சிவலிங்க வழிபாட்டில் எட்டு வகை உபசாரங்கள் இருக்கின்றன. பூரண கும்பம், மாலை தொடுத்தல், தீபமேந்துதல், சாமரம் வீசுதல், சுத்த நிருத்தம் புரிதல், அர்ச்சித்தல், கண்ணாடி காண்பித்தல், முரசொலித்தல் ஆகிய இந்த எட்டு உபசாரங்களையும் அஷ்டோபசாரம் என்றழைப்பார்கள். சிற்ப விதிகளின் படி சிவத் தலங்களில் ஆலய கோபுர மேல்நிலை வாயில்களின் இருபுறமும், தேவலோக ரம்பைகள், இந்த அஷ்டோபசாரம் செய்யும் சிலைகளை அமைக்க வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம், படாளம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள புலிப்பரக் கோயில் என்னும் தலத்தில் உறையும் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் வித்தியாசமான காட்சியைக் காண்கிறோம். இங்கு கோயில் முதல் வாயில் நிலைப்படியின் மேல் முகப்பில் எட்டு வகை உபசாரங்கள் காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மையத்தில் சிறு மண்டபத்தில் சிவலிங்கம் இருக்க, பக்கத்துக்கு நான்கு ரம்பைகள் அஷ்டோபசாரம் செய்கிறார்கள். அவர்கள் உபசாரம் செய்யும் நேரம் காலை என்பதை உணர்த்த பூதம் சங்கு ஊதும் காட்சி முதலில் வடிக்கப்பட்டுள்ளது.
சிற்பக் காட்சிகளின் தொடர்ச்சியாக தென்கோடியில் விநாயகரும், வடகோடியில் முருகரும் இருக்கிறார்கள். இந்தத் தலம் வடபொன்னம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. முற்பிறப்பில் கௌதம முனிவராக இருந்து பின்னர் மத்யந்த முனிவரின் மகனாக அவதரித்த வியாக்ரபாத முனிவர் இந்தத் தலத்தில் தவம் செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தார்.
தேனீக்கள் தீண்டுவதற்கு முன்னரே இருட்டிலேயே செடிகளிலும், மரங்களிலும் உள்ள தூய்மையான மலர்களைப் பறித்து சிவனுக்கு பூஜை செய்துவிட வேண்டுமென்று வியாக்ரபாதருக்கு ஆசை. ஆனால், மரங்களில் ஏறி பறிக்கும்போது, பிடிப்பு இல்லாத காரணத்தால் பலமுறை வழுக்கி விழுந்து விடுகிறார் வியாக்ரபாதர். இதன் காரணமாக சிவனை வேண்டி வழிபட, வியாக்ரபாதருக்கு புலிக் கால்களைக் கொடுக்கிறார் ஈசன். அதனால் வியாக்ர பாதரால் சுலபமாக மரங்களில் ஏறி மலரைப் பறிக்க முடிகிறது. வியாக்ரபாதர் வழிபட்டதால் சுவாமிக்கு வியாக்ரபாதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கிய கோயில். கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பாலாறுக்கு தெற்கே உள்ள தலம். சம்புவரையர்கள், விஜயநகர மன்னர்கள், பாண்டியர்கள் காலங்களில் பலவித திருப்பணிகள் இத்திருக்கோயிலுக்கு மேற்கொண்டதாகக் கல்வெட்டுச் சாட்சியங்கள் சொல்கின்றன.
கருவறையில் சுயம்பு லிங்கமாக, நுனி சிறுத்து, வெண்மை நிறமாக இருக்கிறார் வியாக்ரபுரீஸ்வரர். ஈசனை வணங்கி வலது புறம் பார்த்தால், அதே கருவறையில் வெளிப்புற சிறிய மண்டபத்தில் அம்பாள் பாலகுஜாம்பிகை அருள்பாலிக்கிறாள். சமபங்க நிலையில் நான்கு கரங்கள் கொண்டு, கீழிரு கரங்களால் அபயவரத முத்திரையைக் காட்டி, மேலிரு கரங்களில் தாமரை, ஆம்பல் மலர்களை ஏந்தி மனோன்மணி சொரூபமாய் நிற்கிறாள். பாசாங்கு சங்களை வைத்துக் கொள்ளாமல் மலர்களை ஏந்தியிருப்பது தனிப்பெருமை.
