தினமும் வேலைக்குப் போவதற்கு முன் சாமி கும்பிட்டுவிட்டுப் போடா’ என்று பேரனிடம் சொன்னால், 'அதுக்கெல்லாம் நேரம் இல்லை தாத்தா’ என்று அங்கலாய்த்துக்கொள்கிறான். இவன் மட்டுமில்லை; இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆன்மிகம் மற்றும் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை இவர்களுக்கு உணர்த்துவது எப்படி?

முதல் கோணம்...
பிறந்த குழந்தை, மூன்றரை வயதில் பள்ளியில் நுழைந்துவிடும். கல்வி முற்றுப்பெற 23 வயது வரை கற்க வேண்டியிருக்கும். ஆராய்ச்சியில் நாட்டம் இருந்தால், கல்வியானது 28 வயது வரை தொடரும். இன்றையச் சூழலில் கல்வி, ஆணுக்கும் பெண்மைக்கும்  சமம்தான். இளமையை எட்டியதும் திருமணத்தில் இணைய வேண்டும். வாழ்க்கையை நடைமுறைப்படுத்த, ஒரு வேலையில் நுழையவேண்டும்.
லோக சுகங்களைச் சுவைக்க பணம் சேமிக்க வேண்டும். பகல் முழுவதும் குடும்ப விஷயங்களிலும், லோக விஷயங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கும். அவ்வப்போது தென்படும் இன்னல்களை அகற்ற, முழுமூச்சுடன் போராட வேண்டி வரும். தாம்பத்தியத்தில் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களைப் பராமரித்து, கல்வி புகட்டி வளர்க்கவேண்டும். வயதான தாய்தந்தையையும் கவனிக்கவேண்டும். நண்பர்களையும் பந்துக்களையும் அரவணைக்கவேண்டும். ஓய்வு பெற்றதும், உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்ததாக மனைவி, மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகியோரது பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இப்படி, வாழ்க்கையில் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நடைமுறைப்படுத்துவதற்கே முழு நேரத்தையும் ஒதுக்க வேண்டிய  கட்டாயம் இருக்கும் இன்றையச் சூழலில், அறத்தையும் ஆன்மிகத்தையும் ஏற்க நேரம் ஏது?
அதற்காக, சாஸ்திர அறிவுறுத்தல்களை, அறம்ஆன்மிகத்தை அறவே விலக்கிவிடச் சொல்கிறீர்களா?
சாஸ்திரம், அறத்தையும் ஆன்மிகத்தையும் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்கச் சொல்கிறது. அது எப்படிச் சாத்தியமாகும்? ஒரு நாளுக்கு 24 மணி நேரம்தான். அன்றாட அலுவல்களைக் கவனிக்கவே இந்த நேரம் போதவில்லை; பல அலுவல்கள் முற்றுப்பெறாமல் தேங்கிக் கிடக்கின்றன.
பண்டைய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அலுவலக வேலை இருக்கும். காலையிலும் மாலையிலும் கடமையை நிறைவேற்றவும், அறத்தையும் ஆன்மிகத்தையும் எட்டிப்பார்க்கவும் கொஞ்சம் நேரம் இருந்தது. இன்று சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இரவும் பகலும் அலுவலகப் பணிகள் துரத்துகின்றன. குடும்பம் நடத்துவதற்கான பணத்தை ஈட்டுவதற்கு, அலுவலகப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய கட்டாயம் உண்டு. ஆகையால், அறம் ஆன்மிகத்தில் விருப்பம் இருந்தாலும், அதில் கவனம் செலுத்த இயலாத நிலை உருவாகியிருக்கிறது. காலையில் எழுந்து அலுவலகம் சென்றால், வீடு திரும்ப இரவாகிவிடும். அதன் பிறகு,  சாப்பிடவும் தூங்கவுமே நேரம் இருக்கும்.
