'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!' எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு கருத்துடன் செயல்பட்டால், எதையும் வெல்லலாம்; இறைவனின் பேரருளுடன் வளமாக வாழலாம்!
மண்ணைப் பொன்னாக்கும் காவிரி நதி பாயும் சோழ தேசத்தில், கல்லைக் கலையாக்கும்... அழகிய சிற்பங்களாக உயிர் கொடுக்கும் சிற்பிகளும் அதிகம் உண்டு. முத்தரச் சோழன் எனும் சிற்றரசன் ஆணைப்படி, சிக்கல் - பொறவச்சேரியில், முருகப்பெருமானின் திருவிக்கிரகத்தை வடித்துத் தந்தார் ஒரு சிற்பி. விக்கிரகத்தைக் கண்ட மன்னன், அசந்துபோனான்; இதுபோன்ற அதியற்புதமான விக்கிரகம் தன்னிடம் மட்டுமே இருக்கவேண்டும்; இந்தப் பெருமை, வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணிய மன்னன். சிற்பியை அழைத்துக் கையை நீட்டச் சொன்னான். விலைமதிப்பற்ற விக்கிரகத்தைச் செய்ததற்குப் பொன்னும் பொருளும் தரப்போகிறான் என மகிழ்ச்சியோடு சிற்பி கையை நீட்ட... வாளை எடுத்து, ஓங்கி சிற்பியின் கட்டை விரலை வெட்டினான் மன்னன். துடித்துக் கதறினார் சிற்பி. 'இறைவனின் திருமேனியை இனி எப்படி வடிப்பேன்' என்று அழுதார். ஆனாலும் இறைவிக்கிரகத்தை வடித்தே தீருவது என்று கடும் முயற்சியில் இறங்கினார்.
எட்டுக்குடியில் இருந்து அழைப்பு. முருகன் என்றாலே அழகன்; அழகனை அழகு ததும்பும் விக்கிரகமாக வடிப்பது அதைவிட அழகு! இந்த முறையும் அழகுற உருவானது கந்தனின் விக்கிரகம். கட்டை விரல் இல்லாத நிலையிலும், அளவு பார்த்து, உளியைப் பிடித்து, சுத்தியலால் அடித்து, கல்லைப் பக்குவமாகச் செதுக்கி விக்கிரகம் செய்த சிற்பியைக் கண்டு ஊரே வியந்தது; பாராட்டியது. இதைக் கண்டு அதிர்ந்தான் மன்னன். தனது ஏவலாட்களிடம் சிற்பியைத் தூக்கி வரப் பணித்தான்.
''பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்துச் சிற்பம் வடிக்க உனக்கு இந்தக் கண்கள்தானே துணை நின்றன?! இனி உன்னால் எவரையும் பார்க்க முடியாது!'' என்று சொல்லி, சிற்பியின் கண்கள் இரண்டையும் பிடுங்கினான் மன்னன். சிற்பி கதறினார்; நெஞ்சில் அடித்துப் பதறினார்; 'முருகா... முருகா...' என அரற்றினார். மகளின் கைப்பிடித்து நடந்தார்.
இந்நிலையில், இன்னொரு வாய்ப்பும் வந்தது. 'விக்கிரகம் பேசணும்; நேர்ல ஸ்வாமியைப் பார்க்கிற மாதிரி ஜீவனோடு இருக்கணும். அப்படியரு விக்கிரகத்தைச் செய்யறதுக்கு இந்தச் சிற்பிதான் சரியான ஆள்' என்று தேடிவந்து, வேலை தந்தனர்.
ஆனால், 'கட்டை விரலும் இல்ல; கண்ணும் இல்ல. பாவம் அவன், எப்படியப்பா சிலை வடிப்பான்?' - ஆதங்கப்பட்டனர் சிலர்.
'ஒரு சிலை செஞ்சப்ப, கட்டைவிரல் போச்சு; அடுத்ததா பண்ணினதும் கண்ணை நோண்டிட்டாங்க. இப்ப... மூணாவது சிலை செஞ்சா, உசுரையே எடுத்துருவாங்க' என்று பரிதாபப்பட்டனர் வேறு சிலர். ஆனால், சற்றும் மனம் தளராமல், தொட்டுத் தடவி கல்லைச் சோதனையிட்டார் சிற்பி. மெள்ள மயிலின் உருவத்தைச் செதுக்கினார். உளியை எடுப்பதற்கும், சுத்தியலைப் பிடிப்பதற்கும் மகள் உதவி செய்தாள். தன் சிந்தனை, எண்ணம், கருத்து, நினைவு அனைத்தையும் ஒரே புள்ளியில் குவித்தார் சிற்பி. 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...' என்று பெருங்குரலெடுத்து வணங்கியவர், மெள்ள மெள்ளச் செதுக்கத் தொடங்கினார். அந்தக் கல்... கொஞ்சம் கொஞ்சமாகச் சிற்பமாக மாறியது; சிற்பம் எனும் நிலையைக் கடந்து, இறைத் திருமேனி எனும் உயர்ந்த நிலையை அடையும் நேரம்... திருப்பாதம் துவங்கி, ஆறுமுகங்களையும் 12 கைகளையும், கிரீடத்தையும், ஆபரணங்களையும், கையில் வேல் உள்பட அனைத்தையும் செதுக்கி முடித்தாயிற்று; இனி கண்களைத் திறக்க வேண்டும். அந்தக் கண்களில் பேரொளி ததும்ப வேண்டும்; இங்கு வரும் பக்தர்களையெல்லாம் கண்டு, அவர்களுக்கு அருள் வழங்கவேண்டும்.
