சிந்தை மகிழும் சிவ தரிசனம்!

துரை மாவட்டம், உசிலம்பட்டியிலிருந்து தாடையம்பட்டி வழியாக எம்.கல்லுப்பட்டி செல்லும் வழியில் அமைந்திருக்கிறது மேலத் திருமாணிக்கம் எனும் அழகிய சிற்றூர். திருமண வரம் மற்றும் குழந்தை வரத்தைக் கேட்டவருக்குக் கேட்டபடி அருளும் மகேசன், இத்திருத்தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். 
சுமார் 2000 ஆண்டுகள் பழைமை மிக்கது இந்தச் க்ஷேத்திரம். ஒருமுறை, வடமாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி அந்தணர் ஒருவர், குப்பணம்பட்டி என்னும் ஊருக்கு வந்தார். அங்கும் அவருக்குச் சரியான வேலை கிடைக்காததால், எம்பெருமானை மனமுருக வேண்டிய படி, அன்றைய இரவு அவ்வூரிலேயே ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினார்.
அப்போது ஓர் அசரீரி, 'அருகிலுள்ள திருமணிக்கயம் எனும் ஊருக்குச் சென்று, அங்கே அத்துவானக் காட்டில் சுயம்புவாய் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் செய். வயிற்றுப் பிழைப்புக்கு வழிகிட்டும்!' என ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த அந்தணர், அசரீரி வாக்கை இறை கட்டளையாகவே எண்ணி, மறுநாள் திருமணிக்கயம் சென்று, ஈசனை வழிபட்டு, அனுதினமும் பூஜைகள் செய்து வந்தார்.
இவர் அங்கே செல்வதற்கு வெகு காலம் முன்பிருந்தே, ஐந்து தலை நாகம் ஒன்று அந்த சுயம்பு ஈசனை வழிபட்டு வந்தது. அந்தணரின் பக்தியைக் கண்டு அதிசயித்த அந்த நாகம், அவருக்கு உதவி செய்ய நினைத்து, ஒருநாள் அவர் பார்வையில் படும்படியாக ஒரு மாணிக்கக்கல்லை உமிழ்ந்தது. அந்தணரும் அந்த மாணிக்கக் கல்லை எடுத்துச் சென்று, அருகிலுள்ள ஊரில் விற்று, பூஜைக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு, மீதமுள்ளதில் தன்னுடைய குடும்பத்தையும் இனிதே நடத்தி வந்தார்.
பின்பு ஒருநாள், இறைவனின் அபிஷேகத்துக்கு கங்கைத் தீர்த்தம் கொண்டுவர, காசிக்கு யாத்திரை புறப்பட்டார். கிளம்புவதற்கு முன் பூஜை பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்தார்.
அங்கே உள்ள ஐந்து தலை நாகம் தந்த மாணிக்கக் கல்லைக் கொண்டுதான் தந்தை தன் குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுச் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை அறிந்திருந்த மகன், பேராசையின் பிடியில் சிக்கி, ஐந்து தலை நாகத்தைக் கொன்றால், அதன் வயிற்றில் இருக்கும் நிறைய மாணிக்கக் கற்களை அள்ளி, சீக்கிரமே பெரும் தனவந்தனாக ஆகலாமே என எண்ணினான். அதன்படியே, அந்த நாகத்தைக் கொல்லும்பொருட்டு, ஒரு தடியை எடுத்து அதன் மீது வீசினான். உடனே, அந்த நாகம் கொடிய நஞ்சை அந்தணர் மகன் மீது உமிழ்ந்து, அவனைக் கொன்றது. அன்றிலிருந்து இன்றளவும் இந்தக் கோயிலை, அந்த ஐந்து தலை நாகம் காவல் காப்பதாகவும், சிவனை மாணிக்கக் கல் கொண்டு பூஜிப்பதாக வும் கூறப்படுகிறது. இதையொட்டி இத்தல ஈஸ்வ ரனுக்கு திருமணிக்கயமுடைய நாயனார் என்றும்  திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.
இதன் பெருமை உணர்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன், சுந்தர பாண்டியன், குலசேகரபாண்டியன் போன்ற பல மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததாகக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எப்போதும், எல்லோரும் எம்பெருமானை தரிசிக்கவேண்டி, நந்திதேவர் விலகி நின்ற ஓர் அற்புத நிகழ்வும் இங்கே நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள மீனாட்சி அம்பாள் கருவறையின் அருகேயுள்ள தியான பீடத்தின் முன் அமர்ந்து, அந்தப் பீடத்தில் கைகளை வைத்து மனமுருக வேண்டினால், நினைத்த காரியம் நிறைவேறும். மேலும், இங்கு அருளும் சப்த கன்னிமார்களுக்கு ஐந்து வகை காய்கறிகள் படைத்து, மாதுளையும் செவ்வாழையும் சேர்த்து, மஞ்சள்பொடியினால் அபிஷேகம் செய்தால், கன்னிகள் திருமணத்தடை நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
மாசி மகத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் பங்கெடுத்து, இறைவனை வேண்டினால், திரு மண பாக்கியம் விரைவில் கைகூடும். மேலும், சுபகாரியங்கள் இனிதே நிறைவேறவும், குழந்தைப் பேறு வேண்டியும் இங்கு வந்து வழிபட்டு, வரம்பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள்!

Comments