ஞாயிறு விடுமுறையில் குடும்ப வேலைகளையே முழுமையாக்க இயலாது. இந்த நிலையில் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளை இறை வணக்கத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? வருடம் முழுவதும் பண்டிகைகளும் பூஜை புனஸ்காரங்களும் உண்டு. கார்த்திகை விரதம், திருவோண விரதம், சஷ்டி விரதம், ஏகாதசி விரதம், பிரதோஷ விரதம், நவராத்திரி, சிவராத்திரி போன்ற பண்டிகைகள், தேரோட்டம், பிரம்மோத்ஸவம், கோயிலில் காலை மாலை வழிபாடுகள் ஆகிய அத்தனையிலும் ஈடுபட நேரம் இருக்காது.
நம் நாடு கோயில்கள் நிறைந்தது. அவற்றில் விசேஷங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், விருப்பப்படி அந்த விழாக்களில் கலந்துகொள்ள நேரம் இருக்காது. காசி, ராமேஸ் வரம் போன்ற புண்ணியத் திருத்தலங்களுக்கு உரிய காலத்தில் சென்று வழிபாடுகளை நடைமுறைப்படுத்த இயலாது.
 தினம் ஒரு திருத்தலம் என்று சென்றுவர முடியாதுதான். ஆனால், வீட்டில் வழிபாடு நடத்துவது கூடவா சிரமம்?
இங்கே, தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பணம் ஈட்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில் விரிவான அறத்தை ஏற்பதும், அலுவல்களில் இருந்து விடுபட்டு ஆன்மிகத்தை ஏற்பதும் இயலாத ஒன்று என்ற எண்ணம் பல மனங்களில் உண்டு. இந்த பலவீனத்தை உணர்ந்து, பல அறக்கட்டளைகள் உருவாகியிருக்கின்றன. குழந்தைப் பராமரிப்பை நாங்கள் ஏற்கிறோம், முன்னோர் ஆராதனைகளை நாங்கள் ஏற்கிறோம், திருமணத்தை நாங்கள் நடத்திவைக்கிறோம், தாய் தந்தையை நாங்கள் கவனிக்கிறோம், உங்களுக்காக நாங்கள் பூஜைகளும் வழிபாடுகளும் செய்கிறோம், உங்கள் சுகாதாரத்துக்காக நாங்கள் வேள்வி நடத்துகிறோம், உங்களுக்காக அன்றாடம் உங்களுடைய அறக்கடன்களை நாங்கள் நடத்தித் தருகிறோம், உங்கள் பெயரில் பூஜை புனஸ்காரங்களைச் செய்து, அதற்குரிய பலனை உங்களுக்கு அளிக்கிறோம்... இந்த விஷயங்களுக்குத் தேவையான பணத்தை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும். பிரசாதம் உங்கள் வீடு தேடி வரும். இப்படிப் பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டுவரும் அறக்கட்டளைகள் ஏராளம்!
எல்லாவற்றையும் அறக்கட்டளைகளிடம் ஒப்படைத்து விட்டால், நம்முடைய கடமை முடிந்தது என்று அர்த்தமா?
தப்பாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்! குடும்பப் பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலையிலும், மக்களில் பலரும் கஷ்டப்பட்டு அறக்கட்டளைக்குப் பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறதோ, இல்லையோ... அறக் கட்டளைகள் தழைத்தோங்கி வளர்ந்து, பலருக்கும் வேலை வாய்ப்புகள் அளித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, குடும்பச் சுமையோடு அறக்கட்டளைச் சுமையும் சேர்ந்து அவனைத் திணறடிக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஆன்மிக வழிபாடுகளை ஒட்டுமொத்தமாக விலக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மூன்று வேளை சந்தியாவந்தனம், கடவுள் பிரார்த்தனைகளை விடுமுறை நாட்களில் கடைப்பிடிக்கலாம். வாரத்தில் ஒரு நாள் அலுவலகம் இருக்காது. அன்றைக்கு நிறைவேற்றலாம். தவிரவும், நாமாகவும் விடுமுறைகள் எடுப்போம், அரசாங்கமும் பல விடுமுறைகளை அளித்திருக்கிறது. இந்த நாட்களில் அறத்தையும் ஆன்மிகத்தையும் கடைப்பிடித்தால் போதும். காலப்போக்கில், நம் மனம் கோலாகலமான விழாக் காலங்களிலும் நேரத்தை ஒதுக்கி, வழிபாட்டை நடைமுறைப் படுத்திவிடும். கடவுளை மனத்தால் நினைக்க, எந்த இடையூறும் இல்லை. அலுவல்களுக்கு இடையிலும் மனம் செயல்படத் தடங்கல் இருக்காது; மனம்தான் இதைச் சுமையாக எண்ணுகிறது.
