'யாகம் செய்தால்தான் தேவர்கள் ப்ரீதி அடைவர்; தேவர்கள் ப்ரீதி அடைந்தால்தான் இயற்கை செழிக்கும்; இயற்கை செழித்தால்தான், அதை நம்பி வாழும் மனிதம் தழைக்கும். அத்தகைய யாகமானது பசுவிடமிருந்து நாம் பெறக்கூடிய நெய்யைக் கொண்டே செய்யப்படவேண்டும். எனவே, யாகத்துக்குத் தேவையான நெய்யைக் கொடுக்கும் பசுவை அடிப்பதோ, வதம் செய்வதோ கூடாது. அப்படிச் செய்தால், நம்மால் யாகம் செய்யமுடியாமல் போவதுடன், சகல தெய்வங்களின் உறைவிடமான பசுவைக் கொன்ற பாவமும் சேர்ந்து, தேவர்களின் கோபத்துக்கும் நாம் ஆளாவோம்!'' என்று, பசுவை அடித்து இம்ஸித்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு உபதேசம் செய்தார், சண்டேசுர நாயனார் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட விசாரசருமர்.
இந்த உலகத்தில் நாம் மிக மிக கடமைப்பட்டிருக்கும் ஒரு ஜீவன் எது என்று கேட்டால், அது பசுதான் என்று உறுதியாகச் சொல்லலாம். பசு நமக்குப் பால் தருவதை கடனாக நினைத்துத் தருவதில்லை; கடமையாக நினைத்தே தருகிறது. அதன் அமுதம் நிகர்த்த பாலை கன்றுக்குக்கூடக் கொடுக்கவிடாமல், மொத்தமாக நாமே அபகரித்துக் கொண்டாலும்கூட, பசு நம்மிடம் கோபம் கொள்வதில்லை; பால் தராமல் நம்மை ஏமாற்றுவதில்லை. அப்படிப்பட்ட தாய்க்கு நிகரான பசுவை வதம் செய்யும் மனிதர்கள் சிலர் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்று வருந்துகிற நேரத்தில், பசுக்களை பக்தி சிரத்தையோடு காப்பாற்றி வரும் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மனதுக்குப் பெரிதும் ஆறுதல் அளிக்கும் விஷயம்.
'ஒருமுறை குண்டடம் என்ற ஊரில் மாட்டுச் சந்தை. முடிந்தவரை அங்கிருந்து அடிமாடுகளைக் காப்பாற்றிக் கொண்டு வரச் சென்றோம். எங்களிடம் இருந்த பணத்தில் இரண்டு பசுக்கள் மற்றும் இரண்டு கிடாரிக் கன்றுகளை வாங்கிவிட்டோம். கிளம்பத் தயாரான நேரத்தில், நல்ல இனத்தைச் சேர்ந்த ஒரு சினை மாட்டை வெட்டுவதற்கு ஒருவர் விலை பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு, பதறிவிட்டோம். அந்தப் பசுவை விட்டுச் செல்ல எங்களுக்கு மனம் வரவில்லை. எனவே அவரிடம் விலை பேசினோம். அவர் கேட்ட அளவு பணம் அப்போது எங்களிடம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றிருந்தபோது, என் செல்போன் ஒலித்தது. ஈரோட்டிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்தார். விஷயத்தை அவரிடம் சொல்லவும், அந்த மாட்டை வாங்கும் செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். அவர் பிறகு அந்தப் பணத்தை எங்களிடம் தந்துவிடுவார் என்றாலும், அப்போதைக்கு அந்தப் பசுவை வாங்க எங்களிடம் பணம் இல்லையே! ஆனாலும், அவர் அப்படிச் சொன்னது ஒரு நல்ல சகுனமாகவே எங்களுக்குப் பட்டது. எப்படியும் அந்த சினை மாட்டைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தரகர் ஒருவரிடம் எங்களுடைய நிலைமையைச் சொன்னோம். அவர், தன்னிடம் 2000 ரூபாய் இருப்பதாகவும், மீதி பணத்தை தெரிந்த வெட்டுக்காரன் ஒருவனிடம் வாங்கித் தருவதாகவும் சொல்லி, அவனிடம் எங்களை அழைத்துச் சென்று, விவரம் கூறினார். அவனோ சற்றும் தயங்காமல், ''பணம் என்னங்க பணம்... உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ, வாங்கிக்குங்க. அடுத்த வாரம் திருப்பிக் கொடுத்தா போதும். முதல்ல அந்த மாட்டைக் காப்பாத்துங்க'' என்றான். ஒரு வெட்டுக்காரன் அப்படிச் சொன்னது எங்களுக்கு அளவற்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. மனமார அவனுக்கு எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, அந்த மாட்டை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.
மாடு வளர்ப்போரும் சரி, வெட்டுவோரும் சரி... மனசார இச்செயலைச் செய்வது இல்லை. சூழ்நிலைதான் அவர்களை இப்படி செய்யத் தூண்டுகிறது' என்றார் சிவகுமார்.
அப்படி என்ன சூழ்நிலை ?
விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கும் இன்றைய காலத்தில், விவசாயத்தை ஒரு வழிபாடாகவே செய்யும் விவசாயி, இயற்கைச் சூழலின் காரணமாக விவசாயம் பொய்த்துப்போய், வறுமை அவனை வாட்டும்போது, வேறு தொழில் எதுவும் தெரியாத அவனுடைய பார்வையில் முதலில் படுவது அவன் வளர்த்து வரும் மாடுதான்.
அந்தக் கொடிய வறுமை நிலையில் அவனுக்கு அந்த மாட்டை விற்பதைத் தவிர, வேறு வழியில்லை.கறவை நின்ற மாடுகளால் பயன் எதுவும் இல்லை என்கிற தவறான எண்ணத்தின் காரணமாகவும் பலர் தங்களிடமுள்ள மாடுகளை விற்கிறார்கள். மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு, மாடுகளை கசாப்புக் கடைகளுக்கு அனுப்பும் பின்னணியில் ஒரு பெரும் கூட்டமே சங்கிலித்தொடர்போல் இயங்கிக்கொண்டிருக்கிறது.
நாட்டு மாடுகளின் இனப் பெருக்கத்துக்காகவும், விவசாயம் மற்றும் கறவைக்காகவும் மாட்டுச் சந்தைகள் நடைபெற்ற காலம் போய், மாட்டுச் சந்தை என்ற பெயரில் மாடுகளை வாங்கி கசாப்புக் கடைக்கு அனுப்பும் நிலையே இன்று காணப்படுகிறது. எண்ணற்ற லாரிகளில் மாடுகளை அண்டை மாநிலத்துக்குக் கொண்டு செல்வது தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுவும், அதை ஒரு ஜீவனாகக்கூட மதிக்காமல், ஜடப் பொருள்களை ஏற்றிச் செல்வது போல், ஒரு லாரியில் 40, 50 மாடுகளைத் திணித்து, சிரமப்படுத்தி ஏற்றிச் செல்கின்றனர்.
பசுக்களின் நிலைதான் இங்கே பரிதாபமாக இருக்கிறதென்றால், காளை மாடுகளின் நிலை இன்னும் பரிதாபம்! விவசாயத்தில் காளை மாடுகளின் இடத்தை டிராக்டர்கள் ஆக்கிரமித்துவிட்டன. ஆகையால், காளை மாடுகளுக்குப் பெரும்பாலும் வேலை இல்லை. ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கும் தடை என்ற செய்தியை படித்துக்கொண்டிருந்த வேளையில் இடியாய் இறங்குகிறது ஓர் அதிர்ச்சித் தகவல். ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதால், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 80 ஆயிரம் காளைகள் அடிமாடாக விற்கப்பட்டு பலி கொடுக்கப்பட்டுள்ளன என்கிறது அந்த துயரச் செய்தி.
இப்படியாக, நாட்டு மாடுகளும் காளை மாடுகளும் அழிந்துவரும் நிலையில், வருங்காலத்தில் அவற்றின் எலும்புக்கூடுகளை அருங்காட்சியகத்தில் வைத்து, 'இவைதான் அழிந்துபோன நாட்டு மாடுகள் மற்றும் காளை மாடுகளின் எலும்புக்கூடுகள்’ என்று சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
நமக்குத்தான் மாடுகளின் அருமை தெரிவதில்லை. ஆனால், வெளிநாட்டவர்கள் நாட்டு மாடுகளின் அருமை தெரிந்து, இங்கிருந்து மாடுகளை இறக்குமதி செய்து, இனவிருத்தி செய்து வருகின்றனர்.
நாட்டு மாட்டு வகைகளின் பாலில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன. இவற்றோடு ஒப்பிடும்போது கலப்பின மாடுகளி்ன் பாலில் உள்ள சத்துக்கள் குறைவே. பால் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மையுடைய இது போன்ற மாடுகளுக்கு வியர்வைச் சுரப்பி இருக்காது. நம் நாட்டு வெயிலில் இவற்றை வளர்க்கும்போது, வியர்வை எப்படி வெளியேறும்? அதுவும் ஒரு நச்சுப் பொருளாக அதன் பாலில்தானே வெளியாகும்! அப்படியானால் நாம் குடிப்பது..?' என்று சொல்ல வந்ததை முடிக்காமலே நம்மை திகிலில் உறைய வைக்கிறார் சிவகுமார்.
அருமையும் பெருமையுமாகப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய நாட்டு மாடுகளையும் காளை மாடுகளையும் அழிந்துபோகாமல் தடுப்பதற்கு, மாடு வளர்ப்போர் மட்டுமல்ல, நாமும்கூட சில எளிய கடமைகளைச் செய்ய முடியும். நமக்குப் பெரும் புண்ணியத்தைத் தரக்கூடிய அந்த எளிய கடமைகள்தான் என்னென்ன..? பாலை வைத்து மட்டும் தான் பணம் சம்பாதிக்க முடியுமா? பசுவின் மூத்திரமும் சாணமும் சேர்ந்த் கலவையான கோமியத்தின் விலை என்ன தெரியுமா?
Comments
Post a Comment