அம்பாளை சரணடைவோம்...

'பெண்களுக்குப் பாதுகாப்பு தருகிற தேசம்தான், செழித்து வளரும்; அவர்களைப் போற்றுகிற வீடுதான் சுபிட்சம் அடையும் என்கிறது சாஸ்திரம். அப்படிப் பெண்களைப் பாதுகாத்துப் போற்றுகிற பணியைச் செய்வதே நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்'' என்கிறார், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலின் சண்முக சிவாச்சார்யர்.
''ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அப்படி, வெற்றிக்குக் காரணமாக இருக்கிற பெண்களை நாம் கொண்டாட வேண் டும். இதையே சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
அம்பிகையை சக்தி என்கிறோம். தேவி வழிபாட்டை, பெண் தெய்வ வேண்டுதலை, சக்தி வழிபாடு என்றும் ஸாக்த வழிபாடு என்றும் சொல்வார்கள். அதனால்தான் பெண்களையும் சக்திமிக்கவர்கள் என்றும், சக்தியின் அம்சம் என்றும் போற்றுகிறோம்.
ஒரு பெண்ணுக்குக் கிடைக்கிற கல்வி, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பரவிச் செல்லும் என்பதுபோல, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கிற இறைசக்தியானது, மெள்ள மெள்ள அந்த வீடு முழுவதும் பரவும்; அடுத்தடுத்த தலைமுறை வாழையடி வாழையாக செழிக்கவும் சிறக்கவும் பலமாக இருக்கும்.
ஒரு வீட்டின் இதயமாகத் திகழும் பெண் களைக் கொண்டாட காரடையான் நோன்பு, சுமங்கலி பூஜை என எத்தனையோ பூஜைகளும் வழிபாடுகளும் இருக்கின்றன. ஆனால், இவற்றை யெல்லாம்விட மகத்துவமும் தனித்துவமும் கொண்ட, பெண்களுக்கான விசேஷ பூஜை ஒன்று உண்டு. அது, 'சுவாஸினி பூஜை’!
'வஸ்’ என்றால் தங்குதல் என்று அர்த்தம். 'வாஸினி’ என்றால் தங்குபவள் என்று பொருள். 'சு’ என்பது அம்பாளின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் குறிக்கும். 'சுவாஸினி’ என்றால், முழுமையான சக்தியுடன் தங்குபவள் என்று அர்த்தம்!'' என்று சிலிர்க்கும்படி விவரித்தார் சண்முக சிவாச்சார்யர்.

''பிட்சம் என்றால் பிட்சை; அத்துடன் முதல் எழுத்தாக 'சு’வைச் சேர்த்தால், சுபிட்சம் என்றாகிறது அல்லவா! 'ப்ரபாதம்’ என்றால், காலை என்று அர்த்தம். 'சு’ எனும் எழுத்தைச் சேருங்கள். சுப்ரபாதம் என்றாகிவிடுகிறது. இதற்கு 'நல்ல காலைப்பொழுது’ என்று அர்த்தம். அதுபோல, சுவாஸினி என்றால், முழுமையாகத் தங்குபவள், முழு ஆற்றலுடன் தங்குபவள் என்று பொருள்.
இந்த சுவாஸினி பூஜையில், சக்தி எனப்படும் அம்பாளின் முழு ஆற்றலும் வெளிப்படும், வியாபித்திருக்கும் என்கின்றன வேதநூல்கள். மற்ற பூஜைகளுக்கு இருப்பதைவிட மிகக் கூடுதலான பெருமையும் சக்தியும் சுவாஸினி பூஜைக்கு உண்டு. அதாவது, பூஜைக்கு வரும் பெண்களே சுவாஸினி பூஜையை, அம்பிகை வழிபாட்டைச் செய்யப் போகிறார்கள். அப்படிச் செய்வதற்கு முன்னதாக, அவர்களே அம்பிகையாக மாறி, அந்த பூஜையைச் செய்வார்கள் என்பது பெண்களுக்கு மட்டுமே கிடைக்கிற பெருமை.
வாழ்வில் ஒரேயொரு முறை சுவாஸினி பூஜையில் கலந்துகொண்டு, அம்பிகையாக உங்களை வரித்துக் கொண்டு, அந்த ஜகன்மாதாவை, கருணைத் தாயை மனதார பூஜித்தால் போதும்; சீக்கிரமே உங்கள் துயரங்களும் துன்பங்களும் அகன்று, உங்கள் இல்லத்தில் நல்ல விஷயங்கள் நடக்கத் துவங்கிவிடும். இது சத்தியம்!'' என்று உறுதிபடச் சொல்கிறார் சண்முக சிவாச்சார்யர்.
''இந்த சுவாஸினி பூஜையை, அமெரிக்காவில் வாஷிங்டன் முதலான பல இடங்களில் நடத்தி யிருக்கிறோம். மிகுந்த ஆர்வத்துடன் பெண்கள் கலந்து கொள்வதைப் பார்ப்பதே அத்தனை சந்தோஷமான செயல். வாசகர்களுக்கு நல்ல நல்ல விஷயங்களை அடையாளம் காட்டி, அதை அவர்களுக்காக முன்னின்று நடத்தி வரும் சக்திவிகடன், இந்த முறை 'சர்வதேச பெண்கள் தினம்’ எனப்படும் மார்ச் 8ம் தேதி அன்று, மிகப்பெரிய அளவில் சுவாஸினி பூஜையை நடத்துகிறது என்பதும், அந்தத் திருப்பணியில் அடியேனையும் சேர்த்துக்கொண்டிருப்பதும் மகா பாக்கியம்.
இந்த பூஜையில் கலந்துகொள்ள வரும் பெண்கள், முன்னதாக சிறிய அளவில் விரதம் இருப்பது நல்லது. ஞாயிற்றுக் கிழமை  பூஜை. எனவே, வியாழக்கிழமையில் இருந்து விரதத்தை மேற்கொள்ளலாம். அசைவ உணவைத் தவிர்ப்பதும், தேவையற்ற விஷயங்கள் குறித்துப் பேசுவதும் செயல்படுவதும் வேண்டவே வேண்டாம். பெண்கள், விரத அனுஷ்டானத்தில் இருந்தால், வீட்டில் உள்ள எல்லோருமே ஓர் ஒழுங்குக்கு வந்துவிடுவார்கள். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்காமல் இருப்போம். வியாழக்கிழமை விரதம் துவங்கி, வெள்ளிக்கிழமை காலையில் 'மலாபகர்ஷண ஸ்நானம்’ செய்வது உடலையும் மனதையும் இன்னும் தூய்மையாக்கிவிடும். மலம் என்றால் அழுக்கு. மலம், அபகர்ஷண ஸ்நானம் என்றால், அழுக்கை அறவே நீக்குகிற குளியல். எண்ணெய், சிகைக்காய் பயன்படுத்திக் குளிப்பது சிறப்பு!
இந்த விரத அனுஷ்டானமும் நியமமும், அம்பிகையின் ஸ்தானத்தில் உட்கார்ந்து பூஜை செய்வதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.பூஜையின் நிறைவாக, பெண் களே தீபாராதனை செய்து, இதைப் பூர்த்தி செய்வார்கள்.
இந்த பூஜையில் கலந்து கொள்கிற அத்தனை பெண்களின் குடும்பங்களும் சுபிட்சம் அடையப்போவது உறுதி. ஒற்றுமை மேலோங்கி, சகல ஐஸ்வரியங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழப் போகிறீர்கள் என்பது நிச்சயம்!'' என்று உணர்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார் சண்முக சிவாச்சார்யர்.

Comments