இரண்டாவது கோணம்
வேதத்தில் இருந்து சனாதனம் தோன்றியது. அறமும் ஆன்மிகமும் ஆட்சி செலுத்தின. புத்தர் தோன்றினார் நாத்திகத்தை அறிமுகப்
படுத்தினார். சங்கரர் வந்தார் ஆன்மிகத்தின் உயர்வை உணர்த்தினார். ராமானுஜர் வந்தார் விக்கிரக ஆராதனையும் பக்தியும் வளர்ந்தன. இப்படிச் சிறுகச் சிறுகத் தேய்ந்து, எளிமையான நாம சங்கீர்த்தனம் இடம் பிடித்திருக்கிறது.
அறமும் ஆன்மிகமும் மறைந்துவிட்டன. பண்டைய நாளில் கிராமங்களுடன் வாழ்க்கை முற்றுப்பெற்றது. தற்போது, உலகளாவிய முறையில் வாழ்க்கை விரிவடைந்துள்ளது. மதமும் வேண்டாம், கோட்பாடும் வேண்டாம் என்ற நிலையில், மக்கள் விருப்பங்களே சட்டங்களாகின்றன. விருப்பங்கள் மாறுபட்டு இருக்கும். காலத்தாலும் விருப்பங்கள் மாறுபடும். ஆக, மக்களின் தேவைகள் சட்டமாக்கப்பட்டு, அந்தச் சட்டம் ஆட்சி செய்யும் காலம் இது.
அறமும் ஆன்மிகமும் நல்ல விருப்பங்களைச் சொல்லிக் கொடுக்கும் அல்லவா?
வாழ்நாள் முழுதும் வளமோடு வாழ வேண்டும். இதற்கு உகந்த செயல்பாடுகளே இன்றைய அறம். மக்களின் குறையைக் கண்ணுற்று அதை அகற்றும் சீர்திருத்தவாதிகளே இருப்பார்கள். மக்களுக்கும் தங்களுடைய சுயநலம் பூர்த்தியாவதிலேயே அக்கறை இருக்கும். சமுதாயமும் மக்கள் எண்ணப்படிதான் கடமைகளை வகுக்கும். கால மாற்றத்துக்கு உகந்தபடியே சிந்தனை இருக்கும். ஆகவே, காலத்துக்கு ஒவ்வாத அறமும் ஆன்மிகமும் தற்போது தேவை இல்லை.
சுயநலம் பறிபோகாமல் பார்த்துக்கொள்வதும், அதன் பலனால் மகிழ்ச்சியைச் சுவைப்பதும்தான் வாழ்க்கையின் குறிக்கோள். உயிரினங்களுக்காக இயற்கை அளித்த நதிகளின் பயன்பாடு தங்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில், அவற்றுக்குக் குறுக்கே அணைகளைக் கட்டி, மற்ற உயிரினங்களுக்கு அதன் பங்கு கிடைக்காதபடி செயல்படும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் குடியேறி மற்ற உயிரினங்களின் பங்கைப் பறித்துக்கொள்வதும், உணவுக் கட்டுப்பாட்டில் உயிரினங் களை உணவாக மாற்றுவதும் சுயநலத்தின் அடையாளங்கள். உலகமும் அதில் விளையும் வளங்களும் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டான் மனிதன். மற்ற உயிரினங்களையும் வளங்களையும் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதை பிறப்புரிமையாக நினைக்கிறான்.
ஆன்மிக மார்க்கத்தில் சுயநலம் தவிர்க்கப்படும் அல்லவா?
சுயநலம் பொதுநலம் என்பதெல்லாம் அவரவர் குறிக்கோளைப் பொறுத்தது. ஆட்டம்பாட்டமும், கொண்டாட்டமும், அரசியலும்தான் அவனது வாழ்க்கையின் குறிக்கோள். விளையாட்டும், நாடகமும், நாட்டியமும், சொற்பொழிவும், கோயிலும், கோயில் உற்சவங்களும் அவனது பொழுதுபோக்காக மாறிவிட்டன. அமைச்சர், ஜனாதிபதி, வெளிநாட்டுத் தூதர் முதலான பதவிகள் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய பதவிகள். பகைவர்களை அழிப்பதில், எந்தச் சட்டமும் அவனைக் கட்டுப்படுத்தாது.
