தீர்த்தங்களில் பெரியது சமுத்திரம். சில தலங்களுக்கான தீர்த்தச் சிறப்பாக சமுத்திரங்கள் திகழ்கின்றன. கடலின் நாயகனாக வருணனைக் குறிப்பிடுகின்றன புராணங்கள். சிவபூசையில் பூரண கும்பங்களில் முதலில் வருணனையே நிலைப்படுத்தி வணங்குவது வழக்கம். மாசி மாதம் வருணனுக்கு உகந்தது. ஆகவே, இம்மாதத்தில் கடல் நீராடலும், புராணச் சிறப்பு மிகுந்த கடல் தீர்த்தங்களைக் கொண்ட தலங்களைத் தரிசிப்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.
மாசி மாதத்தில், குறிப்பிட்ட சில திருத்தலங்களில் உள்ள புனித தீர்த்தங்களில் கடலரசனும் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் குறிப்பிட்ட அந்த தீர்த்தம் ஏழு கடல்களுக்குச் சமமான பெருமையைப் பெறும் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தை அடுத்த நல்லூர் கல்யாண சுந்தரர் ஆலயத்தின் முன், சப்தசாகர தீர்த்தம் எனும் பெயரில் திருக்குளம் ஒன்று அமைந்திருக்கிறது. பாண்டவர்களின் தாயான குந்திதேவியின் விருப்பத்துக்கு இணங்க சப்த சாகரங்களும் இந்த தீர்த்தத்தில் பொங்கி வந்ததாக தலபுராணம் சொல்கிறது. மாசி மக நன்னாளில் இத்தலத்தின் ஈஸ்வரன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இந்த திருக்குளத்துக்கு வந்து தீர்த்தம் பாலிக்கிறார். இங்கு நடைபெறும் விழாவே ஆதி மக விழா என்கிறார்கள்.
Comments
Post a Comment