குல தெய்வமும், காவல் தெய்வமும்!

இன்றைக்குப் பலருக்கும் பலத்த ஒரு சந்தேகம் உண்டு. குலதெய்வம் என்றால் என்ன? காவல் தெய்வம் என்றால் என்ன? குலதெய்வமும், காவல் தெய்வமும் ஒன்றா அல்லது வேறு வேறா?
குலம் தழைக்க வேண்டும் என்றால், குலதெய்வத்தைக் கும்பிட வேண்டுமா? அல்லது காவல் தெய்வத்தைக் கும்பிட வேண்டுமா?
காவல் தெய்வத்தைக் கும்பிட்டால், குலதெய்வம் கோபித்துக் கொள்ளுமா? இப்படி சந்தேகங்களுக்கு அளவே இல்லை.
எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும், வேறு எந்த ஒரு தெய்வமும் கோபித்துக் கொள்வதில்லை. தெய்வங்கள் எல்லாமே சக்தியின் அம்சம். மனித குலத்தை மேம்படுத்துவதற்காக வந்த அவதாரங்கள்.
சரி... விளக்கத்துக்கு வருவோம்.
நம் சந்ததியினரை - அதாவது பரம்பரையைத் தொன்றுதொட்டுக் காத்து வருவதுதான் குலதெய்வம். ‘என்னை முழுக்க நம்பி சரண் புகுந்துவிட்ட இந்தக் குடும்பங்களைக் காப்பது என் தலையாய கடமை’ என்று தன்னை வணங்குகிற குடும்பத்தின் மீது தன் கருணைப் பார்வையைச் செலுத்தி ஆசிகளை வழங்கும் குலதெய்வம். ஒரு குலம் தழைக்க உதவுவது பெண்கள்தான். அதாவது குடும்பத் தலைவிதான். எனவேதான் குலதெய்வம் என்றாலே, பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். அதே சமயம் சில குடும்பங்களுக்கு ஐயனார், முனீஸ்வரர், முருகப் பெருமான் என்று சில ஆண் கடவுள்களும் குலதெய்வங்களாக இருந்து வருவது வழக்கம். காவல் தெய்வங்களாக இருக்கும் முனீஸ்வரன், ஐயனார் போன்ற தெய்வங்கள் சிலருக்கு குலதெய்வங்களாகவும் இருக்கலாம்.
நம் மூதாதையர்கள் எத்தனையோ ஆண்டுகளாகத் தங்கள் குலதெய்வங்களுக்குச் செய்து வருகின்ற வழிபாடுகளை எந்தக் காலத்திலும் நாம் விட்டு விடக்கூடாது. குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று, என்ன முறைப்படி அந்தத் தெய்வத்தை வணங்க வேண்டுமோ அதன்படி வணங்கிவிட்டு வரவேண்டும். அதாவது வஸ்திரம் சார்த்துவது, மாவிளக்குப் போடுவது, விசேஷ படையல் போடுவது, அன்னதானம் செய்வது என்று என்னென்ன சம்பிரதாயங்கள் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவோ, அதன்படி செய்யவேண்டும்.
குலதெய்வக் கோயிலுக்கு எப்போதாவது ஒரு முறைதான் போவோம். ஆனால், காவல் தெய்வத்தின் தரிசனம் அடிக்கடி நமக்குக் கிடைக்கலாம்.
எல்லா குடும்பங்களுக்கும் ஒரே ஒரு தெய்வம் தான் குலதெய்வமாக இருக்கும். ஆனால், காவல் தெய்வம் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம். காவல் தெய்வத்தின் பரிபூரண ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், குலதெய்வ வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் காவல் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்.
காவல் தெய்வம் என்பது நம்மைக் காத்து வருகின்ற ஒரு தெய்வம். காவல் தெய்வம், நாம் வசித்து வருகின்ற பகுதியில் இருக்கின்ற கடவுளாகக் கூட இருக்கலாம். இப்படி அமைந்துவிட்டால், காவல் தெய்வங்களை அடிக்கடி தரிசிக்கின்ற பேறு நமக்குக் கிடைக்கும். கிராமங்களில் வசித்து வருபவர்களுக்கு அவர்கள் வணங்கி வருகின்ற காவல் தெய்வங்கள் ஊர் எல்லையில் - ஏதேனும் ஒரு வயல்மேட்டில் அமைந்திருக்கும். வயலுக்குப் போகிற போக்கில் அந்த தெய்வத்துக்கு ஒரு ‘அட்டென்டென்ஸ்’ போட்டு விட்டுத்தான் தங்கள் வேலைகளைத் துவங்குவார்கள்.