காட்டில் வாழும் விலங்கினங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று பகை இருந்தாலும், கூடி வாழும் இயல்பு தென்படுகிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க உயிரினங்களும், செடிகொடிகளும், நதிகளும், குளங்களும், வனங்களும், மலைகளும் தேவை என்பதை அலட்சியப்படுத்தி, அந்தப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, சுயநலத்தைச் சுவைக்க எண்ணு கிறான்.
இப்படியான விபரீத சிந்தனைகள், மனிதனின் தரத்தைத் தாழ்த்தியிருக்கின்றன. அவனுடைய காதில் அறமும் ஆன்மிகமும் ஏறாது. அதுமட்டுமல்ல, அவனுடைய குறிக்கோளுக்கு அவை தேவையில்லை. உடல் ஆரோக்கியத்தை இழந்தால், மருத்துவ மனைகள் இருக்கின்றன. மனம் கலக்கமுற்றால், மனநலக் காப்பகங்கள் இருக்கின்றன. உணவு தேவைப்பட்டால், உணவு விடுதிகள்  உள்ளன. அதுபோல் விளையாட்டுத் திடல்கள், பொழுதுபோக்கு உபகரணங்கள்... இப்படித் தேவைக்கேற்ற அத்தனையும் தயார் நிலையில் உள்ளன. எனவே, மனதைக் கட்டுப்படுத்த விரும்ப மாட்டான்; அதன் போக்கிலேயே செயல்படுவான்.
ஆகவே, தற்காலச் சூழலில் மனிதனுக்கு அறமும் ஆன்மிகமும் சுமை. அதை அணுகாமலேயே வாழ்வு நிறைவுபெறும் என்று எண்ணுகிறான். அதில் அவனுக்கு நம்பிக்கையும் இருக்கிறது. அப்படியே விட்டுவிடலாம்.
மூன்றாவது கோணம்
பல்வேறு அலுவல்களுக்கு இடையே தொலைபேசி மூலம் சொந்தக் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதும், வீட்டு அலுவல்களும், நண்பர்களுடன் உரையாடுவதும் அலுவலகப் பணிகளுக்கு இடையே நடந்தேறிவிடும். நாள் முழுக்க கைபேசியும் கையுமாக அலைபவர்களும் இருக்கிறார்கள். அலுவலகத்துக்குத் தாமதமாக வந்துவிட்டு, மாலையில் மிகச் சரியான நேரத்தில் அலுவலகத்தைவிட்டு இறங்குபவரையும் பார்க்கலாம். மதிய உணவு இடைவெளியில் பல காரியங்களைச் சாதித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சிட்ஃபண்டு, பங்குச்சந்தை, இன்ஷூரன்ஸ், தபால் அலுவலகங்களில் பணம் சேமிக்க, சேமித்த பணத்தைக் கண்காணிக்க, அதைப் பெற்று வர... இதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிச் செயல்படுபவர்களும் உண்டு.
வாடிக்கையான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது எப்படித் தவறாகும்?
