ஆந்திர மாநிலம், பஸ்ஸிம கோதாவரி மாவட்டத்திலுள்ள பெனுகொண்டா பட்டினம், நகரேஸ்வரர், ஜனார்த்தனர் போன்ற ஆலயங்கள் நிறைந்த அழகிய ஊராகும். அவ்வூரில் குசுமசெட்டி - குசுமாம்பா தம்பதியினர் புத்திரபாக்கியம் வேண்டி, யாகம் செய்தனர்.
வசந்த ருதுவில் வைசாக சுத்ததசமி வெள்ளிக்கிழமை மகம் நட்சத்திரத்தில் எல்லா கிரகங்களும் உச்சஸ்தானத்தில் இருக்கையில் அன்னை பராசக்தியே பூவுலகில் ஸ்ரீ வாசவியாக அவதரித்தாள். நந்திபகவான் விருபாக்ஷனாக அவதரித்தார். அன்னை பார்வதி அவதரித்த திருநாளே ஸ்ரீ வாசவி ஜயந்தி. அவரது காலம் கி.பி.1015 முதல் கி.பி.1026 வரை.
அன்னை பார்வதியின் அம்சமான வாசவி அழகிலும், அறிவிலும் மிகச்சிறந்து விளங்கினாள். தன் குலகுரு பாஸ்கராச்சாரியரே வியந்து பாராட்டும் விதமாக சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தாள்.
வாசவி வளர்ந்து வந்த காலத்தில் கீழை சாளுக்கிய வேந்தன் ஏழாம் விஷ்ணுவர்த்தன் இராஜமகேந்திரவரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தன் வலிமையைக் காட்ட திக்விஜயம் மேற்கொண்டு சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினான். வெற்றிக்களிப்புடன் பெனுகொண்டா நகர் வந்து குசுமசெட்டி வீட்டில் விருந்துண்டான். பெண்மையின் இலக்கணமாய், பேரழகுப் பெட்டகமாய் விளங்கும் வாசவியைக் கண்டதும் மையல் கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பி அமைச்சரைத் தூதாக அனுப்பினான்.
பெனுகொண்டா மக்கள் பேதலித்துப் போயினர். ‘அரசனுக்கு பெண் தரலாம்’ என ஒரு சாரரும், ‘அரசனே ஆனாலும், அன்னியனுக்கு குலக்கொழுந்தை மணமுடிக்கக் கூடாது’ என ஒரு சாராரும் வாதிட்டனர்.
இதற்கிடையில் மன்னன் விஷ்ணுவர்த்தன் தன் சேனையுடன் பெனுகொண்டா நோக்கிப் புறப்பட்டான். ஊர் மக்கள் கலங்கினர்; குசுமசெட்டி செய்வதறியாது திகைத்தார்.
வாசவி, உயிரைவிட குலமானம் பெரிது. எனவே, நான் அக்னிப்பிரவேசம் செய்ய உள்ளேன்" என்றதும் தாய் தந்தையர் துடிதுடித்துப் போயினர். இதைக் கண்ட அவள், தந்தையே! நான் பார்வதியின் அம்சம்! உலகத்து மானிடர் யாரையும் மணாளனாக ஏற்றுக் கொள்ள முடியாதவள். அதனால்தானே எனக்கு ‘கன்யகா’ என்ற இன்னொரு பெயரும் உள்ளது. அக்னிப்பிரவேசம் பற்றி கலங்காதீர்கள்" என எடுத்தியம்பினாள்.
குசுமசெட்டி அமைதி அடைந்து அக்னிப் பிரவேசத்துக்கு யாகக் குண்டங்களை அமைக்குமாறு ஆணையிட்டார். அரசனின் படைபெனு கொண்டாவை நெருங்கியது. வாசவிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இத்தனை அழகுள்ள ஒரு கன்னிகையை அக்னிக்கு அர்ப்பணம் செய்வதை எண்ணி அனைவரும் கலங்கினர். வாசவியுடன் அவள் பெற்றோரும், ‘அரசனுக்கு பெண் தரக் கூடாது’ எனக் கூறிய ஒரு சாரரும் அக்னிகுண்டத்தில் இறங்கி தம் ஜீவனை ஆத்மார்ப்பணம் செய்தனர்.
எங்கும் அழுகுரல். ஆணவத்தால், பெண்ணாசையால் மதியிழந்த மன்னன் விஷ்ணு வர்த்தனின் தலை சுக்குநூறாக வெடித்தது.
அன்னை வாசவி அக்னியிலிருந்து ஸ்ரீகன்யகா பரமேஸ்வரியாய் விசுவரூபம் காட்டி வைசியதர்மத்தை போதித்து சிவபெருமானுடன் ஐக்கியமானாள்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என வாழ்ந்து காட்டிய இராமனைப் போல், அன்னை பார்வதி வாசவியாக அவதரித்து பூமிக்கு வந்தாள். பெனுகொண்டாவில் அழகிய ஆலயம் அன்னைக்கு அமைந்துள் ளது. உலகெங்கும் பல்வேறு ஆலயங்கள் அன்னைக்கு எழுப்பப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உறையும் அன்னையின் அருட்கோலத்தைக் காண மெய் சிலிர்க்கும்.
ஸ்ரீ வாசவி ஜயந்தி அன்று அன்னையை தரிசித்து வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்.
Comments
Post a Comment