கோடி கொடுத்த நாதர்

அந்த வனம் அன்று தெய்வீக மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. இரவின் இனிமையான காற்றிலே அகில், சந்தனம், சாம்பிராணி போன்ற திரவியங்களின் மணம், அங்கு நடந்து கொண்டிருந்த புனிதமான காரியத்துக்கு மேலும் புனிதம் சேர்ப்பது போல் அமைந்திருந்தது. தீபங்களின் ஒளியில் பூஜைகள் நடை பெற்று வந்தன. இதுபோல இன்னுமொரு நிகழ்வு நடக்குமோ என வியக்கும்வண்ணம் ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, ஒரு கோடி - ஆம்; ஒரு கோடி சித்தர்களும், முனிவர்களும் அங்கு குழுமியிருந்தனர்.
என்ன, ஒரு கோடி சித்தர்கள், முனிவர்களா? ஆம்; நடக்கப்போவது அத்தகைய நிகழ்வல்லவா? தங்களின் தவ வலிமையாலும், சித்தத்தை அடக்கி சாதித்த சித்துக்களாலும் இதுவரை கண்டறியாத, இனியும் செய்ய முடியாத இறைவனின் ஒரு திருவுருவை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். அடிமுடி காணா அருட்பெரும் ஜோதியை அனைவரும் தொழத்தக்க வகையில் சிவலிங்க ஸ்வரூபமாக, அரிய பாஷாணங்களைக் கொண்டு அமைத்தனர்.
வேத கோஷங்களுக்கிடையே இறைவனை பிரதிஷ்டை செய்து பூமாலைகளும், பாமாலைகளும் சூட்டினர். தங்களின் விலைமதிக்க முடியாத பொக்கிஷமான அரிய மருத்துவக் குறிப்புகளடங்கிய ஓலைச்சுவடிகளையும், ரசவாதத்தால் உருவாக்கிய பொற்குவியல்களையும் இறைவன் முன் சமர்ப்பித்தனர். பின்னர் நாற்புறமும் சுவர் எழுப்பப்பட்டு, மேற்கூரையும் விமானமும் அமைக்கப்பட்டன. எல்லா கோயில்களிலும் இருக்கும் ஒன்று, இங்கு அமைக்கப் படவில்லை. அதுதான் உட்சென்று வழிபட வாயில்!
இறைவனுக்கு நேரெதிரே சுவற்றில் ஒரு கண் வைத்து பார்க்கும் அளவுக்கு ஒரு துவாரம் மட்டும் விடப்பட்டது. வேலைகள் முடிந்தன. சித்தர்களும், முனிவர்களும் ஆலயத்தை வலம்வந்து வணங்கிப் புறப்பட்டனர்.
பல நூறு ஆண்டுகள் உருண்டோடின. சித்தர்களும் முனிவர்களும் மட்டுமே வழிபட்டு வந்த ஆலயம் மெல்ல மெல்ல மனிதர்களுக்கும் புலப்பட்டது. ஒரு அதிசய ஆலயமாக இதனை தேடி வந்து வழிபட்டவர்களுக்கு இறைவன் அருட்செல்வத்தை வாரி வழங்கினார். பலனடைந்தோர் இறைவனுக்குக் கோடி கொடுத்த நாதர் எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.
படிப்படியாக இவ்வாலயத்தின் பெருமை இப்பகுதியை ஆண்ட அரசர்கள் வரை சென்றடைந்தது. ஆண்டிகளையே செல்வந்தராக்கிய இறைவன் அரசருக்கு ஆண்டளக்க மாட்டாரா என்ன?
மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அரசர்கள் இவ்வாலயத்தைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர், துர்கை போன்ற கோஷ்ட தெய்வங்களுக்கு சன்னிதிகள் அமைத்தனர். இறைவனை மட்டும் இன்னும் ஒரு கண் மட்டுமே வைத்துப் பார்க்கக்கூடிய சிறு துவாரம் வழியாகவே வழிபட்டு வந்தனர்.
எல்லாம் நல்லபடியாக நடந்து விட்டால்? பதினைந்தாம் நூற்றாண்டிலே ஆட்சி புரிந்த அரசருக்கு ஒரு ஆசை வந்தது. இறைவனுக்கு அருகே இறைவிக்கும் ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டால்?
ஒரு நல்ல நாளில் தன் எண்ணத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தான் அரசன். கல்தச்சர்களைக் கொண்டு சித்தர்கள் அமைத்த சுவர் இடிக்கப்பட்டது. உடைத் தவர்களுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. சுவரின் துவாரம் வழியே பார்த்தபோது மலையென குவிந் திருந்த தங்கக் கட்டிகள் இப்போது மாயமாக மறைந் திருந்தன. ஓலைச்சுவடிகள் மட்டும் இறைவன் முன் குவிந்திருந்தன.
அரசன் அதிர்ச்சியடைந்தாலும் தான் எடுத்த காரியத்தை நிறைவேற்ற நினைத்தான். அம்பிகைக்கு சன்னிதி எழுப்பி ஓலைச்சுவடிகளை அவள் பாதுகாப்பில் வைத்தான். இறைவி ‘ஓலை படித்த நாயகி’ என்று அழைக்கப்பட்டாள். கோயிலில் இருந்து மாயமான தங்கம் கோயில் கிணற்றில் ஐக்கியமாகி யிருந்தது. நிலவொளியில் தகதகவென மின்னியது.
கோயிலின் இன்றைய நிலை:
ஒரு கோடி சித்தர்கள் அமைத்த சிவாலயத்தைக் கொண்டு இன்றும் ஒரு கோடி என்று அழைக்கப்படும் இச்சிற்றூரை தேடி வருவோர் மிகச் சிலரே.
கோயில் மிக சிதிலமடைந்து, விமானத்தைச் செடிகள் ஆக்ரமித்துக் கொண்டுள்ளன. ஊர் மக்களின் ஆதரவோடும், அவ்வப்போது வரும் மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்து சிறிது சிறிதாகச் சிதிலமடைந்த சுவர்களைச் சீர்படுத்தி வருகின்றனர்.
அழகான விநாயகர் சன்னிதி பாழடைந்து காட்சியளிக்க, அருகிலிருக்கும் கான்கிரீட் சன்னிதியில் காட்சியளிக்கிறார் விநாயகர்.
பலரை கோடீஸ்வரராக்கிய இறைவன் இன்று கவனிக்க ஆளின்றி இருக்கும் நிலை கண்டு கண்களில் கண்ணீர் பெருகுகிறது.
அம்மன் சன்னிதியில் வௌவால்களின் வாசம். களப்பிரர் கால கொற்றவை, பல்லவர் கால ஜேஷ்டா தேவி சிலைகள் கோயிலின் வெளியே பாதுகாப்பின்றி பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.
மக்களின் ஆதரவை எதிர்பார்த்து கோடி கொடுத்த நாதரும், ஓலை படித்த நாயகியும் காத்திருக்கின்றனர்.

Comments