மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம் என்கிற சொல், இப்போது பலராலும் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இது மிகப் பழங்காலத்தில் செயலாகவே - நடைமுறையில் இருந்தது என்று உணர்த்துகின்றன கல்வெட்டுகள்.
முதலாம் ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை பிராட்டியார் வந்தவாசி அருகே இராஜ ராஜபுரம் (தற்பொழுது தாதாபுரம் என அழைக்கப்படுகிறது) என்ற ஊரில், குந்தவை விண்ணகர் (கரிவரதபெருமாள் கோயில்), ரவி குல மாணிக்கேசுவரர் (மணிகண்டேசுவரம் திருக்கோயில்), குந்தவை ஜீனாலயம் என்ற சமணக் கோயில் போன்றவற்றை எழுப்பி அதன் வழிபாட்டுக்காக தானம் அளித்த செய்தியினை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும், வேலூர் மாவட்டம் போளூர் அருகே குந்தவை ஜீனாலயம் கோயிலையும் கட்டியதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இதேபோன்று நாகப்பட்டினத்தில் சைலேந்திர மன்னன் ஸ்ரீ மாற விஜயோத்துங்கவர்மனால் அவனது தந்தை பெயரால் சூடாமணி விஹாரம் எடுப்பிக்கப் பட்டது. இந்த பௌத்த திருக்கோயிலுக்கு ‘இராஜ ராஜப் பெரும்பள்ளி’ எனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளிக்கு (கோயிலுக்கு) ஆனைமங்கலம் என்ற ஊரினைப் பள்ளிச் சந்தமாக அளித்தான் ராஜராஜன் என சோழர் கால ‘லெய்டன் செப்பேடு’ கூறுகிறது. இவ்வூரில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் காணப்படும் கல்வெட்டில் ‘ராஜராஜப் பெரும் பள்ளியான ஸ்ரீ மாகேசுவரப் பெரும்பள்ளி’ எனக் குறிப்பிடுவதனால் சைவமும் - பௌத்தமும் ஒருங்கே சிறப்புற்று விளங்கியதை அறிய முடிகிறது.
இதேபோன்று முஸ்லிம் சமூகத்தினரும் கும்பகோணம் அருகில் உள்ள கொரநாட்டுக் கருப்பூர் கோயிலுக்கும், இராமநாதபுரம் அருகே உள்ள உத்திர கோசமங்கை கோயிலுக்கு உலோகத்தினால் ஆன திருவாசி தானம் அளித்ததை அறிய முடிகிறது.
இந்து சமயத்தைச் சேர்ந்த அரசர்களும் அரசிகளும் மசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் தானம் அளித்துள்ளதையும் அறிய முடிகிறது. நாயக்க அரசி மங்கம்மாள் கொடுத்த தானத்தைப் பற்றி ஒரு செப்பேடு குறிப்பிடுகிறது. விஜயரெங்க சொக்கநாதரின் தேவியான மீனாட்சி அரசி திருச்சிக்கு அருகே உள்ள நிலங்களை பள்ளிவாசலுக்கு தானம் அளித்ததை ஒரு செப்பேடு குறிப்பிடுகிறது.
நாகூரில் உள்ளது ‘அசரத் ஒலி தர்க்கா.’ இந்த தர்க்காமினார் (கோபுரம்) கட்டுவதற்கு தஞ்சை மராட்டிய அரசர் துளஜா நிலம் அளித்தார். அதில் அவர் மகன் பிரதாப்சிங் நாகூர் தர்க்காவில் 11 நிலை கொண்ட மினார் கட்டி அளித்ததாக அங்கு காணும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சுவாமி ஊர்வலம் வரும்பொழுது பல ஊர்களிலும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்தவர்கள் அன்புடன் வரவேற்று உபசரிப்பது இன்றும் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம், ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீவராகப் பெருமாள் மாசிமகம் அன்று கிள்ளை என்ற ஊருக்கு தீர்த்தவாரி வைபவத்துக்காகச் செல்கிறார். செல்லும் வழியில் தைக்கால் என்ற ஊரில் முஸ்லிம் சமூகத்தினர் பெருமாளை வரவேற்று வழிபாடு செய்வதைக் காணலாம்.
