விபத்துகளில் ரக்ஷிக்கும் விபத்தாரிணி!

கொல்கத்தாவில் ராஜ்பூர் என்ற இடத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறாள் விபத்தாரிணி.
நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். வலப்புறம் உள்ள இரண்டு கைகளில் ஒன்று ‘எதற்கும் அஞ்சேல்’ என்பது போலவும், மறுகரம் ‘என்ன வரம் வேண்டும் தருகிறேன்’ என்பது போலவும் அமைந்துள்ளது. இடப்புறம் உள்ள இரண்டு கைகளில் ஒன்றில் சூலமும், மற்றொன்றில் அரிவாளும் ஏந்தி சிம்ம வாகினியாகக் காட்சி தருகிறாள்.
நமக்கு ஏற்படும் எந்த விபத்திலும் ஒருகணம் அவளை நினைத்தால் போதும். ‘நான் இருக்கிறேன் கவலைப்படாதே’ என்று நமக்கு அபயம் அளிக்கிறாள். வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதி. ஏராளமானோர் தங்கள் வாகனங்களுக்கு இங்கு பூஜை செய்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் அவளை தங்களுடைய அம்மாவாகவே பார்த்து பூரிக்கிறார்கள்.
வீட்டிலோ அல்லது வெளியிலோ நம்மை எந்த ஒரு தீங்கும் அண்டாமல் பார்த்துக் கொள் கிறாள் இந்த ‘விபத்தாரிணி சண்டி’. இங்கு ஜுலை மாதம் நடைபெறும் சண்டி பூஜை மிகவும் பிரசித்தம். மேலும், நவராத்திரி துர்கா பூஜையும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் தீபாவளியன்று இரவு நடைபெறும் ‘அன்னகூட்’ பூஜையும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இங்கு வந்து பிரார்த்தனை செய்து பலன் அடைந்த பக்தர்கள் ஏராளம். நீங்களும் இங்கு (கொல்கத்தா) வரும்போது அம்மனை தரிசனம் செய்து பயனடையலாம்.

பரிவுள்ளம் கொண்ட பெரியாண்டவர் தேவி!
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கண்ணூர்பட்டி என்ற கிராமம். இங்கு குடிகொண்டிருக்கும் தேவி, சிவபெருமானின் திருப்பெயரான பெரியாண்டவர் என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறாள். தாமரை பீடத்தில் சயனித்த நிலையில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஒரு காலத்தில் இப்பகுதியில் அந்தணர்களில் ஒரு பிரிவான பிரஹச்சரண வகுப்பைச் சேர்ந்தவர்களே வாழ்ந்து வந்தனர். அக்ரகாரத்தில் அமைதியாக வாழ்ந்து வந்த இவர்கள் ஒரு காலகட்டத்தில் கொள்ளையர்களுக்குத் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்துத் தவித்தனர். இதையடுத்து, தங்கள் பிரச்னைகள் தீர அனைவரும் ஒன்று கூடி ஊருக்கு வெளியே மரங்கள் அடர்ந்த ஒரு காட்டின் நடுவே தேவியை வனதுர்க்கையின் அம்சமாக பெரியாண்டவர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். உக்கிரமான தேவியின் பார்வை தங்கள் மீது படக்கூடாது என்பதற்காக தேவியை வானத்தைப் பார்த்து சயனித்த நிலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
தேவியின் உக்கிரத்தைத் தணிக்கின்ற வகையில் 1910 ஆம் ஆண்டு ஊர்மக்கள் ஒன்றுகூடி பிரச்சனம் பார்த்து காஞ்சி சங்கராச்சாரியார் வழிகாட்டுதலின்படி அதற்கான யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். தற்போது சாந்த சோரூபியாக இருந்து மக்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி வருகிறாள். மேலும் பெரியாண்டவர் கோயிலில் இருந்து அர்ச்சகர் தேவியின் புடைவையுடன் வெளிவருவதை யாரேனும் பார்க்க நேர்ந்தால் அவர்கள் தேவியை குலதெய்வம்மாக வழிபடவேண்டும் என்பது மரபாம். தற்போது தினமும் இரண்டு வேளைகள் பூஜை நடைபெற்று வருகிறது. முக்கியமாக பக்தர்கள் புடைவை காணிக்கை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.


Comments