'திருவாரூரும் வேண்டாம்... தியாகேசரும் வேண்டாம்

'அடியார்க்கு அடியேன் போற்றி..!'
- திருவாரூர் எல்லைக்கும் அப்பால் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்தக் குடிசையின் வாசலில் நின்று, கம்பீரமாகக் குரல் கொடுத்தார் அந்த அடியவர்.
மறுகணம்... அகமும் முகமும் மலர வெளிவந்தார் விறன்மிண்டர்; மேனியெங்கும் வெண்ணீறு துலங்க... சிவப்பழமாகக் காட்சி தந்த அடியவரைக் கண்டதும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் விறன்மிண்டர்.
ஆமாம், சிவனடியார் என்றால், விறன்மிண்டருக்கு அவ்வளவு பிரியம்! உமையருபாகனையே நேரில் கண்டதுபோல் உள்ளம் பூரித்துப்போவார். ஆனால்... வரும் அடியவர்கள் எவரேனும் திருவாரூர் என்ற பேச்செடுத்தால்... அவ்வளவுதான்; பொல்லாத கோபம் வந்துவிடும் விறன்மிண்டருக்கு!
பின்னே... 'ஆரூரும் வேண்டாம்; ஆரூர் தியாகேசனும் வேண்டாம்' என்று புறக்கணித்த வரிடம்போய், திருவாரூரைப் பற்றிப் பேச்செடுத்தால்... சும்மா விடுவாரா?!
திருவாரூர் மீதும், அங்கே கோயில் கொண்டிருக்கும் தியாகேசர் மீதும் அப்படியென்ன கோபம் அவருக்கு?!
சேர நாட்டில் செங்குன்றூர் எனும் சிற்றூரில், வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த விறன் மிண்டருக்கு, சிவநாமமே உயிர்மூச்சு; அடியவர் தொண்டே வாழ்நாள் கடமை! எந்நாட்டவர்க்கும் இறைவனாம் ஈசனின் தென்னாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் தரிசித்து முடித்து, திருவாரூர் வந்து சேர்ந்தார். சிவமணம் கமழும் இந்தத் திருவிடத்தின் சூழலும், தியாகேசர் கோயிலும் அவரை ஈர்க்க, அங்கேயே சில காலம் தங்கினார்.
தினமும் கோயிலுக்குச் செல்வது, தியாகேசரையும் கமலாம்பிகையையும் கண்ணாரத் தரிசிப்பது, கோயிலுக்கு வரும் அடியவர்களின் குறிப்பறிந்து தொண்டாற்றுவது என இனிமையாக கழிந்தன நாட்கள். அப்படித்தான் ஒருநாள்... ஆலய தரிசனம் முடித்து, சக அடியார்களுடன் ஆலய மண்டபத்தில் அமர்ந்திருந்தார் விறன்மிண்டர். திடீரென்று ஆரவாரம்... சிவகோஷத்துடன் கோயிலுக்குள் நுழைந்தது அந்த அடியவர் கூட்டம். அவர்களில் நடுநாயகமாக... மேனியில் திருநீறும், ருத்ராட்சமும் துலங்க, வாய்நிறைய சிவநாமத்துடன் கனகம்பீரமாக வருபவரைப் பார்த்தால்... பெரும் சிவத் தொண்டராகத் தெரிந்தது! மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார் விறன்மிண்டர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவரின் மகிழ்ச்சி காணாமல் போனது. ஆம்! விறுவிறுவென கோயிலுக்குள் நுழைந்த அந்த சிவத்தொண்டர், மண்டபத்தில் வீற்றிருக்கும் விறன்மிண்டரையும் அவர் அருகிலிருந்த அடியார்களையும் கவனிக்காமல் கருவறை நோக்கிச் சென்றார்.
இதுகண்டு விறன்மிண்டருக்குக் கோபம். ''யார் இவர்... அடியார்களை மதிக்காவிட்டால், ஆண்டவனின் அருள் எப்படிக் கிடைக்கும்?'' என அருகில் இருந்தவர்களிடம் இரைந்தார்.
''உமக்குத் தெரியாதா... இவர்தான் சுந்தரர். எம்பெருமான் ஈசனே, தன் தோழனாக பாவிக்கும் அடியவர். இவருக்காக இறைவன் காதல் தூதே சென்றிருக்கிறார்...'' என்று ஒருவர் பயபக்தியுடன் விளக்கத் தொடங்க, அவரை இடைமறித்தார் விறன்மிண்டர்...
