நித்ய லிங்கம் காளஹஸ்தி பரிகாரம்!

'உலகின் உன்னதமான திருத்தலங்கள் எவை எவையோ, அவை ஒவ்வொன் றுக்கும் ஒப்பான திருத்தலம்’ என்று இறைவனே அசரீரியாக அருளிய புண்ணிய க்ஷேத்திரம் திருவேட்டீஸ்வரம். குறிப்பாக, வாயுத் தலமாம் காளஹஸ்தியைப் போன்று சிறப்பு பெற்றது. அதுமட்டுமா..? பதினேழு நித்திய லிங்கங்களில் ஒன்றை மூல மூர்த்தியாகக் கொண்டிருக்கும் புண்ணியம்பதி இது.
சென்னை திருவல்லிக்கேணியின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது திருவேட்டீஸ்வரன்பேட்டை. இங்குதான், அருள்மிகு செண்பகாம்பிகையுடன் எழிலுறக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு திருவேட்டீஸ்வரர். ஆம்! ஸ்வாமியின் பெயரையே தனக்கும் ஏற்றுச் சிறப்புப் பெற்றுவிட்டது இந்தப் பகுதி.
பழைமையான திருக்கோயில்; 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள். ஐந்து நிலைகள்; ஒவ்வொன்றிலும் சிவ தத்துவம் உணர்த்தும் அழகுச் சிற்பங்களுடன் நெடிதுயர்ந்து திகழ்கிறது, திருக்கோயில் கோபுரம்.
கொடி மரத்தின் இடப் புறத்தில் வல்லபை தேவியுடன் தனிச் சந்நிதி கொண்டிருக் கிறார் வேழமுகத்து விநாயகர். அருகிலேயே  அதிகார நந்தி சந்நிதி. அவருக்குக் காவலாக நாக ராஜாக்கள் இருவர். மூத்த பிள்ளையை வழிபட்டு, அதிகார நந்தியை மனதாரப் பிரார்த்தித்து, சிவதரிசனத்துக்கு அனுமதி வேண்டிக் கொண்டு, வலத்தைத் தொடர்கிறோம்.
திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் கோஷ்டத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர், தேவி விசாலாட்சியுடன் காட்சி அளிக்கிறார். பிரதோஷம், மகாசிவராத்திரி போன்ற புண்ய காலங்களில் இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுமாம். இவர் சந்நிதிக்கு அருகிலேயே பசுமடம் ஒன்றும் உள்ளது. அதற்கு எதிரில், வடலூர் வள்ளலார் சந்நிதி. தைப்பூசம் இவருக்கு விசேஷம். திருவீதியுலாவும் உண்டாம். தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதியாய் திகழும் ஆண்டவனையும் அடியவரையும் ஒருங்கே வணங்கி நகர்ந்தால், வடமேற்கு மூலையில் தேவியருடன் ஷண்முகப் பெருமான்.
முருகன் என்றாலே அழகுதானே?! இங்கேயும் மயில்வாகனனாய் காட்சி தரும் இந்த ஆறுமுகனை நாள் முழுக்க தரிசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு! அவ்வளவு ஈர்ப்பு, அவர் திருமுகத்தில்! தை மற்றும் ஆடிக் கிருத்திகையில் பால் காவடியுடன் சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தன்று விபூதிப் காப்புடன் திகழும் இந்த ஷண்முகரைத் தரிசிக்கக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
கந்த சஷ்டி நாட்களில் லட்சார்ச்சனையும், சூரசம்ஹாரத் திருவிழாவும் நடைபெறுகின்றன. தங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய வெற்றிக்காகவும், பகைவர் குறித்த பயம் நீங்கவும், இவர் சந்நிதியில் 'சத்ரு சம்ஹார பூஜை’ செய்கிறார்கள் அடியவர்கள். செவ்வாய்க் கிழமைகளில் இவருக்கு சிவப்பு அரளிப்பூ மாலை சாற்றி வழிபடுவதுடன், ஆறு சிறுவர்களுக்கு உணவு வழங்கி  வந்தால், சொந்த வீடு பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆறுமுகத்து அண்ணலை வழிபட்டு வலத்தைத் தொடர்ந்தால், நவகிரக தரிசனம்; அடுத்து, பைரவர் சந்நிதியுடன் வெளிப்பிராகார வலம் நிறைவுபெற்றுவிடும். எனவே, நவகிரகங்களையும் பைரவரையும் நிறைவாகத் தரிசிக்கும் முடிவுடன், மூலவரைத் தரிசிக்கச் செல்கிறோம்.
தீபஜோதியின் ஒளியில் தண்ணருள் பெருக, தன்னிகரில்லா அருள்கோலம் காட்டுகிறார் திருவேட்டீஸ்வரர். மலர் மங்கையாம் திருமகள் பெருமாளை மணம் புரியத் திருவருள் புரிந்த தயாளன் இவர்தானே? திருமகள் வேண்டி வழிபட்டதால்தானே, இவருக்கு திருவேட்டிஸ்வரர் எனும் திருநாமமும் கிடைத்தது?