அம்பாளுக்கு எதிரிலேயே கருவறையின் இடது புறத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
கருவறையைச் சுற்றி வரும்போது கஜப்பிருஷ்ட விமானத்தின் அமைப்பு நம்மை அசத்துகிறது. வழக்கம்போல கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் இருக்கிறார்கள். சுவாமிக்கு எதிரில் சிறிய நந்தியிருந்தாலும், ராஜ கோபுரத்துக்கும் கோயில் உள்நுழைவாயிலுக்கும் இடையில் பிரதோஷ நந்தி, மிக அழகாக இருக்கிறார்.பைரவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. கோயில் திருப்பணி வேலைகள் முற்றுப் பெறாததால் கோயிலின் வழக்கமான அமைப்பு தடைபட்டு இருக்கிறது. ராஜகோபுரத்துக்கும், கோயில் நுழை வாயிலுக்கும் சரியான பாதை இல்லை. ஏதோ ராஜ கோபுரம் தனியாக இருப்பதை போல உணர்வு தோன்றுகிறது. பழநி போகரின் சீடர் புலிப்பாணி சித்தர் இந்தத் தலத்தில் சமாதியானாராம். அவருடைய அதிஷ்டானம் கோயிலுக்கு வெளியே தனி சன்னிதியாக இருக்கிறது.
சம்புவராயர் காலத்தில் இந்த ஊர் வணிகப் பெருமக்கள் மீது வரி விதிக்கப்பட்டு, அந்தத் தொகை கோயிலுக்குப் பயன்படுத்தப்பட்டதை சொல்கிறது ஒரு கல்வெட்டு. பத்து தூண்களைக் கொண்ட மகாமண்டபமும் சம்புவராயர் காலத்தில் கட்டப்பட்டதுதான். ‘ஸ்வஸ்ஸ்ரீ ஸ்ரீ ஸகலலோக சக்கரவர்த்தி இராசநாராயணன் சம்புவயராயருக்கு இயாண்டு அஞ்சாவது பாத்தூர் உடையார், திருப்புலிவ பகவ நாயணார் கோயில் சோபானம் தெற்கில் பத்திரப்பணி செய்வித்தப் பாக்க நாட்டு விரியூர் பொக்கம் ரெட்டியார் மகன் வயிரப்ப ரெட்டியார் தர்மம்’ என்ற கல்வெட்டிலிருந்து, மண்டபத்தைக் கட்டியவர் வயிரப்ப ரெட்டியார் என்பது தெரிகிறது. ஒவ்வொரு தூணிலும் அழகான சிற்பப் பதிவுகள். விசயநகர மன்னர்கள் காலத்திலும் இந்த மண்டபத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொள் ளப்பட்டிருக்கக்கூடும். அவர்கள் காலத்தில் சேதிராய நல்லூர் என்ற கிராமத்தையே கோயிலுக்கு மான்யமாகக் கொடுத்திருப்பதாகக் கல்வெட்டு கூறுகிறது.
கோயிலில் இறைபணி செய்பவர்களுக்கு பல சலுகைகளை சொல்லும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து கல்வெட்டு மிகப் பழைமையானது.
மகாமண்டபத்தின் மூலையில் ஒரு கல்தொட்டி இருக்கிறது. இந்தத் தொட்டியில் ஒரு காலத்தில் புலியும் பசுவும் ஒன்றாக நீரை பருகினவாம். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள், வியாக்ரபுரீஸ்வரரை தரிசித்து நல்ல நிவாரணங்களைப் பெறலாம். இந்தக் கோயிலுக்கு மிக அருகில், சிறிய முருகன் கோயில் உள்ளது. இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: உமாமகேஸ்வர குருக்கள் - 99524 40373
Comments
Post a Comment