'விளக்கேற்ற நினைத்தாலே சுபிட்சம் நிச்சயம்!’

''வீட்டில் தினசரி விளக்கேற்றினாலும் சரி... இதோ, இப்படி விளக்கு பூஜையில் பங்கெடுத்துக்கொண்டாலும் சரி... நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும். எனவே, இதுபோன்ற வாய்ப்புகளை ஒருபோதும் நழுவவிட்டு விடாதீர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், விளக்கு பூஜை எனும் கூட்டு வழிபாட்டில் ஈடுபடுங்கள். அது நம் வீட்டுக்கு மட்டுமின்றி, நம் நாட்டுக்கே நன்மைகளைத் தரும்!''

சிறப்பு விருந்தினரான முனைவர் கே.கருணாகரப் பாண்டியனின் சிறப்புரை சுவாரஸ்யம். ''இரணியன் எனும் அரக்கனை நரசிம்மர் அழித்தது பகலும் அல்லாத இரவும் அல்லாத அந்திவேளையில்! அதனால்தான் இந்த நேரத்தில் வீட்டு வாசலை தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்து, கோலமிட்டு, வீட்டில் விளக்கேற்றுகிறோம். இதனால் தீய சக்திகள் எதுவும் நம் இல்லத்துக்குள் அண்டாது'' என்று சொன்னபோது, சிலிர்ப்புடன் கைதட்டியது வாசகியர் கூட்டம்.
''ஒருவனுக்குத் தொட்டதெல்லாம் துன்பமாயிற்று. வியாபாரத்திலும் நஷ்டம்! 'என்னடா இது’ என்று சலித்துக்கொண்டவனிடம், 'அந்த ஜோதிடர் மிகச் சரியாக ஜாதகம் கணித்துச் சொல்கிறாராம். போய்ப் பாருங்களேன்’ என்றாள் மனைவி. அதன்படி, ஜோதிடரிடம் சென்றான். ஜாதகம் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார் ஜோதிடர். 'இன்னும் மூன்று நாளில் அவன் ஆயுசு முடியப் போகிறது’ என அறிந்தார். ஆனால், அவனிடம் எதுவும் சொல்லாமல், 'மூன்று நாட்கள் கழித்து வா! பார்க்கலாம்’ என்று அனுப்பிவிட்டார்.
'அடச்சே... உப்பு விற்கப் போனா மழை பெய்யுது. மாவு விற்கப் போனா காத்தடிக்குது. நல்ல நேரம் எப்பனு தெரிஞ்சுக்கறதுக்குக் கூட நல்ல நேரம் தேவைப்படுதுபோல!’ என்று பொருமிக் கொண்டே நடந்தான். அப்போது திடீர் மழை.விறுவிறுவென அருகில் இருந்த மண்டபத்துக்குள் ஓடி, நின்றுகொண்டான். அங்கே அந்த மண்டபம் இடிந்து கிடந்தது. அங்கே இருந்த சிவலிங்கம், புதர் மண்டிக் கிடந்தது. அதன் அருகில், கல் விளக்கு ஒன்று கவிழ்ந்து கிடந்தது. அதைப் பார்த்தவன்,
'அப்பனே, சிவனே! உனக்கே இந்த கதியா? எங்கிட்ட மட்டும் காசு இருந்தா,  உனக்குச் சின்னதா கோயில் கட்டி, தினமும் விளக்கெரியும்படி பண்ணிருப்பேனே’ என நினைத்துக்கொண்டான். மழை நின்றது. வீட்டுக்குச் சென்றால், வராத கடன் வந்து விட்டதையும், பண்ணை முதலாளி பசுக்களைக் கொடுத்துப் பார்த்துக் கொள்ளச் சொன்னதையும் தெரிவித்தாள் மனைவி.
அடுத்து மூன்று நாள் கழித்து ஜோதிடரைப் பார்க்க, அவருக்கோ அதிர்ச்சி! ''உன் ஜாதகப்படி இந்நேரம் உன் விதி முடிந்திருக்கவேண்டுமே! என்னைப் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு என்ன வெல்லாம் நடந்தது?’ என்று கேட்க, சகலத்தையும் விவரித்தான் அந்த வியாபாரி. உடனே ஜோதிடர், ''ஆஹா! விளக்கேற்றுவதாக நினைத்தாயே... அந்த நினைப்பே உன் விதியை மாற்றிவிட்டது. அந்த நல்லெண்ணமே உனக்குப் புண்ணியத்தைத் தந்து, உன் ஆயுளை பலப்படுத்தியிருக்கிறது. இனி, நீ நல்லபடியாக வாழ்வாய்!’ என்றாராம்.

விளக்கேற்றுவேன் என்று மனதார நினைத்ததற்கே, ஒருவரின் ஆயுள் பலமாகியிருக் கிறது; பொருள் கிடைத்துச் செல்வந்தராகிவிட்டார் என்றால், இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டு, வீட்டிலும் தினமும் விளக்கேற்றுகிறீர்களே... உங்களுக்கு அருள்மழை கிடைப்பது உறுதி!'' என்று சிறிய கதை மூலம், விளக்கின் மகிமையை முனைவர் கருணாகரப் பாண்டியன் விவரிக்க, மொத்த பெண்களும் அதை ஆமோதிக்கும் விதமாக பலத்த கரவொலி எழுப்பினார்கள்.
அதையடுத்து, சாந்நித்தியத்துடன் நடந்தது திருவிளக்கு பூஜை. பூமதி, ரேணுகா, சுசீலா ஆகியோர் ஒருமித்த குரலில், போற்றிப் பாடல்களைப் பாடியதைக் கேட்கக் கேட்க, நெக்குருகிப் போனார்கள் வாசகிகள். நிறைவாக, மங்களேஸ்வரி எனும் வாசகி, 'ஒரேயொரு பாட்டுப் பாட அனுமதி கிடைக்குமா?’ என்று கேட்டார். ''திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா....'' என்று பாட, மூலவர் ஸ்ரீமதனகோபால ஸ்வாமி சந்நிதியில் இருந்த பக்தர்கள் பலரும், பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்துவிட்டார்கள்- திருவிளக்கு பூஜையை நடத்த வந்த சிவத் தொண்டர் மாரிமுத்துவின் பேச்சே ஒரு நல்ல குட்டிப் பிரசங்கம்போல் இருந்தது.ஆனாலும், இப்படி ஆன்மிக உரை, இதோ... இப்படியொரு பாட்டுனு எல்லாமே புதுசாவும் புத்துணர்ச்சியாவும் இருக்கு. இதுல குளிர்ந்து போய், இங்கே வந்திருக்கிறவங் களோட எல்லா வேண்டுதல்களையும் ஈடேற்றித் தந்திடுவார் ஸ்ரீமதனகோபால ஸ்வாமி, பாருங்களேன்'' என்று வந்திருந்தவர்கள் சார்பாக, வாசகி வந்தனா சொல்ல... கலந்துகொண்ட பெண்களின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி!
 

Comments