வழிபாடுகளையும் வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. தொலைக்காட்சியில் நேரத்தை வீணாக்காதவர்கள் இல்லை. நாட்டு நடப்பையும், சின்னத்திரை, பெரிய திரைக்காட்சிகளையும் பார்க்கத் தவறுவது இல்லை. விளையாட்டுக்களையும், நகைச்சுவைக் காட்சிகளையும் விடாமல் பார்ப்பவர்களும் உண்டு. அறுசுவை உணவுக்கான காய்கனிகளை வாங்க அங்காடிக்குச் செல்வது, காலையில் செல்ஃப் ஷேவிங், ஷாம்புக் குளியல் இவை எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குவது உண்டு. சொந்த விஷயங்கள் எதையும் நேரம் கிடைக்கவில்லை என்று யாரும் ஒதுக்குவதில்லை.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், உள்ளூர் பிரயாணம், இன்பச் சுற்றுலா, சங்கீதக் கச்சேரி, புத்தகக்காட்சி, பொருட்காட்சி ஆகியவற்றுக் கெல்லாம் சென்று மகிழ நேரம் இருக்கும். அதேபோல் சொந்தபந்தங்களின் விழாக்களுக்குச் சென்று வரவும், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்களைச் சந்தித்து மகிழவும் நேரம் இருக்கும். பல நாட்களுக்குத் தொடரும் பந்த் போராட்டங்களில் கலந்துகொள்ளவும் நேரம் இருக்கும். அவ்வளவு ஏன்... நண்பர்களோடு அரட்டை அடிக்கவும், திண்ணைப் பேச்சுக்கும்கூட நேரம் கிடைத்துவிடும். ஆனால், அறத்தை நடைமுறைப்படுத்த, அதை வளர்க்க, ஆன்மிகத்தை அறிய, அதை ஏற்று மன அமைதி பெறுவதற்கு மட்டும் நேரம் இருக்காது.
சரி! அதனால் என்ன கெட்டுவிட்டது? வாழ்க்கைப் பயணம் அதன் போக்கில் மிகச் சரியாகத்தானே நகர்கிறது?
அப்படிச் சொல்லிவிட முடியாது. அறத்தின் இழப்பில் உடல் வளம் குன்றும்; ஆன்மிக இழப்பில் மனவளம் குன்றும். மருத்துவ மனையை நாடுவான். மருத்துவம் கைகொடுக்காது என்று தெரிந்தாலும், விஞ்ஞானத்தின் போலிப் பெருமையில் லயித்து, அடிக்கடி மருத்துவமனை வாசத்தை விரும்பி ஏற்பான். அறமும் ஆன்மிகமும் அமைதியான வாழ்க்கைக்கு அவசியம் என்று மனம் எண்ணினாலும், செயல்பாடு மாறுபட்ட திசையில் இயங்கும். இன்றையச் சூழலில் தென்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களவு அத்தனைக்கும் அறம், ஆன்மிகம் ஆகியவற்றின் இழப்பே காரணம் என்பதை ஏற்கமாட்டான்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும், அதை பாதுகாப்பவர்களும் மனத்தளவில் விபரீத எண்ணங்களை ஏற்பதில் தயங்குவது இல்லை. அறம், ஆன்மிகம் இந்த இரண்டின் இழப்பால், மனிதப் பண்புகளை இழந்து வாழ்க்கை நரகமாவதை ஏற்கவேண்டியிருக்கும். உயர்ந்த மனித இனப் பண்புகள் மறைந்து, விலங்கின் இயல்பு தலைதூக்குவதற்கு இந்த இரண்டின் இழப்புதான் காரணம் என்ற உண்மையை ஏற்க, அவன் மனம் துணியாது. குடும்பம், சமுதாயம், அன்பு, பண்பு, சகிப்புத்தன்மை, கூடிவாழ்தல், ஈவு, இரக்கம், பரோபகாரம், ஒத்துழைப்பு போன்ற பண்புகள் இந்த இரண்டின் இழப்பால் மறைந்துவிடும்.
உலகளாவிய தீவிரவாதத்தின் எழுச்சியில் ஒட்டுமொத்த உலகமும் நடுங்கிக்கொண்டிருக் கிறது. தீவிரவாத ஒழிப்பில் அணு ஆயுதமும், தொடர்ந்து நிகழ்த்தும் போர்களும்  பலன் அளிக்காது. மனிதர்களிடையே இதய பரிவர்த்தனம் ஏற்படவேண்டும். அதற்கு, ஆன்மிகமும் அறமும்தான் கைகொடுக்கும். மிரட்டலாலும், பயத்தாலும் அடக்கிவைக்க இயலாது. அவர்களை அடக்க நாம் கையாளும் ஆயுதங்கள் அத்தனையும் அவர்கள் கையில் மாட்டிக் கொண்டால், உலகம் பேரழிவைச் சந்திக்கும். பண்டைய நாளில் அறமும் ஆன்மிகமும்தான் சமுதாயத்தைப் பாதுகாத்து வந்தன. மாற்று வழியைப் பயன்படுத்தினால் வெற்றி கனவாகிவிடும். இவை இரண்டும் இணையாத சமுதாய வாழ்க்கை கசக்கும்; இனிக்காது.