செண்பக மரத்தடியில் புதையுண்டு, பின்னர் புற்றில் இருந்து வெளிப்பட்டு, இந்த நானிலம் சிறக்க இங்கே கோயில் கொண்ட மூர்த்தி அல்லவா? கண்கள் பனிக்க, நெஞ்சில் கரம் குவித்து வணங்குகிறோம்.
மிகப் பழைமையான இந்தத் தலம் குறித்தும், இங்கே இவர் கோயில் கொண்டது குறித்தும் சிலாகித்துச் சொல்கிறார்கள், இப்பகுதி பக்தர்கள். தேவார திருப்பதிகங்களில் திருநாவுக்கரசரின் காப்புத் திருத்தாண்டகத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு உள்ளது. எனவே, இதை தேவார வைப்புத்தலம் எனச் சிறப்பித்துச் சொல்கிறார்கள். மிகப் பழைமையான இந்த ஆலயம் ஒரு காலத்தில், போர் அல்லது இயற்கைச் சீற்றத்தால் முற்றிலும் சிதிலம் அடைந்து போக, மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரத்தடியில் புதையுண்டதாம். அதன் மேல் புற்றும் உருவானது.
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கதை! இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் பசு ஒன்று, தினமும் ஒரு புற்றின் மீது பால்சொரிந்து செல்வது வழக்கம். குறிப்பிட்ட இந்தப் பசுவிடம் கறவை இல்லாதது கண்டு சந்தேகம் கொண்ட பசுவின் சொந்தக்காரன், ஒருநாள் அதைப் பின்தொடர்ந்து வந்து, நடப்பதை அறிந்தான். கோபத்துடன் கோடரியைக் கொண்டு புற்றைத் தகர்த்து எறிய முற்பட்டான். அப்போது, கோடரியின் முனை, புற்றுக்குள் இருந்த லிங்கத்திருமேனியில் பட்டு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதன்பின், புற்றுக்குள் சிவலிங்கம் இருப்பதை அறிந்த மாட்டுக்காரனும், ஊராரும் அங்கே திருக்கோயில் எழுப்பி வழிபட்டனர்.
சிவாலயம் என்றால் அம்பாள் வேண்டுமே? அதற்கும் திருவருள் கைகூடியது. அருகில் செண்பக ஓடையில் சுயம்புவாகக் கிடைத்த  செண்பகாம்பிகையை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். செண்பக ஓடையில் கிடைத்ததால் இறைவிக்கு செண்பகாம்பிகை என்று திருநாமம். அந்த ஓடையே தற்போது செண்பகத் தடாகம் என்ற திருக்குளமாக உள்ளது.
இக்கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு தரும் வகையில், இருவரும் தனித்தனியாக பஞ்ச கோஷ்டத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இது வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பு! பிரதோஷ நாட்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பெற்று, பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷபத்தில் பக்தர்கள் புடைசூழ 'பிரதோஷ உலா’ வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். அதேபோல், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும், சந்திரசேகரர் வெள்ளி ரிஷபத்தில் திருவீதி உலா வருகிறார். மட்டுமின்றி, சித்திரையில் பிரம்மோத்ஸவம், ஆடி மாதம் பவித்ரோற்சவம், அம்பாளுக்கு ஆடிப்பூரம், வளைகாப்பு வைபவம், புரட்டாசி பௌர்ணமியில் இந்திரபூஜை, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபத்திருநாள், கார்த்திகை சோமாவாரத்தில் சங்காபிஷேகம், மார்கழி தனுர் பூஜை, திருவாதிரை, தைப்பூசம், கிருத்திகை, மாசி மகம், மகா சிவராத்திரி என விழாக் கோலம் காண்கிறது திருக்கோயில்.
பங்குனி மாதத்தின் முதல் வாரத்தில் மூலவரின் திருமுடியிலிருந்து திருப்பாதம் வரை தன் கிரணங்களால் தொட்டுத் தழுவி வழிபாடு நடத்துகிறான் கதிரவன். இந்த அற்புதக் காட்சியை காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சூரிய உதயத்தின்போது தரிசிக்கலாம். இச்சமயம் இறைவனை தரிசிக்கும் பேறுபெற்றோர் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.