பெருமாள் இங்கு தங்கி செல்ல ஒரு மண்டபம் உள்ளது. உப்பு வெங்கட்ராயர் என்பவர் அங்கு தாசில்தாராகப் பணியாற்றியபொழுது சையத்ஷா குலாம் மொஹதீன் அவர்களால் அந்நிலம் தானமாக அளிக்கப்பட்டது. இவ்வருவாயைக் கொண்டு ஸ்ரீ முஷ்ணம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம், கிள்ளை தைக்கால் மண்டகப்படி போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் முஸ்லிம்கள் பலர் இறைவன் நினைவாக பூராசாயுபு (பூவராக சாயுபு) எனப்பெயர் கொண்டிருப்பது மதம் கடந்த இறையன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாவது பிராகாரத்தில் அமைந்துள்ள ‘துலுக்க நாச்சியாருக்கு’ இன்றும் வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோதும் தமிழக ஆட்சியர்கள் கோயில்களின் பால் மதிப்பு கொண்டு தானம் அளித்துள்ளனர். 1826-ல் தென் ஆர்க்காடு மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஹைட் (HIDE) என்பவர் ஸ்ரீ முஷ்ணம் கோயிலுக்கு அணிகலன் களும், தேர்வட இரும் புச் சங்கிலியும் அளித்துள்ளார்.
பவானி ஆட்சியராக இருந்த வில்லியம் கேரோ என்பவர் பவானி சங்கமேசுவரர் கோயிலில் உள்ள வேதநாயகி அம்பி கைக்கு, தந்தத்தால் ஆன ஊஞ்சல் செய்து காணிக்கையாக அளித்தார். அதில் 'W.GORROW - II JANUARY 1804' என்று கையெழுத்திட்டுள்ளதைக் காணலாம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் எழுந்தருளும் ‘தோளுக்கினியான்’ என்ற பல்லக்கை 1813-ல் திருச்சிராப்பள்ளி ஆட்சியர் GEORGE FRANCIS TREVERS என்பவர் பழுது பார்த்தார் என்று அதில் காணும் கல்வெட்டு கூறுகிறது.
இதேபோன்று, மதுரை திருக்கோயிலை நிர்வகித்தவர்களில் Rous Peter (1812-1828) என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவரை, ‘பீட்டர் பாண்டியன்’ என்றே மக்கள் குறிப்பிட்டனர். 1819-ல் மதுரை திருக்கோயிலில் வீரவசந்தராயர் மண்டப வாயிலை அழகிய வேலைப்பாடு மிக்க விளக்கு தோரணத்தால் அலங்கரித்தார். இதில் காணப்படும் கல்வெட்டுப் பொறிப்பில் ‘மாவட்ட ஆட்சியர் ரோஸ் பீட்டர் ஆணைக்கு இணங்க மதுரை மாடக்குளம் வட்டாட்சியர் சையது இசுமாயில் அனைத்து மக்களுக்குமாக அமைத்தார்’ என்ற செய்தியைக் கூறுகிறது. இதற்கான செலவு, ஆசாரிகளின் பெயர் போன்ற விபரங்கள் 66வரிகளில் கல்வெட்டுப் பொறிப்பாகக் காணப்படுகிறது.
இறைவன் ஒருவன் தான்! அவரைச் சென்று அடைவதற்கு பல வழிகள் இருப்பது போல, பல மத நம்பிக்கைகளும் உள்ளன. அந்த மத நல்லிணக்கம் பண்டைக்காலத்திலேயே மிகவும் சிறந்திருந்தது என்பதற்கு கல்வெட்டுகள் சான்று பகர்வதோடு, அது மேலும் தொடர வேண்டும் என்றும் வழிகாட்டுகின்றன.

Comments