வாத நோய் தீர்க்கும் திருவாதவூர் திருத்தலம்!

துரையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். வாதபுரம், வாயுபுரம், பிரம்மபுரம், பைரவபுரம், சம்யாகவனம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஊர், பாண்டிநாட்டு வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கே, திருமறைநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார் சிவனார்.
மாணிக்கவாசகரின் அவதாரத் தலம் இதுவே! கபிலர் பிறந்ததும் இங்குதான். 'வேதம் நானே!’ என திருமாலுக்கு சிவனார் உணர்த்தி உபதேசித்த தலமும் திருவாதவூர் எனப் போற்றுகிறது ஸ்தல புராணம்.
அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக, பிருகு முனிவரின் மனைவி கியாதியின் தலையைக் கொய்துவரும்படி, திருமால் தன் சக்ராயுதத்தைப் பணித்தார். அதன்படி, கியாதியின் தலையைக் கொய்து, அசுரர்களையும் சிதைத்து அழித்தது சக்ராயுதம்.
திருமாலால் தன் மனைவி கொல்லப்பட்டதை அறிந்த பிருகு முனிவர், 'நீ பூவுலகில் பல பிறவிகள் எடுப்பாய். மேலும் ஒரு பிறவியில் தேவியை இழந்து, மனம் நொந்து, வேதனை அடைவாய்’ என திருமாலுக்குச் சாபமிட்டார். அப்போது, 'சிவலிங்க பூஜை செய்து வந்தால், உன் சாபத்துக்கு விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி கேட்டது. அதன்படி, இங்கே வந்து சிவனாரை வணங்கிப் பலன் பெற்ற திருமால், அருகில் உள்ள திருமோகூர் எனும் தலத்தில், ஸ்ரீகாளமேகப் பெருமாள் எனும் திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார்.
அற்புதமான திருத்தலம் திருவாதவூர். ஸ்வாமி ஸ்ரீதிருமறைநாதர். அம்பாள் ஸ்ரீவேதநாயகி. மாணிக்கவாசகர் அவதரித்த தலம் என்பதால், இங்கு அவருக்கு சந்நிதி அமைந்துள்ளது. ஸ்தல விருட்சம் மகிழ மரம்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் திங்கள்கிழமையில் 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்றும், இந்த இடத்தில் இருக்கும்போதுதான், மாணிக்கவாசகருக்கு தன் பாதச் சிலம்பொலியைக் கேட்கச் செய்தார் சிவனார் என்றும் சொல்வர்.
மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான், இந்தத் தலத்தின் சிவனாரை வழிப்பட்டதால், சாபம் நீங்கப் பெற்றார். இங்கு சனீஸ்வரனை வழிபட்டால், எத்தகைய வாத நோயும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். சனீஸ்வரர் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பது, இந்தத் தலத்தின் கூடுதல் விசேஷம்.
சிவதீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம் இது. இவற்றில் நீராடினால் அல்லது தீர்த்தத்தை சிரசில் தெளித்துக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Comments