ஸ்ரீசப்தரிஷீஸ்வரர்

புஷ்பக விமானத்தில் பறந்துகொண்டிருந்தவன் எதிரேயுள்ள மிகப்பெரிய மலையைக் கண்டான். அந்த மலையைவிட, அகந்தையும் ஆணவமும் அவனுள் ஓங்கியிருந்தது. 'இந்த மலைக்காக நாம் சுற்றிச் செல்லவேண்டுமா?' என யோசித்தான்; தன் இருபது கரங்களாலும் அந்த மலையின் அடிப்பகுதியை அப்படியே தூக்கிவிட யத்தனித்தான். அது சாதாரண மலையா என்ன?! ஈசன் குடிகொண்டிருக்கும் திருக்கயிலாய மலையல்லவா!
அசுரத்தனமாக மலையைப் பெயர்க்க முனைந்தவனுக்கு லேசாக அசைந்துகொடுத்தது அந்த மலை. இந்த அசைவு கண்டு, ஓடிவந்த பார்வதிதேவி, சிவனாரின் திருக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். 'என்ன விளையாட்டு இது?' என்று கோபித்துக் கொண்டாள். 'இவன் சிவபக்தன்தான்... குறிப்பாக சதாசர்வகாலமும் உங்களையே நினைத்து உருகும் மகா பக்தன்தான். அதற்காக இதனைப் பொறுத்துக் கொள்வதா?' என்று முகம் தூக்கிக் கொண்டாள் பார்வதிதேவி.
மெள்ளச் சிரித்த சிவனார், தன்னுடைய கால் கட்டை விரலால் தரையை அழுத்தினார். முப்புரத்தை தன்னுடைய புன்னகையால் எரித்துப் பொசுக்கியவர், ஒற்றைக் கட்டை விரலால் அழுத்த... அவ்வளவுதான். கயிலைமலையின் பாரம் தாங்காமல் தடுமாறினான் அவன்; கலங்கினான்; கதறினான்; அழுதான்; அரற்றினான்.
'உனது உண்மையான பக்தன் அல்லவா நான்! என்னையா சோதிக்கிறாய்?' என்று மனம் நொந்தவன், துவண்டான். அப்போது அங்கே வந்த வாகீச முனிவர், 'பூலோகத்தில் சிவபெருமானை எண்ணி தவம் செய்; வில்வத்தால் அர்ச்சித்து வழிபடு; அவருக்குப் பிடித்த சாமகானத்தை வாசிப்பதில் நீதான் வல்லவனாயிற்றே... சாமகானத்தால் சிவனாரை மகிழ்வி! இதுவரை வரங்கள் பல தந்த ஈசன், இன்னும் இன்னும் தந்தருள்வார்' என்று கூறிச் சென்றார். அதன்படி அவன், பூலோகத்துக்கு வந்தான். ஆற்றில் நீராடி, கரையில் அமர்ந்தான். தனது தலைகளில் ஒன்றைத் திருகி, வீணையின் குடமாக்கினான்; நரம்புகளையே தந்திகளாக்கினான்; சாமகானம் இசைத்தான். இதில் மகிழ்ந்த சிவனார், அவனுக்கு அருளினார்.
தீவிர சிவபக்தன்; கலைகளில் தேர்ச்சி பெற்றவன்; ஆனாலும், அகந்தையாலும் பெண்ணாசையாலும் கெட்டவன் எனப் பெயரெடுத்து, தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவன்; இவன் அழிந்தது மட்டுமின்றி இவனது தேசமும் எரிந்து சாம்பலானது. இவன்... ராவணன்!
ராவணன் வணங்கி அருள் பெற்ற திருத்தலம், திருச்சி துறையூர் அருகே உள்ளது. இந்தத் தலத்தின் பெயர், திருத்தலையூர். தனது பத்துத் தலைகளில் ஒன்றைத் திருகி எடுத்து, வீணையின் குடமாக்கி, இசைத்தான் அல்லவா?! இதனால் இந்த ஊர், திருகு தலையூர் எனப்பட்டு, பிறகு திருத்தலையூர் என மருவியதாம்! இங்கே, அமைந்துள்ளது அற்புதமான சிவாலயம். புரூர மன்னன், தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவதற்காக, சிவபெருமானை வேண்ட... மன்னனின் தோஷத்தை நீக்கி அருளினாராம் சிவனார். இதனால் மனம் உருகிப்போன மன்னன், இங்கே... மிகப்பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.
