூங்காமல் இருந்து, வெள்ளி மாவடியில் இறைவன் வலம் வரும் அழகை தரிசித்த பிறகுதான் கிளம்பிச்செல்வார்கள். இந்த வைபவத்தை தரிசிக்க வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களுக்காக எங்கள் சங்கத்தின் சார்பில் அன்னதானத்துடன் பானகம், நீர்மோர், தண்ணீர் போன்றவற்றையும் வழங்கி வருகிறோம். இந்தக் கோயிலில் மட்டும் இல்லாமல், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற மற்றும் பல கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் உபயதாரர்களாக இருந்து நடத்தி வருகிறோம். எங்கள் சங்கத்தின் அங்கத்தினர்கள் அத்தனை பேருமே மிகுந்த அர்ப்பணிப்பு உணர் வுடன் தங்களின் பங்களிப்பைத் தந்து வருவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்'' என்றார் சிவகுமாரன்.
அவர் சொல்லி முடிக்கவும், சுவாமி புறப்பாடு தொடங்குவதற்கான வெடிச் சத்தம் முழங்கவும் சரியாக இருந்தது. பக்தர்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையில், ஏலவார்க்குழலி அம்பிகை சமேதராக ஏகாம்பரேஸ்வரரின் மாவடி சேவை கோயிலில் இருந்து புறப்பாடு ஆனது. அந்த உன்னதமான காட்சியை கோயில் வாசலில் இருந்து தரிசித்த நம் மனதில்...
'கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சிதன்னுள்...’ என்று சம்பந்தப் பெருமானும், 'சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் இல்லானை...’ என்று நாவுக்கரசர் பெருமானும் பாடிப் பரவிய, ஏலவார்க்குழலி அம்பிகை சமேத அந்த ஏகம்பரநாதனின் எழிலார்ந்த திருக்கோலம் நீக்கமற நிறைந்து, நிலைத்த நிம்மதியை நமக்கு அருளியது. அந்த நிம்மதியுடனே அந்தத் திருத்தலத்தில் இருந்து கிளம்புகிறோம்.

Comments