சிந்தை மயக்கும் கோடி லிங்கம்!

சிவராத்திரிக்கு ஒரு கோடி லிங்கங்களை தரிசிக்கலாமா?
கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில், கம்மசன்டா கிராமத்தில் இருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் கோயில்.
இக்கோயிலில் 108 அடி உயர சிவலிங்கம் உள்ளது (ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கம் இதுதான்). இங்குள்ள நந்தியின் உயரம் 35 அடி. இக்கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான லிங்கங்கள் அணிவகுத்துள்ளது கண்கொள்ளாக் காட்சி.
பெரிய லிங்கத்தைச் சுற்றி கணபதி, முருகன் பார்வதி, நந்தி என்று ஒவ்வொரு கடவுளர்களுக்கும் தனித்தனி சிறு கோயில்கள் உள்ளன. அருகில் உள்ள நீரை எடுத்து யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். இங்கே சகஸ்ரலிங்கம் இருக்கிறது. பெரிய லிங்கத்தின் மீது 1,000 சிறிய லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 90,00,000 லிங்கங்கள் சிறிதும் பெரிதுமாக கண்ணுக் கெட்டிய தூரம் வரை 13 ஏக்கரில் காட்சி தருகின்றன.
இக்கோயில் 1980-ல் அமைக்கப்பட்டது. இங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆலய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அவர்கள் விரும்பிய அளவில் லிங்கப் பிரதிஷ்டை செய்யலாம். ஒவ்வொரு லிங்கத்திலும் பிரதிஷ்டை செய்தவரின் ஊர், பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் நடுவில் நின்று கொண்டு நம்மை நாமே சுற்றினால் லிங்கங்கள் எல்லாம் நம்மைச் சுற்றுவது போன்ற பிரமை ஏற்படும். அத்தனை லிங்கங்களை ஒரு சேரக் காண்பது கண்ணுக்கினிய காட்சி. இங்கு தினசரி பூஜைகள், மேளதாளத்துடன் நடக்கின்றன. இங்கு சிவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.
‘கோடி லிங்காலு’ (அப்படித்தான் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்) கோயிலுக்குச் சென்று கோடிப் புண்ணியம் பெறலாமே!

Comments