மகாசிவராத்திரி மகிமை!

மகாசிவராத்திரி இரவு, நான்கு சாமங்களாகப் பிரிக்கப்பட்டு, சிவபெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. முதல் சாமப் பூஜையின்போது தாமரை மலர்களால் அர்ச்சித்து, பொங்கலை நிவேதனம் செய்து, ரிக் வேதத்தை ஓதி வழிபட வேண்டும். இரண்டாம் சாமப் பூஜையில் வில்வத்தால் (சில கோயில்களில் துளசியும் சேர்த்து) அர்ச்சித்து,பாயசம் நிவேதித்து யஜுர் வேதத்தை ஓதி வழிபட வேண்டும்.
மூன்றாவது சாமத்தில் வில்வத்தால் அர்ச்சித்து, எள், மாவு கலந்த உணவை நிவேதித்து சாம வேதத்தை ஓதி வழிபட வேண்டும். நான்காம் சாமத்தில் நீலோத்பல மலர்களால் அர்ச்சனை செய்து, எளிமையான ஒரு பிரசாதத்தை நிவேதித்து அதர்வன வேதத்தை ஓதி ஈசனை வழிபடுவது சிறப்பு.
சிவபெருமானுக்கு உகந்த எட்டு விரதங்களை ஸ்கந்தபுராணம் குறிப்பிடுகிறது. அவை சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசுவர விரதம், மகாசிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிஷப விரதம் என்பன. இவற்றுள் மகாசிவராத்திரி விரதமே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியன்று அனுஷ்டிக்கப் படுவது மகாசிவராத்திரி விரதம்.
மகாசிவராத்திரி விரதம் கடைபிடிப்போர் அன்றைக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி விரதமிருக்க வேண்டும். மறுநாள் மகாசிவராத்திரியன்று காலையில் குளித்து, சிவ சிந்தனையுடனிருந்து, அன்று இரவு நான்கு சாம பூஜை செய்யவேண்டும். வயதானோர், நோய்வாய்ப்பட்டோர் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்தபிறகும் தண்ணீர், பால், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இரவு பதினான்கு நாழிகைக்கு ஒரு நாழிகை சிவபெருமான் லிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவ நாமத்தைப் போற்றி விரதமிருத்தல் வேண்டும். அன்றிரவு ஈசனை ஒரு வில்வ இலையால் பூஜித்தாலும்கூட, கோடி மலர்களால் ஈசனை பூஜித்ததற்கு சமம்.
அடுத்த நாள் காலையில் நீராடி, சிவதரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்கவேண்டும். தூக்கம் கூடாது.
அதன்பின் தம்மால் முடிந்ததை அந்தணர்க்கு தானமாக அளித்து, தாமும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இவ்விரதத்தைக் கடைபிடிக்க, புத்திசாலிக் குழந்தைகள் அமைவதோடு, வற்றாத செல்வமும் நிலைக்கும். இம்மையில் நமது எல்லா தோஷங்களையும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளைத் தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி, சகல மங்கலங்களையும் வழங்குவதுடன், நமக்கு மறு பிறப்பு இல்லாமல், சிவகணங்களுள் ஒருவராகும் வாப்பையும் இவ்விரதம் வழங்குகிறது.
பிரளயத்தில் பிரபஞ்சமே சூனியமாகிவிட, உலகினைத் திரும்பவும் படைக்கும் பொருட்டு, ஐந்தொழில்களையும் ஈசனே ஏற்று நடத்த வேண்டி, இரவின் நான்கு சாமங்களிலும் அன்னை பார்வதி, சிவபெருமானை வழிபட்ட நாளே மகாசிவராத்திரி என்றும், ஈசனின் அடி, முடி தேடி தோற்று செருக்கு நீங்கிய திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி அளித்த நாளே மகாசிவராத்திரி என்றும், அமிர்தம் வேண்டி, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது பாம்பு நஞ்சைக் கக்க, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அந்நஞ்சை சிவபெருமான் அருந்தி நீலகண்டரான காலமே மகாசிவராத்திரி என்றும் புராண நிகழ்வுகள் கூறுகின்றன.
இவை மட்டுமின்றி, அன்னை பார்வதி கடுந்தவ மியற்றி சிவபெருமானின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரியானது, சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்றது, கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்குத் தம் கண்களையீந்து முக்தி பெற்றது, பகீரதன் சிவ பெருமானை நோக்கி கடுந்தவமியற்றி கங்கையை பூமிக்கு வரவழைத்தது, மார்க்கண்டேயருக்காக சிவ பெருமான் காலதேவனை தண்டித்தது ஆகியவையும் மகாசிவராத்திரியன்று நிகழ்ந்தவைகளாகக் கூறப்படுகின்றன. இவ்விரதத்தை கட்டுப்பாட்டுடனும் பக்தியுடனும் கடைபிடித்து உமையொருபாகனான சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரமாவோம்.
