முத்துக்குளியல், உப்பளம், பிரமாண்டத் துறைமுகம்... எல்லாவற்றுக்கும் மேலாக கரையக் கரைய இனிப்பேறிச் சுவைகூட்டும் 'மக்ரூன்' ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாநகரம், ஆலயங்களுக்கும் குறைவில்லாத தலம்! குற்றாலமோ... கன்யா குமரியோ போகிறவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆலயங்களையும் தரிசித்து வரலாமே!
அருஞ்சுனை காத்த ஐயனார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் திருத்தலம் திருச்செந்தூர். அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார்
18 கி.மீ. தொலைவில் உள்ளது தேரிக்குடியிருப்பு. ஸ்ரீஅருஞ்சுனை காத்த ஐயனார், கோயில் கொண்டிருப்பதும் இங்குதான். பங்குனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்போது, வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளும் ஐயனாரை தரிசிக்கக் கண்கோடி வேண்டும். நீர் வற்றாத சுனை, இந்தத் தலத்தின் சிறப்பம்சம்!
இங்கேயும் ஒரு திருப்பதி
தேரிக்குடியிருப்பில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது குரும்பூர் வன திருப்பதி ஆலயம். வாரியாரின் ஆலோசனைப்படி கட்டப் பட்ட இந்த ஆலயம், திருமலை திருப்பதி போன்றே அமைந்திருப்பது சிறப்பு. இங்கும் கீழ்த் திருப்பதி, மேல் திருப்பதி ஆகியன உண்டு. இங்கு நெய் விளக்கு ஏற்றிப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறுமாம்.
திருச்செந்தூரின் கடலோரத்தில்...
திருச்செந்தூர் என்றதும் ஆர்ப்பரிக்கும் கடலும் குமரக் கடவுளுமே நம் நினைவுக்கு வருவர். ஆனால், அலைகடல் ஓரத்திலேயே... பிரசித்திபெற்ற ஸ்ரீவைகுண்டநாதரின் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பின்னே பல்வேறு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன. தவிர, முருகன் கோயிலுக்கு வடக்கிலும் தெற்கிலு மாக அமைந்திருக்கும் நாழிக் கிணறு மற்றும் வள்ளிக்குகையையும், கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ள தூண்டுகை விநாயகர் கோயில் மற்றும் சரவணப் பொய்கையையும் அவசியம் தரிசிக்க வேண்டும். முருகப்பெருமான் ஆறு தாமரைகளில் குழந்தைகளாக தவழும் காட்சி, கார்த்திகைப் பெண்களின் சிலைகள், குழந்தை களைக் கவரும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் சிலைகள் ஆகியன சரவணப் பொய்கையின் சிறப்பம்சம். செந்தூரில் வெயிலுகந்த அம்மன் கோயிலும் உள்ளது. அசுரனை வதைக்க இந்த அம்மனிடம்தான் முருகன் வேல் வாங்கிச் சென்றாராம். எனவே, வேல் உகந்த அம்மன் என்றும் திருப்பெயர் கொண்ட இந்த தேவிக்கு, செவ்வரளி மாலை சாற்றி வணங்கினால், எதிரி களும் நண்பர்களாவார்கள்!
குலசையிலும் குமரன்!
திருச்செந்தூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசேகரன் பட்டினம். தமிழகத்தின் தசரா தலமான இந்த ஊரும், இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமுத்தாரம்மனும் உலகப் பிரசித்தி! ஆனால், தேவி முத்தாரம்மன் கோயிலுக்கு அருகிலேயே உள்ள படுக்கை கோயில் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. முருகன் அடியார் ஒருவர், தினமும் திருச்செந்தூர் முருகனுக்கு நடைபெறும் இரவு நேர பூஜையை தரிசிப்பது வழக்கம். காலப்போக்கில் வயோதிகம் காரணமாக, திருச்செந்தூருக்குச் செல்ல முடியாமல் தவித்தார். அவருக்கு அருளும் பொருட்டு முருகனே அவரைத் தேடி வந்தாராம். திருச்செந்தூரில் இரவு பூஜை முடிந்ததும் அடியவர் வீட்டுக்கு வந்து படுத்துவிட்டு, காலையில் கோயிலுக்குத் திரும்புவாராம் முருகன். அந்த இடமே, படுக்கைக் கோயிலாகத் திகழ்கிறது. இங்கு, சயன நிலையில் இருக்கும் முருகனைத் தரிசிக்கலாம். மேலும், குலசேகரப்பட்டினத்தை சுற்றி கோயில் கொண்டிருக்கும் அஷ்ட காளியரைத் தரிசிப்பதும் சிறப்பு.
கட்டபொம்மன் வழிபட்ட வீர ஜக்கம்மா
தூத்துக்குடியில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது பாஞ்சாலங்குறிச்சி. இங்கே வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவாக அமைந்திருக்கும் கோட்டைக்கு அருகிலேயே உள்ளது, வீர ஜக்கம்மா ஆலயம். இங்கே சித்திரைத் திருவிழா விசேஷம். இந்தக் கோயிலுக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குமான சுரங்கப் பாதையை இன்றும் காணலாம். எலுமிச்சை தீபமேற்றி வீர ஜக்கம்மாவை வழிபட்டால் சோர்வு நீங்கி, கம்பீரம் கிட்டுமாம். இந்தப் பகுதி விளையாட்டு வீரர்கள், வீர ஜக்கம்மாவை வணங்கிவிட்டே போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.
- | ||||
Comments
Post a Comment