தண்டியடிகள் திருவாரூரில் பிறந்தவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட்கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்ற கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். ஆனாலும், இறைத் தொண்டுகள் பல செய்து வந்தார்.
ஆரூர் கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம், சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போல பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரிடம், “மண்ணைத் தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும். வருத்தல் வேண்டாம்” என்றனர்.
அதுகேட்ட தண்டியடிகள், “திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரிய வருமோ” என்றார். அமணர்கள் அவரை நோக்கி, “சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ” என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் “மந்த உணர்வும், விழிக் குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லால் வேறு காணேன். உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண் பெற்றால் நீர் என்ன செய்வீர்?” என்றார்.
அதுகேட்ட சமணர், “நீ உன் தெய்வத்தருளால் கண் பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்க மாட்டோம்” என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியை பிடுங்கி எறிந்தனர். தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் இவ்வருத்ததைத் தீர்த்தருள வேண்டினார்.
இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, “தண்டியடிகளே, உமது மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையவும் செய்கின்றோம்” என்று அருளிச்செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி, “தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட, அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக” என்று பணித்து மறைந்தருளினார்.
பொழுது புலர்ந்ததும் வேந்தன் தண்டியடிகளை அடைந்து, நிகழ்ந்த அனைத்தையும் விசாரித்து, அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்தான். பின்னர் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடிகளை நோக்கி, “பெருகும் தவத்தீர்! நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக” என்றான்.
உடனே தண்டியடிகளார், “நான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப்பெற்று, அமணர்கள் தம் கண்களை இழப்பர்” என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளி பெற்று எழுந்தார். உடனே, அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்ற முற்றனர். தாம் விதித்த நிபந்தனைப் படியே சமணர்கள் திருவாரூரைவிட்டு வெளியேறினர்.
பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டி, தண்டியடிகளை வணங்கிச் சென்றான் மன்னன். அகக் கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார்.
Comments
Post a Comment