கலியுக வரதன்

‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தூய நற்ஜோதி நாராயணன்’ என்பார்கள். அப்படி கற்தூணில் காட்சி கொடுத்து பத்தர்களைக் காப்பவர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாளிள்.
ஏறக்குறைய இருநூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு செதலவாடி கிராமத்திலிருந்து கோபால படையாச்சியார் தனது தாமாமன் ஊரான கடுகூரில் குடி பெயர்ந்து அருகேயுள்ள காடுகளைத் திருத்தி வேளாண்மையைப் பெருக்கி வந்த சமயம். ‘கோபாலகுடிக்காடு’ என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இன்றைய கோப்பிலியங்குடிக்காடு. கோபாலனுக்கு ஆண் வாரிசு பிறக்க, அந்தக் குழந்தைக்கு ‘மங்கான்’ எனப் பெயரிட்டார்.
தந்தையைப் போல வேளாண்மையில் சிறந்த மங்கானும், மாடுகளை நிறைய வளர்த்து வந்தார். அந்த மந்தையில் இருந்த ஒரு வெள்ளைப் பசு ஒருநாள் தனது கன்றுடன் மாயமாகி விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலை. மூன்றாம் நாள் இரவு அழகிய திருமேனியுடைய ஒரு பெரியவர் கனவில் தோன்றி, ஊரின் மேற்குப் புறத்தில் இரண்டு மைல் கல் தொலைவில் ஆலமரத்துக்கும் மகாலிங்க மரத்துக்கும் இடையே, சங்கு இலை புதரருகே உன் மாடும் கன்றும் நிற்கும்" என கூறி மறைந்தார்.
மங்கான், ஆட்களை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட அடையாளத்தை அடைந்தபோது, சங்கு புதரின் மீது சாய்ந்துக் கிடந்த கம்பத்தின் மீது பசு பால் சொரிந்தபடி நின்றது. அவர் அழைத்தவுடன் பசு அவருடன் வீடு திரும்பியது.
சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே பெரியவர் கனவில் தோன்றி, குழந்தாய் மங்கான், பொய் பொருளான பசுவை மட்டும் அழைத்துக் கொண்டு, மெய்பொருளான என்னை கைவிட்டாய். உன் முன்னோர்கள் செதலவாடி கிராமத்தில் என்னை (பெருமாள்) வழிபட்டார்கள். எமக்குக் கோயில் கட்ட கம்பம் ஏற்றி கானகம் வழியே வந்தபோது வண்டி அச்சு முறிந்ததால் முனை முறிந்த கம்பத்தை விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.
சாய்ந்த கம்பத்தை நிலைநிறுத்தவும், வணங்கவும் உனக்குதான் உரிமையுள்ளது. உன் சந்ததிகளையும் என்னை வணங்குவோரையும் காப்பேன். இதை உனக்கு உரைக்கவே யாம் பசுவை மறைத்தோம்" எனக் கூறி மறைந்தார்.
கம்பத்தை நிலைநிறுத்தி வழிபடத் தொடங்கினார் மங்கான். மேலும் தனது உடைமைகளைக் கொண்டு ஆலயம் அமைத்தார்.
சுமார் 12 அடி உயர கம்பமாய் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார் வரதராஜப் பெருமாள். தாயார் சன்னிதி இல்லை. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள். எதிரே விளங்கும் கோலத்தில் கருடாழ்வார். ஒரே சன்னிதிதான். அழகிய சுற்றுப் பிராகாரத்துடன் கூடிய எழிலார்ந்த ஆலயம்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முடியிறக்குதல், பிறக்கும் முதல் பசுக் கன்றை விடுதல், தானியங்களைச் செலுத்துதல் போன்ற நேர்த்திக் கடன் மூலம் தங்கள் பக்தியைச் செலுத்தி வருகிறார்கள்.
பெருமாளுக்கு நித்தியகால பூஜைகளும், மாதாந்திர பூஜைகளும் தவறாமல் நடக்கின்றன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஸ்ரீராமநவமியன்று கொடியேற்றத்துடன் பத்து நாட்களுக்கு திருவிழா நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம் நாள் ஏகாந்த சேவை. இந்த சமயத்தில் கடல் போல பக்தர் கூட்டம் அலைமோதும்.
ஸ்தல விருட்சம் மகாலிங்க மரம். கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாவும், மங்கான் வழி தோன்றலுமாகிய கோவிந்தசாமி கூறுகையில், எமது முன்னோர் மங்கான் காலம் தொட்டு பெருமாளுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளோம். பக்தர்களின் தரிசனத்துக்குத் தேவையான வசதிகளைச் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார். நாம் புறப்படும்போது, ஆக்கங்கள் எல்லாம் அளித்து எம்மை ஆதரவாய் காக்கின்ற தெய்வம் கலியுகத்து எம்பெருமான் நோக்கம் தனியுடையார் நோயின்றி துன்பமின்றி சீர்பெற்று வாழ்வாரே..."எனப் பாடிக் கொண்டிருந்தார் ஒரு பக்தர். இதை ஆமோதிக்கும் விதமாக கோயில் மணியும் ஒலித்தது.
செல்லும் வழி
அரியலூரிலிந்து ஐந்து கி.மீ. பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல் 12.30 வரை. மாலை 3 மணி முதல் 9 வரை.
தொடர்புக்கு : +91-4329- 228 890


Comments