காவல் தெய்வங்கள் என்றாலே பெரிய மீசை வைத்துக் கொண்டு, அரிவாள் தூக்கிக் கொண்டு, குதிரை, நாய் போன்ற வாகனங்களை வைத்துக் கொண்டிருக்கிற தெய்வங்கள் நம் நினைவுக்கு வரும். ‘காவல்’ என்றாலே அதற்குண்டான ஆயுதங்கள் தேவைதானே!
பெரும்பாலான ஊர்களில் காவல் தெய்வங்கள் குடி கொண்டதற்கு ஒரு பூர்வ கதை இருக்கும். அந்தக் கதைகள் பெரும்பாலும் யாரேனும் ஒரு தனி நபர் (ஆண் அல்லது பெண்) வஞ்சிக்கப்பட்ட தாகவோ, அல்லது ஒரு குடும்பத்தினர் பிறரால் துன்புறுத்தப் பட்டதாகவோ இருக்கும். பின்னாளில் அந்த தனி நபரோ அல்லது குடும்பமோ தெய்வமாகி, பிறரால் வணங்கப்படும் வழக்கம் வந்திருக்கலாம். இப்படித்தான் பல கிராமங்களில் குடி கொண்டிருக்கும் காவல் தெய்வங்களின் கதை அமைந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால், காவல் தெய்வங்களுக்கு கருணையும், அன்பும்தான் தெரியும். ஒரு காலத்தில் மனிதனாக இருந்து தெய்வமாக இன்று குடிகொண்டு அருள்பாலித்து வருகின்றன என்பதால், ஒரு குடும்பத்தில் இருக்கிற கஷ்ட நஷ்டங்கள் தெரியும். அதனால்தான், தன்னை நம்பியவர்களை, அவர்கள் சின்னச் சின்ன தவறுகள் செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொண்டு, அவர்களை எப்படியேனும் கைதூக்கி விடுகின்றன காவல் தெய்வங்கள்.
காவல் தெய்வங்கள் குடி கொண்டுள்ள கிராமப் புறத்து ஆலயங்கள் எல்லாம் பெரும்பாலும் விமரிசையாக இருக்காது. பிரதான வழிபாட்டில் இருக்கும் தெய்வம், ஏதோ ஒரு மூலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் குடி கொண்டிருக்கும். அங்கே போதுமான வசதிகள் இருக்காது. இந்த தெய்வத்தை பூஜிக்கும் பூசாரி எப்போது ஆலயத்துக்கு வருவார் என்று சொல்ல முடியாது. தினமும் பக்தர்கள் கூட்டமும் இருக்காது.
அதேநேரம் விசேஷ தினங்கள், திருவிழாக்காலம் என்றால், அந்தப் பகுதியே அல்லோல கல்லோலப்படும். அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே தடபுடல்படும்.
தமிழ்நாட்டில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகின்ற காவல் தெய்வங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, பிலாவடி, மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.
எல்லா கிராமங்களிலும் நாம் தரிசிக்கக் கூடியது மாரியம்மன் ஆலயம். பெரும்பாலானவர்களுக்கு மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை அண்டியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்?
சிவன் கோயில், பெருமாள் கோயில், விநாயகர் கோயில் இல்லாத கிராமம்கூட இருக்கலாம்.ஆனால், மாரியம்மன் கோயில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது.
‘மாரி’, ‘மகமாயி’, ‘மாரியாத்தா’ என்றெல்லாம் கிராமத்தவர்களால் கொண்டாடப்படும் இந்த மாரியம்மன் யார்? ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் இந்த ‘மாரி’தான் மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்!
‘மாரி’ இல்லாமல் நாம் இல்லை!

Comments