‘பதினொரு ஆழ்வார்களாலே பாடப்பட்டவன்; பெரிய கோயில் கொண்டவன்; அவதார புருஷர்களாலே ஆராதிக்கப்பட்டவன்’ என்றெல்லாம் சிறப்புடைய திருவரங்க நாதனுக்கு அளவற்ற பாசுரங்களைப் பெற்றவன் என்றும் ஏற்றமுண்டு. ஆழ்வார்களால் மட்டுமல்ல; பிற்காலத்தில் 17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், அரங்கனின் வடிவழகில் பெரிதும் தோய்ந்தவர். திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கமாலை, திருவரங்க ஊசல் (மற்றவை, அழகர் அந்தாதி, திருவேங்கடத்து அந்தாதி, திருவேங்கட மாலை, 108 திருப்பதி அந்தாதி) என்று தம்முடைய எட்டு நூல்களில் நான்கு நூல்களை அரங்கனுக்கே சமர்ப்பித்தவர்.
அவற்றில், திருவரங்கக் கலம்பகத்தில், அரங்கநாதனை அற்புதமாக அவர் தரிசிக்கிறார். தரிசித்தது மட்டுமல்ல; நமக்கும் விவரிக்கிறார். எப்படி? ‘எம்பெருமானின் திருமேனியில் பத்து தாமரைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல; ஒன்பது அதிசயங்களும் இதிலுண்டு’ என்கிறார்.
கரை பொருது ஒழுகும், காவிரி ஆறே;
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே;
இரு கரைகளையும் மோதிக் கொண்டு, பெருகி ஓடும் காவிரி நதி, அதன் நடுவே ஐந்து தலைகளையுடைய நாகம் பொருந்தி இருக்கிறது.
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே;
அம் மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே;
அந்த ஐந்து தலை நாகம் - ஆதிசேஷன் - ஒரு கருமையான மலையைத் தாங்குகிறது. (பள்ளி கொண்ட ரங்கநாதர்) அந்த கருநீல மலையில் ஒரு தாமரை மலர்க்காடு உண்டு.
அரவிந்த மலர்தொறும் அதிசயம் உளவே -
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம்
உடன் முழுது அளந்தது, ஒரு தாமரையே;
ஒவ்வொரு தாமரையிலும் ஒரு வியப்பு - அதிசயம் உள்ளது. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு, அகன்ற இடமான நிலப்பரப்பு முழுவதையும் தாமரை மலர் ஒன்று ஒருசேர அளந்தது.
வகிர் இளம்பிறையான் வார்சடை தேங்கப்
பகீரதி கான்றது ஓர் பங்கேருகமே;
மற்றொரு திருவடியாகிய தாமரை மலர், பிறைச் சந்திரனை உடைய உருத்திரனது நீண்ட சடையில், நிறைந்து தங்கும்படி கங்கை நதியை வெளியே உமிழ்ந்தது.
யாவையும், யாரையும் படைக்க, நான்முகக்
கோவை ஈன்றது, ஓர் கோகனகமே
ஒரு தாமரை மலர் (திருநாபி) எல்லா அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் - இவற்றைப் படைப்பதற்காகப் பிரும்மதேவனைப் பிறப்பித்தது.
திருமகட்கு இனிய திருமனை ஆகி
பருமணி இமைப்பது, ஓர் பதும மலரே
ஒரு தாமரை மலர் (திருமார்பு) பெரிய பிராட்டியான, மஹாலக்ஷ்மி வசிப்பதற்காக, அழகிய இடமாகப் பருத்த கௌஸ்துப (மணி)ரத்தினம் விளங்கப்பெற்றது.
சடைத் தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப,
முடைத் தலை தவிர்த்தது, ஓர் முளரி மாமலரே;
ஓர் அழகிய தாமரை மலர், சடைத் தலையுடைய சங்கரன் யாசிக்க, அவன் கையில் ஒட்டியிருந்த பிரும்ம கபாலத்தை உடைத்தது (ஒரு கை).
ஆங்கு, மண்டோதரி அணிந்த மங்கல நாண்
வாங்க, வில் வாங்கிய வனசம் ஒன்றே;
ஒரு தாமரை மலர், மண்டோதரியின் மங்கல நாண் அழியும்படி, கோதண்டம் என்ற வில்லை வளைத்தது (மறு கை).
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு, தென்திசை
புரிந்து, அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
புகழுடைய இலங்கை அரசனான விபீஷணனுக்கு எப்போதும் அருள் புரிந்துகொண்டு தென்திசை நோக்கியவாறே இருக்கிறது ஒரு தாமரை மலர். (திருமுக மண்டலம்).
மண் திணி ஞாலமும், வானமும் உட்பட
அண்டம் உண்டு, உமிழ்ந்தது, ஓர் அம்போருகமே
ஒரு தாமரை மலர் (திருப்பவள வாய்) மண்ணுல கான பூமியும், தேவலோகமும் உள்ளடக்கிய அண்டம் முழுவதையும், பிரளய காலத்தில் விழுங்கி, (பிரளயம் நீங்கியவுடன்) வெளியே உமிழ்ந்தது.
இடைசில அரி பரந்து, இனி ஆய், நெடிய ஆய்,
இன்பம் தழீஇய இரு பெருங் கமலம்
நுனியில் சிவந்து, விசாலமாகப் பரந்து, இடையே கரிய கண்மணி விளங்கப் பெற்று, இனியனவாகவும், நீண்டதாகவும் இன்பம் நிறைந்த இரண்டு பெரிய தாமரை மலர்கள் (திருக்கண்கள்).
துன்பம் தழீஇய தொண்டனேனையும்,
உவப்புடன் ஒரு கால் நோக்கி
பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே.
துன்பம் நிறைந்த அடியேனையும், மகிழ்ச்சியுடன் ஒருமுறை பார்த்து, பிறவியாகிய கடலைக் கடக்கப் பண்ணின.
பத்து தாமரையின் வேறு பெயர்கள்:
1 அரவிந்தம், 2.தாமரை, 3.பங்கேருகம், 4. கோக னகம், 5.பதுமம், 6.முளரி, 7.வனசம், 8.புண்டரீகம், 9.அம்போருகம், 10.கமலம்.
எம்பெருமான் தமது திருக் கண்களால் நோக்குவதே நாம் உய்வதற்கு வழி என்பது புலப்படுகிறது.
Comments
Post a Comment