குழந்தை நோய் தீர...

மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத்தலம் ‘வைத்தீஸ்வரன் கோயில்.’ அங்காரகனுக்குரிய திருக்கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதரா அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் ‘தன்வந்திரி‘ இத்தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத்தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத்தல சித்தாமிர்த திருக்குளத்து நீரைப் பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன என்று நம்பப்படுகிறது.
குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம் சென்று வரலாம். இது கும்பகோணத்திற்கு அருகே உள்ளது.
அரக்கோணத்திலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருமாதலம்பாக்கம். இங்குள்ள திருமாலீசர் எனும் சிவன் கோயிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் எனும் நாமத்துடன் தனிச் சந்நிதியில் அருளும் மகாவிஷ்ணுவின் ஸ்ரீனிவாசனின் விக்ரஹம் நவபாஷாண மூர்த்தங்களுக்கு இணையான மகத்துவம் கொண்டதாம்.
இவருக்கு பாலாபிஷேகம் செவிக்கும்போது பெருமானின் திருமேனியில், வழிந்தோடும் பாலும் நீல நிறத்தில் தோன்றுவதை இன்றும் தரிசிக்கலாம். தன்வந்திரி அம்சமாக அருளும் இந்தப் பெருமாளுக்கு தொடர்ந்து 11 ஏகாதசி நாட்கள் அல்லது 11 சனிக்கிழமைகளில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தைக்கு நோய்கள் நீங்கும்.

Comments