''முருகா, என் கண்ணே! கண்ணில்லாதவன் உன்னுடைய கண்ணைத் திறக்கப் போகிறேனப்பா! இந்தத் தலத்தில் குடியேற வா, முருகா! என் உளியிலும் சுத்தியலிலும் வந்து இறங்கி, உன் கண்ணை நீயே திறந்துகொள் அழகப்பா... என் கண்ணே, வா!'' என்று பிரார்த்தித்தபடியே உளி கொண்டு கண் திறந்தார். அடுத்த கணம், அங்கே பேரொளி ஒன்று பரவிச் சூழ்ந்தது; சிற்பியின் முகத்தில் ஒளிப்பந்து ஒன்று வந்து மோதியது. கைகளால் முகத்தை மூடியவர், மெள்ளக் கைகளை எடுத்தார். என்ன ஆச்சரியம்! தரை தெரிந்தது; அண்ணாந்து பார்த்தார்; வானம் தெரிந்தது; அருகில், அருமை மகள் தெரிந்தாள்; எதிரே முருகப் பெருமான் புன்னகைத்தார்.
நெகிழ்ந்து, நெக்குருகி இரண்டு கைகளையும் குவித்து வணங் கினார் சிற்பி. அட..! இரண்டு கைகளிலும் கட்டை விரல்கள் இருந்தன.
சிற்பிக்கு முருகப்பெருமான் அருளியதை அறிந்த மன்னனும் தன் தவற்றை உணர்ந்தான்; பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்தான். அதுவரை பவித்திர மாணிக்க சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட அந்த ஊர், எண்ணத்தைக் கண்ணாகக் கொண்டு செயல்பட்ட சிற்பியைப் போற்றும்விதமாக 'எண்கண்' என அழைக்கப் பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எண்கண் திருத்தலம். ராஜராஜசோழன் முதலான எண்ணற்ற மன்னர்கள் திருப்பணி செய்த ஒப்பற்ற ஆலயம் இது!
இங்கே... ஞானகுருவாக இருந்து தென்திசை நோக்கியபடி அருளுகிறார் ஸ்ரீமுருகப்பெருமான். கருவறையை ஞானசபை என்பர். பிரம்மாவுக்கு பிரணவ மந்திரத்தை போதித்து அருளிய கதைதான் தெரியுமே?! இங்கே... சிவனாரையும் முருகப் பெருமானையும் பிரம்மா வழிபட்டுப் படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றார். எனவே, இங்கேயுள்ள சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரஹன்நாயகி.
இங்கே... தம்பிக்குப் பலம் சேர்க்கும் வகையில், பிரமாண்டமான திருமேனியராக ஸ்ரீவிநாயகப்பெருமானும் இருக்கிறார். பிரம்மன் வழிபட்டதால் பிரம்ம க்ஷேத்திரம், சூரிய பகவான் வணங்கியதால் பாஸ்கர க்ஷேத்திரம் எனப் பெருமைகள் பல உண்டு. பிருகு முனிவர், சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற தலமும் இதுதான்! திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் இங்கு வந்து, கந்தனின் அழகைப் பாடியிருக்கிறார்.
ஸ்ரீசுப்ரமணியரையும், ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் தரிசித்து வணங்கினால், கண்களில் உள்ள குறைகள் யாவும் நீங்கும்; செவ்வாய் தோஷங்கள் விலகும். பிரம்மனுக்கே உபதேசித்து ஞானகுருவாக இருக்கிறார் அல்லவா சுப்ரமணிய ஸ்வாமி! ஆகவே, கல்வி- கேள்வியில் சிறந்து விளங்கலாம். சிற்பிக்கு அருளிய தலம் என்பதால், இங்கு வந்து வணங்க கலை, அறிவு முதலானவற்றில் விற்பன்னராகலாம். புத்திர பாக்கியம், திருமண பாக்கியங்கள் மட்டுமின்றி சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தந்து அருள்பாலிக்கிறார் முருகப்பன்.
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தில், 25.4.10 அன்று (ஞாயிறு) காலை 8 முதல் 9.15 மணிக்குள் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெறுகிறது.
எண்கண் முருகனை கண்குளிரத் தரிசியுங்கள்; உங்கள் எண்ணமெல்லாம் ஈடேறும்!
முருகா சரணம்.
Comments
Post a Comment