திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபிரானுக்கு பஞ்சபூத தலங்கள், சப்தவிடங்கத் தலங்கள், ஜோதிர்லிங்கத் தலங்கள், அட்டவீரட்டத் தலங்கள் என சிறப்புப் பெற்ற தலங்கள் பல உண்டு. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள ஆலயங்களை ஒன்றாக்கிச் சொல்பவை. ஆனால், ஒரே இடத்தில் சிவபிரானுக்கு 108 ஆலயங்கள் அமைந்துள்ளன என்றால், ஆச்சர்யமானது தானே. அது, மேற்கு வங்காள மாநிலம், பர்தமான் மாவட்டத்தில் உள்ள ‘அம்பிகா கால்னா.’
‘அம்பிகா கால்னா’ எனப்படும் இந்தப் பகுதி இங்குள்ள கோயில்களால் சிறப்புப் பெற்றது. கோயில் நகரம் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஊரின் மத்தியில் இருபுறமும் பல கோயில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் அதன் கட்டிடக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை.
கி.பி.18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் இங்கு ஆட்சி புரிந்த மன்னர்களின் பராமரிப்பில், இது மிக உன்னத நிலையில் இருந்துள்ளது.
‘பாகீரதி’ நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம், அந்தக் காலகட்டத்தில் மிகச் சிறந்த துறைமுகப் பட்டினமாகவும் விளங்கி, கடல் வாணிபத்தை ஊக்குவித் துள்ளது. இந்த நகரில் உள்ள பல கோயில்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன.
இதன் பெருமைக்கு முக்கியக் காரணமாக விளங்குவது இந்த ‘108 சிவலிங்க’ கோயில்கள். இவை வட்டவடிவில் இரண்டு வட்டங்களாக அமையப்பட்டள்ளன.
இது, உள் வட்டத்தில் 34 கோயில்களையும், வெளி வட்டத்தில் 74 கோயில்களையும் கொண்டுள்ளது. வெளி வட்டத்தில் உள்ள கோயில்களின் சிவலிங்கங்கள் ஒன்று வெண்மையான கல்லினாலும், அடுத்தது கருப்புக் கல்லினாலும்... இப்படி மாறி மாறி 37 ஜோடி லிங்கங்கள்.
உட்புற வட்டத்தில் அமைந்துள்ள 34 கோயில்களின் லிங்கங்களும் வெண்மையான ஸ்படிக லிங்கங்கள். இது நம் வாழ்க்கைத் தத்துவத்தை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது. கருப்பு லிங்கங்கள் உலகத்தின் பாபங்களையும், வெள்ளை லிங்கங்கள் புண்ணியத்தையும் குறிக்கின்றதாம்.
மனிதப் பிறவி எடுத்ததின் பயன் இந்த உலகத்தின் பாபச் செயல்களைத் தவிர்த்து, புண்ணியத்தையே நாடி, நற்கதி அடைய வேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன இக்கோயில்கள். இந்த 108 சிவலிங்க கோயில் மகாராஜா ‘தேஜாசந்திர பகதூர்’ அவர்களால் கி.பி.1809ல் கட்டப்பட்டது. இந்தக் கோயில் சுவர்கள் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகளை விவரிக்கும் வகையில் சித்திரங்கள் கொண்டவை.
இந்த ஊரில் புனிதமானதும், சக்தி வாய்ந் ததுமாகக் கொண்டாடப்படும் மற்றொரு கோயில் வங்காள மாநிலத்துக்கே உரித்தான மகாசக்தி காளி மாதா கோயில். இதுதான் இந்த ஊரிலேயே மிகப் புராதனமான கோயிலாகும். இதை ‘சித்தேஸ்வரி கோயில்’ என்று அழைக்கிறார்கள். கி.பி. 1740ல் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் அந்தக் காலகட்டத்தில் இந்த ஊரை ஆண்ட சித்திரசேன மகாராஜாவினால் கட்டப்பட்டதாகும்.
இந்தக் கோயிலுக்குச் செல்ல 14 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 14 படிகள், நவக்கிரகங்களையும் 5 வித தாந்திரீக வழிபாட்டு முறையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள வழிபாட்டு தெய்வமான காளி மாதா ஒரே வேப்ப மரத்தில் செதுக்கப்பட்ட பிரதிமையாகும். இந்தக் கட்டிடங்களில் மூன்று சிவாலயங்களும் உள்ளன. அருகிலுள்ள அனந்த வாசுதேவ பெருமாள் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இங்குள்ள லாலாஜி கோயிலும், கிருஷ்ண சந்திரா கோயிலும் மூன்று நிலை விமானங்களை உடையது. இவை கி.பி. 1739ல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தவிர, மேற்கு வங்கத்தையே தன்னுடைய பக்தியினால் கொள்ளை கொண்ட ‘சைதன்ய மகா பிரபு’வுக்கும் கோயில் உள்ளது.
காலம் எவ்வளவோ மாற்றங்களை அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த மாற்றங்களால் மாற்றமடையாததாக - ஜீவித்து நிலை பெற்ற பக்தி உணர்வு, ஆலயங்களாக நம்மை வழிநடத்திக் கொண்டேயிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது இந்த ‘அம்பிகா கால்னா.’
செல்லும்வழி:
கொல்கத்தாவிலிருந்து 82 கி.மீ. ரயில் மற்றும் பேருந்து வசதி உண்டு.
Comments
Post a Comment