மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமி நாளும் கூடிவரும் நாளே மாசி மகம். மாசி மாதத்தை ‘கும்ப மாதம்’ என்றும், மாக மாதம் என்றும் அழைப்பர். மாசியில் மக நட்சத்திரத்தின் ஈர்ப்பு காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்றுக்கள் உண்டாகின்றன என்கின்றன அறிவியல் உண்மைகள்.
இந்நாளில் பெரும்பாலான கோயில்களில் உற்சவத் திருமூர்த்தங்களைக் கடல், ஆறு, குளம் முதலான நீர் நிலைகளில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி காண்பது தொன்மையான மரபு. மாசி மாத மக நட்சத்திரத்தன்று இறைவன் கடலில் நீராடலுக்குச் சென்று வருவதை, ‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’ என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
‘ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடுந் தீர்த்த...’ என மாசி மகத்தின் பெருமையை விளக்குகிறது மாணிக்கவாசகரின் திருவாசகம். சிவபெருமானும் அம்பிகையும் சேர்ந்தது போன்று விளங்கும் தீர்த்தங்களில் நீராடி இறைவழிபாடு செய்வது நம் சமய நெறிகளில் பொதுவான ஒன்று. அதிலும் கும்பகோணம் மகா மகத்திலும், ஹரித்வார் கும்ப மேளாவிலும் நீராடுவது மிகப் பெரிய பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மக விழாவில் திருப்பராத்துறை ஆலயப் பெருமானுக்கு மகா நைவேத்தியம் படைக்க ராஜராஜன் நிலம் அளித்ததையும், திருச்செந்தூரில் இவ்விழா சிறப்பாக நடைபெற, வரகுண பாண்டியன் ஏற்பாடு செய்ததையும், நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா மக விழாவை விஜயநகரப் பேரரசராகிய கிருஷ்ணதேவராயர் கண்டு களித்த செய்தியையும் கோயில் கல்வெட்டுகளில் காண முடிகிறது.
தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரை நதியில் நீராடி சாபம் நீங்கி நற்கதி பெற்றான் எனவும், பாவம் போக்கிய சிவபெருமானைப் போற்றி தீபம் ஏற்றி வழிபட்டான் எனவும் ஸ்காந்த புராணம் கூறுகிறது.
மாசி மக நாள் மட்டுமல்ல, இம்மாதத்தின் அனைத்து நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராட தோஷங்கள் அகலும். மக நட்சத்திர நாளில் நீராடுவது ‘மாக ஸ்நானம்’ எனப்படும். ‘மாக ஸ்நானம் செய்பவர் மூன்று முறை தலை மூழ்க வேண்டும். முதல் முறை மூழ்கும்போது பாவங்கள் அகலும். இரண்டாவது முறை மூழ்கும்போது வைகுண்டப் பேறு கிடைக்கும். மூன்றாவதாக மூழ்கும்போது மூழ்கியவனுக்கு என்ன பலன் தருவது என பகவானே திகைப்பார்’ என்கிறது மாக புராணம்.
Comments
Post a Comment