ராவணன் வழிபட்டதால், இந்த ஆலயத்தில் ராவணேஸ்வர லிங்கம் எனும் பெயரில் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறது, அற்புதமான லிங்கத் திருமேனி. ஆனாலும் மூலவரின் திருநாமம் - ஸ்ரீசப்தரிஷீஸ்வரர்.
ஆமாம்... பத்துத் தலைகளும் இருபது கரங்களுமாக இங்கேயுள்ள ஐயாறு ஆற்றங்கரைக்கு ராவணன் வந்ததும், இவனைக் கண்டு ஆடிப்போனார்கள் சப்தரிஷிகள். அதுவரை, பலகாலமாக கடும் தவத்தில் இருந்த சப்தரிஷிகளின் கவனம் சிதறியது. ஈசனை எப்போதும் நினைத்திருக்கும் வேளையில், இந்த அரக்கன் வந்து தவத்தைக் கலைத்துவிட்டானே... என்று கலங்கித் தவித்தனர்; 'இறைவா... இந்த தலத்திலேயே நாங்கள் ஏழுபேரும் மரமாகிப் போகிறோம்; அப்படி மரமாகிவிட்டால், எவரைப் பார்த்தும் பயப்படவேண்டாம்; எதற்காகவும் நடுங்கத் தேவையில்லை. எனவே, மரமாகிவிட அருள்புரியுங்கள்' என வேண்டினர். அதன்படி, ஏழு முனிவர் பெருமக்களும், மரமானார்கள்; மருதமரமாக கிளைவிட்டுப் பெருத்து, ஓங்கி உயர்ந்து நின்றனர். இன்றளவும் ரிஷிகள் தவம் இருப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இன்னொரு விஷயம்... நாயன்மார்களில் ஒருவரான ருத்ர பசுபதி நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. இங்கேயுள்ள திருக்குளத்தில், இடுப்பளவு நீரில் நின்றபடி, எதிரே கோயில் சந்நிதியில் உள்ள சிவனாரைப் பார்த்து, ஸ்ரீருத்ர ஜபம் சொல்லியபடியே இருப்பாராம். இதனால் இவருக்கு ருத்ர பசுபதி நாயனார் எனும் திருநாமம் அமைந்ததாம்! இவரது ருத்ரத்தைக் கேட்க ஆனந்தமாக வந்து, அருட்காட்சி தந்து பசுபதி நாயனாரை ஆட்கொண்டாராம் சிவபெருமான்!
இத்தனை சிறப்புகள் கொண்ட ஆலயத்தின் இன்றைய நிலை சிறப்பாக இல்லை என்பதுதான் வேதனை! கும்பாபிஷேகம் நடந்து, ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்பதுதான் கொடுமை!
மூலவரை தரிசித்தபடியே அங்கேயே நின்று, அம்பாளையும் தரிசிக்கலாம். அவளின் திருநாமம் - ஸ்ரீகுங்குமவல்லி அம்பாள். அழகு ததும்பும் திருவுருவம்; முகத்தில் ஜொலிக்கிறது அவளின் கருணை. இங்கே... அகோர வீரபத்திரரும் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், பயம் நீங்கும்; தைரியம் பிறக்கும்; எதிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். இதேபோல் ஸ்ரீசித்திவிநாயகரின் திருவுருவ விக்கிரகம் கொள்ளை அழகு. பிராகாரத்தின் திருச்சுற்று மாளிகையில் திருமாலின் திருவிக்கிரகம். வழக்க மான சங்கு -சக்கரத்துடன் கூடவே வேறு ஏதோ முத்திரை காட்டுகிறார். என்னவாம்?