ஸ்வாமி அம்பாள் தரிசனம் மனதை நிறைத்தது. இனி, இத்திருக்கோயிலின் கோஷ்டபரிவார தெய்வங்களை வழிபட்டு வருவோமா?
யோக தட்சிணாமூர்த்தி: ஞான உபதேசத்தை சின்முத்திரையில் காட்டி, நமக்கு யோக கோலத்தில் அருள்கிறார் இவர். வியாழக் கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், குரு பெயர்ச்சிக் காலங்களில் விசேஷ ஹோமங்கள், அலங்காரம் மற்றும் லட்சார்களையும் நடைபெறுகின்றன.
மஹாவிஷ்ணு: பழைமையான சிவாலயங்களில் உள்ளது போன்றே, இத்தலத்தில் மூலவருக்குப் பின்புற கோஷ்டத்தில்  மஹாவிஷ்ணு தரிசனம் காணக்கிடைக்கிறது. இவருக்குப் பக்கத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்கிறார். திருவோண நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம்!
பைரவர்: கோஷ்டத்தில் உள்ள பைரவருக்குத் தினமும் அபிஷேகமும், அஷ்டமி தினங்களில் அர்த்த சாமத்துக்குமுன் விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். பைரவாஷ்டமி இன்னும் விசேஷம்! இந்த நாளில் இவருக்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டால், சத்ரு உபாதை விலகும்; வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும்; தீராத பிணிகளும் தீரும்.
இவர்கள் தவிர நடராஜர், துர்கை, சோமாஸ்கந்தர், அறுபத்து மூவர், அருணாச லேஸ்வரர், கணபதி, வீரபத்திரர், சங்கிலி, பரவை நாச்சிமார்களுடன் சுந்தரர், பாலசுப்பிரமணியர், நால்வர், சந்தானக்குரவர், முத்துக்குமரர், பிரம்மேஸ்வரர், நீலகண்ட சிவாச்சார்யர், சண்டிகேஸ்வரர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.
மொகலாயர் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நவாபுகள் காலத்திலும் மானியங்கள் தரப்பட்டு, இத்தலம் சிறப்புற்றுத் திகழ்ந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் அர்த்தஜாம பூஜைக்கான (பள்ளியறை பூஜை) பால், புஷ்பம் ஆகியவை ராயப்பேட்டையில் உள்ள அமீர்மஹாலில் இருந்து, நவாபு பரம்பரையினர் மூலம் தினமும் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருக்கோயிலில் தினமும் இரவு நடைபெறும் பள்ளியறை பூஜையில் தம்பதி சமேதராகக் கலந்துகொண்டு வழிபடுவதாலும், 11 வாரங்கள் இக்கோயிலில் உள்ள அரசமரத்தை வலம் வந்து பிரார்த்திப்பதாலும், குழந்தை இல்லாத தம்பதிக்கு விரைவில் பிள்ளைக்கனி வாய்க்கும் என்பது நம்பிக்கை.
மேலும், இத்தலம் திருக்காளஹஸ்திக்கு ஒப்பானது என்பதால், அந்தத் தலத்தில் செய்வதுபோன்றே, ஜாதகத்தில் ராகுகேது தோஷம் உள்ளவர்களுக்காக இங்கேயும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. ராகுகேது பரிகாரத்துக்கு உகந்த தலம் எனும் தகவலுக்கு, மகா மண்டபத்தின் மேற்கூரையில் சந்திரசூரியர்களுடன் தென்படும் ராகு, கேது புடைப்புச் சிற்பங்கள் வலு சேர்க்கின்றன.

ஸ்படிக லிங்க பூஜை!

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜை. தினமும் காலைச் சந்தி பூஜையின்போது (சுமார் 7 மணி அளவில்) ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். மாத சிவராத்திரி தினங்களில் இரவு 9 மணி அளவில் நடைபெறும்.

இதைத் தரிசிப்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும்ம், மனச் சாந்தியும் கிடைக்கும். ஸ்படிக லிங்கத்துக்கு தேனபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்படிக லிங்க பூஜையுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன. இவற்றைத் தரிசிப்பவர்கள் சிவனருளால் வாழ்வில் உயர்நிலையை அடைவார்கள். ‘சொர்ணவேல் பூஜை’யில் கலந்துகொள்வோருக்கு தெய்வ பக்தியும், திட வைராக்கியமும் கிடைக்கும்.

Comments