இனி, மகாசிவராத்திரியன்று நடைபெற்றதாகக் கூறப்படும் புராணக் கதை ஒன்றைக் காண்போம்.
முன்பொரு காலத்தில் குருத்ருகன் என்னும் வேடன் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தான். ஒருநாள் வேட்டையின்போது அவனுக்கு ஒரு விலங்கும் அகப்படவில்லை. சோர்வுடன் தமது குடுவையில், அருகிலிருந்த ஆற்றிலிருந்து தண்ணீர் கொஞ்சம் எடுத்துக்கொண்டு கரையோரம் இருந்த ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். நீர் அருந்த ஏதாவது விலங்கு வந்தால் வேட்டையாடலாம் என்று காத்திருந்தான்.
அந்தி சாய்ந்தது. அன்று முழுவதும் அவன் உணவு ஏதும் உட்கொள்ளாததால் உறக்கமும் வரவில்லை. முதல் சாமம் வந்தது. அப்போது பெண் மான் ஒன்று ஆற்றில் தண்ணீர் அருந்த அங்கு வந்தது. மானைக் கண்ட வேடன் அதை வேட்டையாட ஆயத்தமானான். அப்போது ஏற்பட்ட சலனத்தில் அவனது குடுவையிலிருந்து தண்ணீர் சிறிது கீழே சிதறியது. அம்மரத்திலிருந்த இலைகளும் கீழே விழுந்தன. வேடனைக் கண்ட மான் அவனிடம், எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். எனது குழந்தைகளை அவற்றின் தகப்பனிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதன்பின் என்னை நீங்கள் வேட்டையாடலாம்" என்றது. வேடனும் ஒப்புக்கொண்டு அதனை விட்டுவிட்டான்.
இரண்டாம் சாமம் வந்தது. இப்போது வேறொரு பெண் மான் அங்கு நீர் அருந்த வந்தது. மீண்டும் வேடன் ஆயத்தமாக, முன்புபோலவே சலனம், குடுவையிலிருந்து நீர் சிதறல், மரத்திலிருந்து இலை உதிர்தல். அப்பெண் மானும் தமக்குக் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும், தாமும் தமது குழந்தைகளை அதன் தகப்பனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது. வேடன் அதனை ஏற்று அதையும் போக விட்டான்.
மூன்றாம் சாமம் வந்தது. இப்போது ஆண் மான் ஒன்று தாகம் தீர்க்க வந்தது. இம்முறையும் சலனத்தால் நீர் சிதறல், இலை உதிர்தல் நடந்தது. வேடனைக் கண்ட அந்த ஆண் மானும், தமது குழந்தைகளையும், இரு மனைவியரையும் விட்டு விட்டு வந்துள்ளேன். சிறிது நேரம் பொறுத்துக் கொண்டால் தமது குழந்தைகளை அதன் அன்னையரிடம் ஒப்படைத்துவிட்டு வேடனுக்கு இலக்காவதாகச் சொல்லியது. வேடனும் ஒப்புக் கொண்டான்.
நான்காம் சாமம் வந்தது. அப்போது அவகாசம் கேட்ட மூன்று மான்களும், ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ விரும்பாமல், தங்களது குட்டிகளை வேறொரு மானிடம் ஒப்படைத்துவிட்டு வேடனுக்கு உணவாக அவனிடம் சரண் புகுந்தன. மான்களின் சத்தியத்தை எண்ணி வியந்த வேடன், அவைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டான். பொழுது புலர்ந்ததால் மரத்திலிருந்து கீழிறங்கினான். அப்போதும் முன்புபோலவே நீர் சிதறல், இலை உதிர்தல் நடந்தது.
இரவு முழுவதும் வேடன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அம்மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம். வேடனின் சலனத்தால் குடுவையிலிருந்து நீர் சிதறியது, சிவலிங்கத்திற்கு அபிஷேகமாயிற்று. உதிர்ந்த வில்வ இலைகளோ, அர்ச்சனையாயிற்று. அன்றைய இரவோ மகாசிவராத்திரி என்பதால் வேடன் அவனையறியாமலேயே நான்கு கால சிவபூஜை செய்த பலனைப் பெற்றான். அதனால் அவன் மனதில் ஊறிய கருணையால் மான்களையும் பிழைத்துப் போகவிட்டான்.
கீழிறங்கி வந்த வேடனுக்கு மான்களின் உருவில் வந்த சிவபெருமான் காட்சி தந்து, எம்மை இந்நாளில் நான்கு கால பூஜை செய்து வழிபட்டதனால், திருமாலின் ராமாவதார காலத்தில் அவரின் உற்ற தோழனாகி உயர்வு பெறுவாய்" என்று அருள்பாலித்தார். அந்த வேடன்தான் ஸ்ரீராமனுடைய வனவாசத்தின்போது, உம்மோடு சேர்த்து ஐவரானோம்" என்று கூறி ஸ்ரீராமபிரானால் ஆரத்தழுவி ஆசீர்வதிக்கப்பட்ட வேடர் குலத் தலைவன் குகன்.

Comments