அஷ்டபதி

‘பகவானுக்கு சேவை செய்ய நாம என்னிக்குமே காத்திருக்கணும். பகவானுக்குப் பணி செய்யற பாக்கியம் என்றைக்குக் கிடைக்க போகுதோன்னு நினைச்சு நினைச்சு உருகணும். பெரிய கைங்கர்யம்தான் பண்ணணும்னு கிடையாது. நம்மால முடிஞ்ச சின்னச் சின்ன கைங்கர்யங்களை, அவனை நினைத்துக்கொண்டு பண்ணினாலே போதும். ஜயதேவர் அஷ்டபதியில் இந்த, ‘கைங்கர்ய பக்தி’ பற்றி அவ்வளவு அழகாச் சொல்லியிருக்கார்" என்றார் ‘அஷ்டபதி’ என்ற தம் சொற்பொழியில் புலவர் முத்துக்கிருஷ்ணன்.
யாரெல்லாம் அஷ்டபதி பாடல்களைப் பக்தி சிரத்தையோடு பாடுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நிச்சயம் பகவானுக்குக் கைங்கர்யம் பண்ற பாக்கியம் கிடைக்கும். ‘உங்க பேரும் லிஸ்ட்ல இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சான்ஸ் தர்றேன்’னு சொல்றார் பகவான். எதையுமே தன் இஷ்டப்படி செய்பவன்தான் பகவான். ‘ஸ்வம்’ அப்படின்னா சொத்து. ‘ஸ்வா’ அப்படீன்னா தனக்குத்தானே நிர்ணயிக்கக்கூடியவன்னு அர்த்தம். அவன்கிட்ட போயி, நாம அதைக் கொடு, இதைக் கொடு, அப்படிக் கொடு, இப்படிக் கொடுன்னு ஆர்டர் பண்ணவேகூடாது. பகவானுக்குத் தெரியும், நமக்கு எதை, எப்போ தரணும்னு. சத்சங்கத்துக்குப் போறவங்களை எல்லாம் அதிர்ஷ்டசாலின்னு சொல்லிப்போம். ஆனா, நாம போக மாட்டோம். இப்படி எல்லாம் பண்ணினா புண்ணியம்னு தெரிஞ்சுக் கொண்டே அதை எல்லாம் பண்ணாம இருக்கக்கூடாது.
‘நான் நிறைய பக்தி புத்தங்கங்கள் படிச்சிருக்கேன். எனக்கு அவ்ளோ knowledge இருக்கு’ன்னு சிலர் சொல்வாங்க. நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டே இருந்தோம்னா, அதைப் படிக்கப் படிக்க ஆராய்ச்சிதான் வருமே தவிர, பக்தி வராது. பகவானோடு பக்தி யால கலந்திடணும். பகவானோடு கலக்கறவங்ளுக்கு என்ன பெருமை தெரியுமா? கண்ணனோடு இருப்பவர்களுக்கு உலகத்தைப் பற்றிய தாபம் கிடையாது. இருக்கவும் இருக்காது. வழிபாடுன்னா என்ன தெரியுமா? பகவானோடு பேசுவதுன்னு அர்த்தம். தினம் காலைல பூஜை பண்றேன் பேர்வழின்னு பகவான் முன்னாடி ஏதோ ரெண்டு ஸ்லோகங்களைச் சொல்லிட்டு, ‘பூஜையை முடிச்சிட்டேன், டிஃபன் ரெடியான்னு?’ பகவான்கிட்ட பேசற நேரத்துல, நம்ம கூட இருக்கறவங்ககிட்டேயே பேசிக்கொண்டு இருந்தோம்னா, அதுக்குப் பேரு வழிபாடு கிடையாது.
பக்தியால பகவானையே சாப்பிடத் தெரியணும். சீதா பிராட்டி கொடுத்த மாலையில் ராமரின் ருசி இருக்கான்னு பார்த்தார் ஹனுமார். யார் கிருஷ்ணருடைய பீதாம்பரத்தை சுத்தி சுத்தி பார்க்கிறார்களோ அவர்களை பிறரோட ஏளனச் சொற்கள் பாதிக்காது. ‘நீ என்னை மட்டும் பார். கேலி பேச்சுக்களை நான் தள்ளி விட்டுடறேன்’ன்னு சொல்றார் பகவான்.
காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்தவர் போதேந்திரர். பஜனை பண்ணனும்னு வெளில வந்தார். ஸ்ரீதர ஐயாவாளும் அவரோடு சேர்ந்து பஜனை பண்ணுவாராம். யாரெல்லாம் இவர்களைப் பார்த்து கேலி பேசினார்களோ, அவர்களே இவர்களைப் பார்த்து விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ற காலத்தை பகவானே உண்டுபண்ணிட்டார். மத்தவர் கேலி பண்றாங்கன்னு சத்சங்கத்தை விட்டுடக் கூடாது. மத்தவர் கேலி பண்ணாக்கூட தொடர்ந்து சத்சங்கத்துலேயே இருந்தோம்னா அவர்களே நம்மை விழுந்து வணங்கற நிலைக்கு கிருஷ்ணர் நம்மை அழைத்துக்கொண்டு போயிடுவார்.
அஷ்டபதியை பக்தியோடு சொல்பவர் இருதயத்தில் நிரந்தர வாசம் பண்ண ஆரம்பிச்சுடுவார் கிருஷ்ணர். நம்ம இருதயத்தில் வந்து பிரவேசம் பண்ணி அங்கேயே நிரந்தரமாத் தங்கிடுவார் பகவான். வீட்டை காலி பண்ணவே மாட்டார். ‘ஹே... யமுனையே உன்னில் நான் மூழ்கிடறேன். என்னிடம் இருக்கும் அழுக்கை எல்லாம் நீக்கிடு’ங்கறார் ஜயதேவர்.
இந்த உடம்பில் ஸ்வாமி இருக்கார். அதனால, அதை போற்றணும். இது பகவானின் உடம்புன்னு நினைக்கணும். இந்த உலகமும் பகவான்தான். பெண் தன்மை உடையது ஜீவாத்மா. இறைவன் என்பது ஆண் தன்மை. மீரா பிருந்தாவனத் துல ஒரு கோஸ்வாமி இருப்பதைக் கேள்விப்பட்டு, அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்று அவரை வணங்க ஆசைப்பட்டாள். அவள் அந்த ஆஸ்ரமத்தின் வாசலை அடைந்தபொழுது அந்த ஸ்வாமியின் சிஷ்யர்கள், ‘பெண்களை நாங்கள் ஆஸ்ரமத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என்று சொன்னார்களாம். உடனே மீரா, ஒரு ஓலை எடுத்து அதில் ஏதோ எழுதி அதை அவர்களது குருவிடம் ஒப்படைக்கச் சொல்லி சொன்னாளாம். சிஷ்யர்களும் அதை கொண்டுபோய் குருவிடம் கொடுத்தார்களாம். ஓலையில், ‘உங்கள் ஆஸ்ரமத்துக்கு பெண்கள் வரக்கூடாது என்றால், நீங்கள் யார்?’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த கோஸ்வாமி, ‘நீதான் என் குரு’ எனச் சொல்லி மீராவைப் பார்த்து ஓடி வந்து விட்டாராம்.
இந்த ஜீவாத்மாக்கள் பரமாத்மாவான இறைவனை அடையணும்னா அவன் சரணங்களை நினைக்கணும், அஷ்டபதியை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்யணும். உண்மையான பக்தியை மட்டும்தான் பகவான் நம்மகிட்ட கேட்கறார். அதை சந்தோஷமாத் தருவோமே!"

Comments