ஸ்ரீஹயக்ரீவர் எல்லாவிதமான வித்தை களுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் ஸ்ரீசரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் ஸ்ரீஹயக்ரீவர்.
ஒருமுறை, மதுகைடபர் எனும் அசுரர்கள், குதிரை வடிவில் வந்து பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்துச் சென்றனர். வேதங்களை இழந்ததால் உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. செய்வதறியாமல் திகைத்த, பிரம்மன், மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஸ்ரீஹயக்ரீவராக வடிவம் கொண்டார்.
குதிரை முகம், மனித உடம்பு, கண்களாக சந்திர சூரியர்கள், கங்கையும், சரஸ்வதியும் கண் இமைகளாகத் திகழ, சூரியனை மிஞ்சக் கூடிய தெய்வ ஒளி வீசும் திருவடிவத்துடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர், வேதங்களை மீட்கப் புறப்பட்டார். வேதங்களுடன் மறைந்திருந்த அசுரர்களைக் கண்டறிந்து போரிட்டு அழித்தார். வேதங்கள் மீட்கப்பட்டன (தேவி மகாத்மியம், தேவி பாகவதம் ஆகிய நூல்களில் மதுகைடப சம்ஹாரம் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது).
ஸ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத் தியவர் ஹயக்ரீவர். கலிகாலத்தில் இவரின் பேரருளைப் பெற்ற அடியவர்கள் இன்னும் பலர் உண்டு. அவர்களில் ஸ்ரீபாதராஜர்,ஸ்ரீவாதிராஜ தீர்த்தர், ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசம் செய்தவர் அப்புள்ளார் என்ற உத்தமர். ஒருமுறை ஸ்ரீதேசிகன், திருவஹீந்திரபுரம் ஸ்வாமியையும் தாயாரையும் தரிசித்தார். ஒளஷதாத்ரி மலை மேல் ஏறி, ஸ்ரீநரசிம்மரின் சந்நிதி எதிரில் இருந்த அரச மரத்தின் அடியில் அமர்ந்து கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார். அதன் பலனாக அவருக்குக் காட்சியளித்த கருடபகவான், ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந் தார். அந்த மந்திரத்தை உச்சரித்து ஹயக்ரீவரை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தார் தேசிகன். அதன் பலனாக ஸ்ரீஹயக்ரீவரின் அனுக்கிரகமும் கிடைத்தது ஸ்ரீதேசிகனுக்கு; நமக்கோ ஸ்ரீதேசிகன் அருளிச் செய்த ஞானப்பொக்கிஷங்களான ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவ நாயக பஞ்சாசத், அச்யுத சதகம் போன்ற ஸ்தோத்திரங்களும், மும்மணிக் கோவை, நவமணிமாலை போன்ற தமிழ்ப் பிரபந்தங்களும் கிடைத்தன.
நாமும் வாரம்தோறும் புதன் கிழமையன்று வீட்டில் ஸ்ரீஹயக்ரீவர் திருவுருவப் படத்துக்கு ஏலக்காய் மாலை சாற்றி, கீழ்க்காணும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட்டு வரம் பெறுவோம். உங்கள் குழந்தைகளையும் வழிபடச் சொல்லுங்கள்; ஸ்ரீஹயக்ரீவரின் அருளால் அவர்களுக்கு சகல ஞானங்களும் ஸித்திக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
ஜ்ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
கருத்து: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல்லா கலைகளுக்கும் உறைவிடமாக, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழிபடுகிறோம்.
Comments
Post a Comment