யோக வனம்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் கீழப்பழுவூர் 55வது தலம். இதன் புராதனப் பெயர் திருப்பழுவூர். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக ஆலந்துறையார், வடமூலநாதர் என்னும் திருப்பெயர்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சிவனுக்கு சாம்பிராணித் தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது.
அம்பிகையின் திருநாமம் அருந்தவநாயகி. ஒருமுறை கைலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்த, சிவபெருமானின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இன்றி உலகம் இருள, பிரபஞ்ச இயக்கம் நின்று போனது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நிற்க, சிவபெருமான் தமது தேவியிடம், விளையாட்டாகச் செய்தாலும் ஒரு தவறு மற்றவர்க்கு பாதிப்பை ஏற்படுத்துமானால், அதுவும் பாவமே. இதற்குப் பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் சென்று, அங்கு பல தலங்களில் தவம் செய்து, இறுதியில் யோக வனத்தில் தங்கியிருந்தால் நான் அங்கு உன்னைச் சேர்வேன்" என்றார்.
அதன்படி, அன்னை பார்வதி பல தலங்களில் தவத்தை முடித்து, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக் காலில் தவமிருக்க இறைவனும் அன்னையுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூர் என்கிறது தல வரலாறு.
தல விருட்சம் ஆல மரம். ‘பழு’ என்னும் சொல் ஆல மரத்தைக் குறிக்கும். இங்கு ஆல மரங்கள் நிறைந்திருந்ததனால் பழுவூராயிற்று. இத்தலத் தீர்த்தம் விசேஷம் உடையதாலும் ‘துறை’ என்ற சொல் தலப் பெயருடன் சேர்க்கப்பட்டு ஆலந்துறை யாயிற்று என்றும் கூறுகிறார்கள்.
சன்னிதிக்கு முன் உள்ள திருக்குளம் ‘பிரம்ம தீர்த்தம்’ எனப்படுகிறது.
இரண்டு பிராகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளன. சுவாமி சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியும் காணப்படுகிறது. தென் மேற்கு மூலையில் நந்தவனம் உள்ளது. உள்பிராகாரத்தில் நிருத்த விநாயகர் அருள்பாலிக்கிறார். கயமுகா சுரனை அழித்த பிறகு இத்தலத்துக்கு வந்து ஆனந்த நடனம் செய்ததால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாம். இதுதவிர, முருகர், அறுபத்து மூவர் சன்னிதிகளும் உள்ளன.
இத்தல இறைவனை, பிரம்மன், திருமால், இந்திரன், பாண்டவர், அகத்தியர், விசுவானரன், தரும பாலன், சந்திரன், புரூரவன், கோவலன், வசிட்டர், காசியபர், கண்ணுவர், சதானந்தர், வியாசர் முதலியோர் பூஜித்துப் பேறு பெற்றனர்.
பரசுராமர், தம் தாயைக் கொன்ற பழி நீங்க சிவனை வழிபட்ட தலம். இவர் வழிபட்டதுக்கு அடையாளமாக கருவறையின் முன்புள்ள நிலையின் மேல் கல் உத்தரத்தில் பரசுராமரின் சயனித்த கோலம் அமைக்கப்பட்டுள்ளது.
‘அந்தணர்களான மலையாளரவரேத்தும் பந்தமலிகின்ற பழுவூரானை’ என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். இத்தலத்தில் இறந்தவர்களின் எலும்புகள் மலர்களாக மாறுவதாக ஐதீகம்.
அரியலூர் சிவபக்தர் ஒருவர் தினமும் இத்தலத்துக்கு வந்து இறைவனை தரிசனம் செய்வது வழக்கம். ஒரு நாள் மருதையாற்றின் ஏற்பட்ட வெள்ளத்தால் அது தடைப்பட்டது. அவர் அக்கரையில் நின்று வருந்த, பெருமான் அவருக்கு அரியலூரிலேயே காட்சி கொடுத்தருளினானாம். இதன் நினைவாகவே அரியலூரிலும் ஒரு சிவன் கோயில் அமைக்கப்பட்டதாம். அத்தலத்திலுள்ள மூர்த்திகளுக்கும் பழுவூர் மூர்த்திகளின் பெயர்களே இடப்பட்டு வழங்குகின்றன. இத்தலம் தேவாரம், திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலம். சோழ மன்னர்களால் வழிபடப் பெற்றது. பல கல்வெட்டுகளை உடையது.
இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாத பிரம்மோற்சவம் விசேஷம். அச்சமயம் ஒவ்வொரு நாளும் பெருமான் பல வாகனங்களில் காட்சி தருகிறார். மூன்றாம் நாள் திருவிழாவில் காலையில் பெருமான் பல்லக்கில் எழுந்தருளி மேலைப்பழுவூர் சென்று தங்கி, ஜமதக்னி முனிவருக்குக் காட்சி கொடுத்து, இரவில் ஊர்வல மாகத் திரும்புவார். இது தவிர, நவராத்திரி, திருவாதிரை நாட்களில் சுவாமி புறப்பாடும், பிற விழாக்களும் நடைபெறுகின்றன. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இத்தலத்தைக் குறித்து 23 கல்வெட்டுகள் உள்ளன. அவை தென்னிந்திய கல்வெட்டுப் புத்தகத்தின் ஐந்தா வது பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலத்தில் பழுவூர் என்பது சிறு பழுவூர், திருவாலந்துறை என்னும் பெயர்களாலும், உத்துங்க வளநாடு என்னும் பெயராலும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. குலோத்துங்க சோழன், ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் முதலிய சோழ மன்னர்கள் காலத்தில் கோயிலுக்குப் பல நிலங்களும், பணமும், பாத்திரங்களும், நகைகளும், நாந்தா விளக்கெரிக்க ஆடுகளும் தானம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செவிளை யாடுபழு வூரே
- என்று பாடுகிறார் ஞானசம்பந்தர்.
செல்லும் வழி
அரியலூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 12 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரை.
தொடர்புக்கு: +91 99438 82368.


Comments