மொத்தத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
மனிதன் மனிதனாக மாற வேண்டும்; சுய நலத்தைத் துறந்து பொது நலனை ஏற்கவேண்டும்; அதற்கு அறமும் ஆன்மிகமும் ஒத்துழைக்கும் எனச் சொல்கிறோம்.
இப்படியும் சொல்லலாம்... பொது நலனை ஏற்று அதன் வழி கிடைக்கும் சுயநலத்தில் திருப்தி அடையவேண்டும். அறம், ஆன்மிகம் இரண்டையும் ஏற்கவிடாமல் தடுப்பது சுயநலம்தான். தான், தனது மனைவி என்று அவனது சிந்தனை முற்றுப்பெறுகிறது. தனது மகிச்சியை மட்டுமே இலக்காக வைத்து பொதுநலனை அழிப்பதில் தயங்குவதில்லை.
தனி மனிதன் பலரோடு இணைந்துதான் வாழவேண்டும். அவர்கள் இணைப்பில் அவன் இன்பம் காண வேண்டும். தன்னைப்போல் மற்ற உயிரினங்களையும் எண்ண வேண்டும். தனக்கு இருக்கும் உரிமை, சுதந்திரம் மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்ற எண்ணம் இருக்கவேண்டும். மனித இனம் மட்டும் உலகமாகாது. எண்ணிலடங்கா ஜீவராசிகளுக்கும் இந்த உலகம் சொந்தம். ஆறாவது அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, சமுதாயக் கொந்தளிப்புக்குக் காரணமாவது மனித இயல்பல்ல!
மனித நேய இயல்பு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அறம், ஆன்மிகம் இரண்டும் பிறப்பிலேயே அவனுடன் இணையவேண்டும். தற்காலச் சூழலில் தென்படும் கொந்தளிப்புக்கு இவற்றின் இழப்பே காரணம். தனி மனிதன் ஒவ்வொருவனும் மனக் கொந்தளிப்பில் வாழ்க்கையை இழந்து தவிக்கிறான். ஆகவே,  ஒட்டுமொத்தமான அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் அறமும் ஆன்மிகமும் வேண்டும். அவற்றைச் சுமையாக நினைத்து அலட்சியப்படுத்துவது அறியாமையே!
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
விஞ்ஞானத் தகவல்கள், விஞ்ஞானக் கருவிகள் ஆகியன சொகுசான வாழ்க்கைப் பயன்பாட்டுடன் முடிந்துபோகும். அமைதி மகிழ்ச்சி ஆகியவற்றை எட்டுவதற்கு அறமும் ஆன்மிகமும் வேண்டும். இவை இரண்டும் விலகாமல் இருக்கும் வகையிலேயே கோயில்களும், தேர்த் திருவிழாக்களும், பண்டிகைகளும், விரதங்களும், கொண்டாட்டங்களும், சமுதாயத்துடன் இணைந்த நடைமுறைகளும் விரிவடைந்து, மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இடம்பிடித்திருக்கின்றன.
மாற்றுக்கோணத்தில் ஆராய்ந்து, மக்கள் வாழ்க்கைக்கு அவற்றின் பங்கு தேவையில்லை என்ற புது சிந்தனையாளர்களின் கணிப்பு, அறியாமையின் வெளிப்பாடு. மாற்றுக் கலாசாரக் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதும் அவர்களின் அறியாமைக்கு எடுத்துக்காட்டே! மனத்தளவில் மக்களைப் பிரித்தாளும் அவர்களின் கொள்கையை அறிந்து ஓரம் கட்டுவது தற்காப்பு. சிறு வயதிலிருந்தே அறத்துடனும் ஆன்மிகத்துடன் சிறுகச் சிறுக இணையவேண்டும். இதை நடைமுறைப்படுத்துபவனே உண்மையான சீர்திருத்தவாதி. மக்கள் கொந்தளிப்பில் சுயநலத்தைச் சாதித்துக்கொள்பவன் சீர்திருத்த வாதி அல்ல!

Comments