கால சம்ஹாரர்

சிவதாண்டவங்களில் இப்போது நாம் காணப்போவது சம்ஹார தாண்டவம். சம்ஹாரம் என்பது அழிவு என்று பொருள்படக் கூடியதுதான். ஆனால், பெருமான் அழிப்பதே இல்லை. தன்னிலிருந்து வெளிப்பட்டவற்றை மீண்டும் தன்னுள் ஒடுக்குகிறார். பிறகு, மீண்டும் சிருஷ்டியாக வெளிப்படுத்துகிறார் என்கின்றன தத்துவங்கள்.
அந்த வகையில், சம்ஹார தாண்டவம் என்பதும் பிரளய தாண்டவம் என்பதும் ஒன்றே என்றும் சில புராணக் குறிப்புகள் உணர்த்துகின்றன. எட்டுக் கைகளுடனும், மூன்று கண்களுடனும் காணப்படும் இறைவனின் ஊழிக் கூத்தாக வர்ணிக்கப்படும் இது, இறைவன் தனக்குள் இந்தப் பிரபஞ்சத்தை ஒடுக்கும் வேளையில் ஆடப்படும் கூத்தாகச் சொல்லப்படுகிறது.
அபஸ்மார புருஷனை அடக்கும் இடக் காலுடனும், வலக்கால் தூக்கிய நிலையிலும், வலக்கைகளில் அபய ஹஸ்தம், சூலம், உடுக்கை; இடக் கைகளில் மண்டை ஓடு, அக்கினி மற்றும் கஜஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகிறார். வலப் பக்கம் நந்தியும், இடப்பக்கம் கௌரியும் காணப்படுகின்றனர்.
இந்த சம்ஹார தாண்டவத்தை காலசம்ஹார மூர்த்தியாக வெளிப்பட்ட சிவபிரான் ஆடியதாகவும் ஒரு குறிப்பு உண்டு. அதற்குக் காரணமானவர் மார்க்கண்டேயன்.
கௌசிக முனிவரின் மகன் மிருகண்டு மகரிஷி, இவர் முத்கல மகரிஷியின் புதல்வியான மருத்துவதியை மணந்தார். இருவரும் இறை சிந்தனையுடன் இல்வாழ்க்கையை இனிதே நடத்தி வந்தனர். நீண்ட நாள் கடந்தும், குழந்தைப்பேறு அமையவில்லை. எனவே, தவம் மேற்கொண்டார் மிருகண்டு மகரிஷி.
அவரின் தவத்தை மெச்சி தரிசனம் தந்த இறைவன், நோயும், அஞ்ஞானமும், தீர்க்காயுளும் உடைய நிறைய குழந்தைகள் வேண்டுமா? அல்லது ஞானமும், ஒழுக்கமும் மிக்க பதினாறு ஆண்டு ஆயுள் மட்டுமே உடைய ஒரே மகன் வேண்டுமா?" என்று கேட்டார். இரண்டாவது வரத்தையே கேட்டார் மகரிஷி. இந்த வரத்தின் பயனாகப் பிறந்தவன் மார்க்கண்டேயன்.
கல்வி, கேள்விகளில் தலைசிறந்து விளங்கினான் மார்க்கண்டேயன். சகல சாஸ்திரங்களையும், வேதங்களையும் கற்றுத் தேறினான். அவன் வளர வளர அவன் பெற்றோர்க்கு ஒருபுறம் மகிழ்ச்சி; மற்றொரு புறம் அச்சம். உரிய நேரம் வந்தால் மகன் தங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிடுவானே என்று கலங் கினார்கள். அவனது பதினாறாம் பிறந்த தினம் வந்தது. காலதேவனான எமதர்மன் தன் கடமையை நிறைவேற்ற மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தான். அப்போது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சிவலிங்கத்தை பூஜித்துக் கொண்டிருந்தான் மார்க்கண்டேயன். அந்தநேரம் அவனது உயிரை எடுக்க எமனும் வந்துவிட்டான்.
தனது தவத்தின் வலிமையால் மார்க்கண்டேயனுக்கு வந்திருப்பவன் எமன் என்று பார்க்க முடிந்தது. உடனடியாக அமிர்தகடேஸ்வரரான லிங்கத்தைக் இறுக அணைத்துக் கொண்டான்.
எமனும் அவன் உயிரைப் பறிக்க தன் பாசக்கயிறை வீசினான். அது சிவலிங்கத்தையும் சேர்த்து விழுந்தது. கயிற்றை பலமாக இழுத்தான். ஆனால், அவனால் இழுக்க முடியவில்லை. தன்மீது பாசக்கயிற்றை வீசி இழுத்த எமனைக் கண்டு கோபம் கொண்ட சிவபெருமான், லிங்கம் பிளந்து வெளியே வந்தார்.
எனக்கும் சேர்த்தா பாசக் கயிறு வீசுகிறா?" என்று கோபத்தில் கர்ஜித்தவர் எமனை எட்டி உதைத்தார். கையில் இருந்த சூலாயுதத்தினால் காலனைச் சம்ஹாரம் செய்து, ‘கால சம்ஹாரமூர்த்தி’ ஆனார். மார்க்கண்டேயனை என்றும் பதினாராக வரம் தந்தார்.இதற்குப் பின் உள்ள தத்துவம் என்ன?
எல்லோரும் இறைவனின் திருவடிகளை தங்களுடைய தலையில் ஏற்க விரும்புவார்கள். ஆனால், எமன் மட்டுமே இறைவனின் பாதங்கள் தம் மார்பிலேயே பதிய வேண்டும் என ஆசைப்பட்டான். உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என தவம் இயற்றினான் எமன். அது நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான் என்பது இதன் நுட்பமான பொருள்.
இந்த சம்பவத்துக்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. சிவன் மாதொரு பாகன் அல்லவா? ஈசன் திருமேனியில் இடதுபுறம் அன்னை உமா தேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும், தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனை, தனது இடது காலால்தான் உதைத்தான் ஈசன். இடப்பாகம் சக்தியினுடையது. எனவே, இது சிவனின் திருவடியல்ல; அன்னை பார்வதியின் திருவடிதான். தமது கடமையை நிறைவேற்றிய எமனை சிவன் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே எமதர்மனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியமுள்ளவனாகச் செய்தது. இது திருக்கடவூர் தல புராணக் கதை.
பிரதானமான தாண்டவங்கள் என்று சொல்லப் படுபவை இவைதான். என்றாலும், இன்னும் சில தாண்டவங்கள் முக்கியமானவை. ஈசனுக்கு பிஞ்ஞகன் என்ற பெயர் உண்டு. பிஞ்ஞகம் என்பதற்கான பெயர் காரணம் மயில் தோகையுடன் ஆடுபவன் என்பதே. சிவன் அழகான மயில் தோகையுடன் ஆடும் தாண்ட வத்தைத்தான் ‘பிரதோஷ தாண்டவம்’ என்பார்கள். மயில் தோகையில் விசிறும்போது உண்டாகும் காற்றுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு. எனவேதான், சிவன் மயில் தோகையுடன் பிரதோஷ தாண்டவம் ஆடுகிறார்.

Comments