''இருக்கட்டுமே..! இறைவனே தோழனாக வந்து தூது சென்றான் என்பதற்காக, இறையடியவரைத் துச்சமாக மதிப்பதா?'' - விறன்மிண்டர் பேசிக் கொண்டிருக்கும்போதே, மற்றொருவர் வந்து, 'உள்ளே சுந்தரருக்கு தியாகேசப் பெருமான் நேரில் தரிசனம் அளித்தார்' என்று தகவல் கூற, விறன்மிண்டரின் கோபம் பன்மடங்கானது!
''அடியாரை அடிதொழாமல் அரனை வணங்கும் ஆரூரர் (சுந்தரர்) புறம்பு; அவரை ஆட்கொண்ட ருளிய தியாகேசரும் புறம்பு. இனி, உயிர் போனாலும் ஆரூர் மண்ணை மிதிக்கப் போவதில்லை'' என்று சபதம் செய்தார். திருவாரூர் எல்லையைவிட்டு வெளியேறினார்.
ஆனால், எல்லாம்வல்ல அந்தத் தியாகேசன் சும்மா இருப்பாரா? தமது திருவிளையாடலைத் துவங்கினார். அடியவராக வந்து விறன்மிண்டரின் குடிசை வாசலில் நின்று குரல்கொடுத்தார்!
தம்மை வணங்கி எழுந்த விறன்மிண்டருக்கு ஆசி கூறினார் அடியவர். அன்பொழுக அவரை குடிசைக்குள் அழைத்துச் சென்று உபசரித்த விறன்மிண்டர், பின்பு மெள்ள... அடியவர் ஒவ்வொருவரிடமும் தான் வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டார்...
''ஸ்வாமி, தங்களின் ஊர் எது? எங்கிருந்து வருகிறீர்கள்... தெரிந்துகொள்ளலாமா?''
அடியவராக வந்திருக்கும் பரம்பொருளும் இதற்காகத்தானே காத்திருந்தார்! சட்டென்று சொன்னார்... ''திருவாரூர்.''
வந்ததே கோபம் விறன்மிண்டருக்கு. திருவாரூர்க்காரரை வெட்டிப்போட ஆயுதத்தைத் தேடினார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மெள்ள நழுவிய சிவனடியார், குடிசைக்கு வெளியே வந்ததும், வேகமாக ஓட்டமெடுத்தார். விறன்மிண்டரும் துரத்த ஆரம்பித்தார்.
இருவரும் எவ்வளவு தூரம் ஓடிவந்திருப்பார்கள் என்று தெரியாது... ஓரிடத்தில் சட்டென்று நின்ற சிவனடியார், மூச்சிரைக்கத் திரும்பி, ''வந்தோம் இப்பால்'' என்றார்.
அப்போதுதான் விறன்மிண்டருக்கு உறைத்தது... அடியவரை துரத்திக்கொண்டு தானும் திருவாரூர் எல்லைக்குள் வந்துவிட்டோம் என்று! 'சபதம் தோற்றுவிட்டது. இனியும் உயிர்வாழக் கூடாது!' என்று முடிவுசெய்தவராய், சற்றும் தாமதிக்காமல், கையில் இருந்த ஆயுதத்தால் தன் கால்களை வெட்டினார். மறுகணம், சிவனடியார் மறைந்து தியாகேசராகக் காட்சி தந்தார். சிவனடியார்கள் மீது விறன்மிண்டர் கொண்ட பற்றுதலைப் போற்றித் திருவருள் புரிந்தார்.
சிவத்தொண்டர் பணியால் விறன்மிண்டர் அடைந்த சிறப்பை அறிந்த சுந்தரர் மனம் நெகிழ்ந்தார். சிவனடியார்களின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்த விளைந்தார்; 'திருத்தொண்டர் தொகை' பாடினார்.
சித்திரை மாதம் 7-ஆம் நாள் (ஏப்ரல்-20) விறன் மிண்ட நாயனாரின் திருநட்சத்திரத் திருநாள். அன்று, இந்த அடியவரின் புகழ்போற்றி, நாதன்தாள் வணங்கிச் சிறப்புறுவோம்!

Comments