ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்

லம் இருக்கும் இடத்தில் பயமும் இருக்கும்; இதைத் தான் பலவீனம் என்கிறோம். இப்படியரு பலமும் அதையட்டிய பயமும் ஒன்றுசேர... கலங்கிக் கதறியபடி இறைவனின் திருவடியை நாடுவர்; 'நீதாம்பா காப்பாத்தணும்' என்று சரணடைவர்!
கார்கோடகன், நீலன் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்த நாகம் பலம் பொருந்தி யதுதான்; தன் நாக்கில் விஷத்தை வைத்தபடி தன்னைக் காபந்து செய்துகொள்ளும் சூரப்புலிதான்! ஆனாலும், கருடனையும் அதன் கூரிய நகங்களையும் கண்டால், மொத்த உடலையும் குறுக்கிக்கொள்கிறது; நடுங்கி, வாலைச் சுருட்டிக்கொள்கிறது. 'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்போம். ஆனால், கருடனைக் கண்டால், அந்தப் பாம்புகூட கிடுகிடுத்துப் போகிறது!
அஷ்டமா நாகங்களில் ஒன்றான கார்கோடகன், வாசுகியின் உடன்பிறந்தான். கருட னிடம் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று யோசித்த கார்கோடகன், கயிலைநாதனே கதி என எண்ணி, அந்த வனத்துக்கு வந்தது; ஈசனை எண்ணித் தவம் இருந்தது. அதில் மகிழ்ந்த சிவனார், கார்கோடகனுக்குக் காட்சி தந்தார்; 'உனக்கு எவராலும் எந்தத் தீங்கும் நேராது' என அருளினார். அதில் நெகிழ்ந்த கார்கோடகன், 'உங்களை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சர்ப்பம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அருளுங்கள்' எனக் கோரிக்கை விடுக்க, 'அப்படியே ஆகட்டும்' என்றார் சிவனார். அதன்படி, இங்கு வருகிற எண்ணற்ற பக்தர்களுக்கு, இன்றளவும் அருள் வழங்கி வருகிறார் சிவபெருமான்.
நாகம் வழிபட்டதால், சிவனாருக்கு ஸ்ரீநாகநாத ஸ்வாமி எனும் திருநாமம்; எந்நேரமும் விஷத்தை வைத்திருக்கும் அல்லவா நாகம்; ஆகவே, நாகம் வழிபட்ட தலம், நீலப்பாடி எனப்படுகிறது (நீலம் என்றால் விஷம்). அதேபோல், கருடனும் நாகத்திடம் இருந்து காத்துக்கொள்ள, சிவனாரை வேண்டித் தவம் செய்ததாம்! ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகருடேஸ்வரர்! ஊருக்கு அருகிலேயே உள்ளது இந்த ஆலயம்.
நாக தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம் தலத்துக்கு இணையான தலமான நீலப்பாடி, நாகை மாவட்டத்தில் உள்ளது. நீலப்பாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு பயணித்தால், ஆலயத்தை அடையலாம்.
அற்புதமான, பிரமாண்டமான, கிழக்குப் பார்த்த ஆலயம். ஆனால், கோபுரம்தான் இல்லை. உள்ளே கிழக்குப் பார்த்த நிலையில், தோஷங்களை நீக்கி அருளும் ஸ்ரீநாகநாத ஸ்வாமி யின் அழகிய லிங்க தரிசனம்!
வியாக்ரபாத முனிவர் இங்கே, இந்தத் தலத்து இறைவனை நெடுங்காலம் தவம் இருந்து வழிபட்டு, அருள்பெற்றாராம். அவர் மட்டுமா? ஏழரைச் சனியின் பிடியில் இருந்து அனைத்தையும் இழந்து தவித்த நள மகாராஜா, திருநள்ளாறு தலத்துக்குச் செல்வதற்கு முன், இங்கு வந்து நாகநாத ஸ்வாமியின் அருளும் ஆசியும் பெற்றார் என்கிறது ஸ்தல வரலாறு. முனிவர்கள், மன்னர்கள், நாகம் முதலான விஷ ஜந்துக்கள் என வழிபட்டுப் பலன் பெற்ற சாந்நித்தியம் கொண்ட ஆலயம்தான்! ஆனால் வைபவங்களும் கோலா கலங்களும் குறைந்துவிட்டன. பராமரிப்புகள் ஏதுமின்றி, பரிதாபமாகக் களையிழந்து, இதயத்தை கனக்கச் செய்கிறது ஆலயம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயிலில், 72-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்ததுடன் சரி... அதன்பின், கடந்த 38 வருடங்களாக, திருப்பணிகளும் இல்லை; கும்பா பிஷேகமும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஊர் மக்கள்.
அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசௌந்தரவல்லி. பெயருக்கேற்ப கொள்ளை அழகு. அதேபோல், ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் காட்சி தரும் ஸ்ரீசுப்ரமணியரும் பேரழகு. ஒருகாலத்தில் அத்தனை சுவாமிகளுக்கும் வஸ்திரமும் நைவேத்தியமும்கூட இல்லையாம்! மடப்பள்ளி இடிந்தும் சிதைந்தும் கிடக்கிறது. கோயிலின் அர்ச்சகர், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு தினமும் வீட்டில் இருந்து நைவேத்தியம் எடுத்துவந்து விடுகிறார்.
ஆலயத்தின் சக்தியை உணர்ந்த அன்பர்கள் சிலர், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் இன்னும் உள்ள இறைத் திருமேனிகளுக்கும் வஸ்திரம் சார்த்துகிறார்களாம்! கோயிலில் மாரியம்மனின் விக்கிரகமும் உள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் சிலர் வந்து, மாரியம்மனுக்கு விளக்கேற்றி வணங்கிச் செல்கின்றனர்.
இதேபோல், சிவசந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீஜெய துர்கையும் சக்திவாய்ந்தவள். இரண்டு அசுரர்களை அழித்து, ஒருவனை வழக்கம்போல் காலின்கீழும், இன்னொருவனை காதுகளில் ஆபரணமாகவும் வைத்திருக்கிறாள். எட்டுக்கரங் களுடன் காட்சி தரும் ஸ்ரீஜெயதுர்கையை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில், வஸ்திரம் மற்றும் எலுமிச்சை மாலை சார்த்தி வழிபட... திருமண தோஷம் நீங்கும்; பிள்ளை வரம் கிடைக்கப்பெறுவர்; நாச காரர்களின் சதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள். இவளின் அருளால் பொன்னும் பொருளும் கிடைக்கப்பெற்ற அன்பர்களில் ஒருவர், கோஷ்ட துர்கைக்கு அழகிய சந்நிதியே அமைத்துவிட்டார்.
சர்ப்பம், ராகு-கேது முதலான சகல தோஷங்களையும் நீக்கும் ஸ்ரீநாகநாத ஸ்வாமி குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற தலம் திருப்பணிகள் ஏதுமின்றி, கும்பாபிஷேக வைபவம் காணாமல், களையிழந்து இருக்கலாமா? விழாக்களும் விசேஷங்களும் நடக்கவேண்டாமா? கோலாகலங்களும் கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கவேண்டாமா?
நீலப்பாடி தலத்தின் நாயகனை தரிசியுங்கள்; உங்களுக்கு என்ன தேவையோ அதனை வழங்கி நிறைவேற்றுவது நாக நாதரின் பொறுப்பு; ஆண்டவனுக்கும் ஆலயத்துக்கும் என்ன தேவையோ, அதில் என்ன முடியுமோ... அதனைச் செய்ய வேண்டியது உங்களது பொறுப்பு!
பொறுப்புடன் செயல்பட இறையருள் துணை நிற்கட்டும்!
பிரம்மஹத்தி தூணும்... சூரியனும் சனிபகவானும்!
ஸ்ரீநாகநாதர் சந்நிதிக்கு முன்னதாக, வலதுபுறத்தில் பிரம்மஹத்தி தூண் ஒன்று உள்ளது. பிரம்மஹத்தி தோஷம் விலகுவது போலான சிற்பம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு என்பர். எனவே பிரம்மஹத்தி தூணை தரிசித்தால், பெரும் புண்ணியம் என்று சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
இன்னொன்று... இங்கே... ஸ்ரீசூரியபகவானும் ஸ்ரீசனீஸ்வர பகவானும் நேருக்கு நேர் நின்றபடி காட்சி தருகின்றனர். இது விசேஷ அம்சம் எனப் போற்றுகின்றனர் அன்பர்கள். சனிக்கிழமைகளில் இவரை வணங்கி, ஈசனையும் வழிபட்டால்... சனி தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை!
எங்கே இருக்கிறது?
நாகை மாவட்டம் கீவளூருக்கு அருகில் உள்ளது நீலப்பாடி கிராமம். திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நீலப்பாடி. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு ஊருக்குள் வந்தால், கிழக்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்

Comments