வைத்தமாநிதி

அரங்கன், ஆராவமுதன், பக்தவத்சலன், புருஷோத்தமன்... என்று, எம்பெருமானுக்கு எத்தனை யெத்தனையோ திருநாமங்கள். என்றாலும், அரவணையில் பள்ளிகொண்ட அவன் ‘வைத்தமாநிதி’ என்கிற அபூர்வமான திருநாமத்துடன் தரிசனம் அளிக்கும் திருத்தலம் திருக்கோளூர். ஏன் இந்தத் திருநாமம்?
செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான குபேரனின் செல்வம் ஒருமுறை காணாமல் போய்விட்டது. எல்லோருக்கும் கொடுப்பவனுக்கே ஒன்றுமில்லாத சூழ்நிலை. தடுமாறிய நிலையில் இருந்த அவனிடம், “குபேரா, உன்னுடைய செல்வம் இந்தப் பெருமாளிடம் இருக்கிறது. அவரைப் பார்த்து பெற்றுக்கொள்” என்று கோள் சொல்லியது அதர்மம். அதனாலேயே இத்தலத்துக்கு ‘திருக்கோளூர்’ என்றும், பெருமாளுக்கு ‘வைத்தமாநிதி’ என்றும் பெயர்கள் அமைந்ததாகத் தல புராணம்.
எம்பெருமானுக்குரிய 108 திவ்ய தேசங்களில் இது 87வது திவ்ய தேசம். நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும்.
‘தேவு மற்றறியேன்’ என்று, நம்மாழ்வாரையே பெருமாளாகப் பாவித்திருந்த மதுரகவியாழ்வார் அவதரித்தத் திருத்தலம் இது. இந்தத் திருக்கோளூர் எம்பெருமானிடம் நம்மாழ்வார் மிகப்பெரும் பற்றுக் கொண்டிருந்தார். அதனாலேயே பாடுவார்:
‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இளமான் புகுமூர் திரு கோளூரே’
என்று. ஆழ்வார் வாக்காக அமைந்ததால், ‘புகுமூர்’ என்றும் திருநாமம் கொண்டது திருக்கோளூர். இந்தத் தலத்துக்கு உடையவர் ராமானுஜர் வந்தபோது, எதிர்ப்பட்டாள் ஒரு பெண். அவளிடம், “எல்லோருக்கும் புகுமூராக இருக்கும் இந்த ஊர் உனக்குப் புறப்படும் ஊரானது ஏன்?” என்று கேட்டார் உடையவர். அதற்கு, “நான் முயல் புழுக்கை. வயலில் கிடந்தால் என்ன? வரப்பில் கிடந்தால் என்னா?” என்று பதில் சொன்ன அந்தப் பெண், அடுத்து 81 வார்த்தைகளைச் சொன்னாள். ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்றே அந்நூல் புகழப்படுகிறது.
இப்படிப் பல்வேறு பெருமைகளைக் கொண்ட திருக்கோளூரில் புஜங்க சயனராக சேவை சாதிக்கிறார் வைத்தமாநிதி பெருமாள். வடமொழியில் நிஷோபவித்தன்.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார். இக்கோலம் உணர்த்தும் பொருள் உலகனைத்துக்கும் படியளப்பவன் நானே என்பதா? அல்லது நவநிதி கொண்ட குபேரனுக்கே படியளந்தவன் என்கிற நுட்பமா? தரிசித்த மாத்திரத்தில் மனத்தில் எழுகின்ற கேள்வி இது.
ஆனால், அதையடுத்துத் தோன்றுகிறது இன்னொரு செய்தி, ‘எதிலும் அளவோடு இரு, அளவு கடந்த எதுவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற தெளிவோடு இரு’ என்கிற உபதேசத்தையும் அந்த மரக்கால் உணர்த்துவதாகத் தோன்றுகிறது.
குமுதவல்லி தாயார் நான்கு திருக்கரங்களுடன் - மேல் இரு கரங்கள் தாமரை மலரைத் தாங்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்களாக அமைந்து, அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோளூர் வல்லித் தாயார் என்று இன்னொரு தாயாரும் இங்கு அருள்பாலிக்கிறார்.
விமானத்துக்கு ‘ஸ்ரீகர விமானம்’ என்று பெயர். தாமிரபரணி மற்றும் குபேர தீர்த்தம் ஆகியவை புனித தீர்த்தங்கள். நவக்கிரக தோஷங்கள் நீங்க இப்பெருமாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தியும், அர்ச்சனை செய்தும் வழிபடுகின்றனர்.
செல்லும் வழி
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கி.மீ. திருநெல்வேலி, திருச்செந்தூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு : +91 4639 273 607.
ஆவணி மாதம் நடைபெறும் புனர்பூசத் திருவிழாவின் பத்தாம் நாள் தேரோட்டத்துக்கு முன்பு, நம்மாழ்வார் திருக்கோளுர் எழுந்தருள்கிறார். அப்போது தமது குருவை சீடர் மதுரகவியாழ்வர் எதிர்கொண்டழைத்து வழிபடுவதை இன்றும் காணலாம். அன்று நம்மாழ்வாருக்கு வீணை மோகினித் திருக்கோலம் சாத்துகிறார்கள்.

Comments