சிவபெருமானிடம் மூன்றரை கோடி வருட ஆயுளை வரமாகப் பெற்ற ராவணன், இந்தத் தலத்துக்கு வந்தபோது, எதிரில் கிழவன் ஒருவனைக் கண்டான். அந்தக் கிழவன், துளசிச் செடியை தலைகீழாகப் பிடித்து தரையில் ஊன்றியபடி, ஆயிரம் துவாரங்கள் கொண்ட குடத்தால், குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து துளசிச் செடியில் ஊற்றிக் கொண்டிருந்தான். ராவணனைப் பார்த்து அந்தக் கிழவன், 'மூன்றரை கோடி ஆயுளை வரமாகப் பெற்றவன் அல்லவா நீ?! இன்னும் அரை கோடி வருட ஆயுளை சிவபெருமானிடம் கேட்டு வாங்கி வா' என்று சொல்ல... அவனும் இதே சிந்தனையுடன் சிவனாரை எண்ணி தவம் இருக்க... தவத்தில் மகிழ்ந்து காட்சி தந்த ஈசனிடம், 'எனக்கு அரை கோடி வருட ஆயுள் வேண்டும்' என்று கேட்டானாம். இதனால் ஏற்கெனவே கேட்ட மூன்றரை கோடி ஆயுள் வரம் அழிந்தது; அரை கோடி ஆயுள் மட்டுமே வரமாகக் கிடைத்தது என்பர். அந்தக் கிழவன் வேறு யாருமல்ல... திருமால்தான்! இங்கே, 'மூன்றரை கோடி ஆயுள்' குறித்து விரல்கள் மடக்கிக் காட்டி ஜாடை சொல்வது போல் காட்சி தருகிறார் திருமால்.
நிறைய தூண்கள் கொண்ட மண்டபம்; ஆனால் ஆங்காங்கே இடிந்து விழுவது போல் பயமுறுத்துகின்றன சுவர்கள். சிறிய, அழகான நவராத்திரி கொலுமண்டபம்; ஆனால் அந்த மண்டபத்தின் எட்டுப்பத்து இடங்களும் இடிந்தும் விழுந்தும் கிடக்கின்றன. அழகிய திருக்குளம்; ஆனால், தண்ணீரின்றி வறண்டிருக் கிறது. மிகப்பெரிய பிரமாண்டமான கோயில்; ஆனால், களையிழந்து நிற்கிறது.
'திருப்பணிகள் செய்து எத்தனையோ வருஷமாச்சு. ஒருகாலத்துல, விழாக்கள் அத்தனை அமர்க்களமா நடக்கும். இப்ப... பிரதோஷம் நடக்கறதே பெரும்பாடா இருக்கு. ஆயுள்விருத்தி கிடைக்கக்கூடிய ஸ்தலம்; திருமண வரம் அருளும் அற்புதமான கோயில். உத்ஸவம், திருவிழான்னு நடந்த காலமெல்லாம் போச்சு. ஸ்ரீகுங்குமவல்லி அம்பாளை குலதெய்வமாகக்
கொண்டவங்களும், திருத்தலையூரைப் பூர்வீகமாகக் கொண்டவங்களும் நிதியுதவி தேடி அலையுறாங்க. சப்தரிஷீஸ்வரர்தான் மனசு வைக்கணும்' என்கிறார் கோயில் குருக்கள்.
ராவணனுக்கு அருள் புரிந்தவர்; ருத்ர பசுபதி நாயனாரை ஆட்கொண்டவர்; சப்தரிஷிகளையும் மரங்களாக்கி அருகிலேயே வைத்துக் கொண்டவர்; திருமண பாக்கியமும் குழந்தை வரமும் தருபவர்; ஞானமும் முக்தியும் தந்தருள்பவர்... நமக்காக, நம் சந்ததியினர் செழிப்பதற்காக, திருத்தலையூர் திருத்தலத்தின் புகழ் திக்கெட்டும் பரவுவதற்காக, அருள்பாலிக்காமல் இருப்பாரா என்ன?!
தென்னாடுடைய சிவனின் அடியவர் கள், திருத்தலையூர் திருத்தலத்தை கைவிடமாட்டார்கள்!
எங்கே இருக்கிறது?
திருச்சி - துறையூருக்கு அருகில் உள்ளது திருத்தலையூர். இங்கே அமைந்துள்ளது ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில். துறையூர் - முசிறி சாலையில் (வழி - திருத்தலையூர்) உள்ளது திருத்தலையூர். முசிறியில் இருந்தும் துறையூரில் இருந்தும் சுமார் 18 கி.மீ. தொலைவு. எனவே திருச்சி- முசிறி வழியாக பயணித்தோ, அல்லது திருச்சி - துறையூர் வழியாக பயணித்தோ இந்தத் தலத்தை அடையலாம்.

Comments