பயமறியாத வீர அபிமன்யு

அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு. வில்வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களில் இவனும் குறிப்பிடத்தக்கவன். இளம் வயதிலேயே வில்வித்தையில் கைதேர்ந்தவன் எனும் பெருமை இவனுக்கு உண்டு. இவனது அருமைபெருமையை அறிந்த பலராமன், சிவனருள் பெற்ற தனுஸை இவனுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
எந்தவொரு பொருளும் தகுதியான இடத்தில் இணையும்போதுதான், அதன் தன்மை மிளிரும். அதேபோல், அபிமன்யுவின் வீரத்தை உலகுக்கு உணர்த்த தனுஸின் பங்கும் சேர்ந்திருந்தது.
அபிமன்யுவின் வீரம், பாண்டவர்களின் வெற்றியை ஈட்டித்தரப் போதுமானதுதான். ஆனாலும், தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது எனும் பணிவால், யுத்தத்தில் தன்னிச்சையாகப் பங்கேற்கவில்லை அபிமன்யு!
அரச குலம், உயிரைப் பணயம் வைத்து உலகைக் காக்கும் எண்ணம் கொண்டது. மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அரசர்களின் இன்றியமையாத பணி; வீரமே அவர்களது மூச்சு. இன்னல்களில் இருந்து மக்களைக் காப்பதும், தருணம் அறிந்து செயல்படும் குணமும், எதிர் பாராமல் நேரும் சிக்கல்களில் இருந்து எளிதாக விடுபடும் திறனும் அரச பரம்பரையிடம் உண்டு. இவை அனைத்தும் அபிமன்யுவிடமும் இருந்தன. பாரதப் போரில், அவனது மொத்தத் திறமையும் வெளிப்பட்டது; பாண்டவ தரப்பினர் நம்பிக்கையுடன் முன்னேற ஊக்கம் தந்தது.
இதையெல்லாம் கண்டு கலங்கி னான் துரியோதனன். பாண்டவர்களை வெல்ல துரோணாச்சார்யர் ஒருவரே போதும். ஆனால் அவரோ, பாண்டவர் களிடம் கொண்டுள்ள அன்பினால் செயல்படத் தயங்குகிறார்; உள் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று கருதியவன், அதை அவரிடமே தெரிவித்தான். துரோணர் நொந்து போனார். ''வார்த்தைகளால் என்னைப் புண்படுத்தாதே! இன்றைய போரில், வியூகம் அமைக்கிறேன் ஏதாவது செய்து அர்ஜுனனை திசைதிருப்பினால் போதும்; பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சூளுரைத்தார்.
சொன்னபடி வியூகம் அமைத்தார் துரோணர். வியூகத்துக்குத் தெற்கே தொலைவில் இருந்த வீரர்கள்... அர்ஜுனனைத் தங்கள் பக்கம் கவனம் செலுத்தும்படி பார்த்துக்கொண்டனர். இங்கே வியூகத்தில் மாட்டிக் கொண்ட பாண்டவ வீரர்கள் நிலைகுலைந்தனர். பாண்டவ சைன்யத்தின் திணறல், தருமரை யோசிக்க வைத்தது. உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய கட்டாயம். போரில் இறங்க அபிமன்யுவை அனுமதித்தார்.
அர்ஜுனன், கிருஷ்ணன், ப்ரத்யும்னன், அபிமன்யு ஆகிய நால்வருக்கு மட்டுமே வியூகத்தை தகர்க்கும் தகுதி உண்டு. அபிமன்யுவைத் தவிர மற்ற மூவரும் அங்கே இல்லை. விதியானது, அபிமன்யுவைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தைத் தந்தது.
இளம் கன்று பயமறியாது, அல்லவா?! உற்சாகத்துடன் போரில் ஈடுபட்டான் அபிமன்யு. வியூகத்தில் நுழைந்து, அதன் பல மையங்களைத் தகர்த்தபடி முன்னேறினான். எதிரே வந்த அச்மகபுத்திரனை அழித்தான். துச்சாதனனையும் அழிக்க முனைந்தான். ஆனால் அடிபட்ட துச்சாதனன், போரில் இருந்து தப்பியோடினான். சல்யனின் சகோதரனும் கர்ணனின் சகோதரனும் அபிமன்யுவின் அம்புக்கு இரையானார்கள். சல்யனும் அடிபட்டு வெளியேறினான். கர்ணனையும் விரட்டியடித்தான் அபிமன்யு!
கௌரவ சேனைகள் சிதறி ஓடின. இதைத் தொலைவில் இருந்து கவனித்த ஜயத்ரதன், அபிமன்யுவைப் பின் தொடர்ந்த பாண்டவ சைன்யத்தைத் தடுத்தான். உள்ளே நுழையமுடியாமல், பாண்டவ சைன்யம் வெளியேறியது. அபிமன்யு தனிமைப்படுத்தப்பட்டான். ஆனால் அந்த நிலையிலும், துரியோதனனின் புதல்வன் லக்ஷ்மணன், பிருந்தாரகன், கோசல அரசன், பிருஹத்பலன், அஸ்வகேது, காலிகேயன் ஆகிய முக்கியமான வீரர்களை வீழ்த்தினான் அபிமன்யு. அதுமட்டுமா? கர்ணன், அஸ்வத்தாமா, துரியோதனன், துச்சாதன னின் புதல்வன், சகுனி ஆகியோரைக் காயப்படுத்தி செயலிழக்கச் செய்தான்.
அவனது வீரம் கண்டு மலைத்த கர்ணன், துரோணரை அணுகினான். அபிமன்யுவை அழிக்க வழி ஏதும் உண்டா என்று கேட்டான். அபிமன்யு வின் வீரதீரத்தால் துரோணரே சற்று நிலைகுலைந்து போயிருந்தார். துரியோ தனனுடன் இணைந்தவர்தான் என்றாலும், அபிமன்யுவின் வீரம் கண்டு பெருமிதம் கொண்டார். எனினும், அவனை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அவருக்கு! 'அபிமன்யுவின் உடல் கவசத்தை அகற்றுவது கடினம்; நேருக்கு நேர் மோதாமல் சிந்தித்தே செயல்பட வேண்டும்' என்று முடிவுசெய்தார். போரில் அவனுக்கு இருக்கும் நாட்டத்தைத் திசை திருப்ப வேண்டும். அபிமன்யுவின் சிந்தனை, போரை விட்டு விலகும் வேளையில், அவனைத் தாக்கினால் பலன் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, முக்கியமான வீரர்கள் ஆறுபேர் ஒன்றாகச் சேர்ந்து, அபிமன்யுவின் குதிரைகளை அழித்தனர்; தேர்ச் சக்கரத்தைச் செயலிழக்கச் செய்தனர். பாணங்கள் எய்து அவனது வில்லையும் ஒடித்தனர். தொடர்ந்து நாலாபுறமும் சூழ்ந்து நின்று, அம்புமாரிப் பொழிந்தனர். தருணம் பார்த்து, அவனது உடைவாளை அகற்றி எறிந்தார் துரோணர். நிராயுதபாணியாகத் தேரில் இருந்து இறங்கிய அபிமன்யுவை அனைவரும் சூழ்ந்தனர். தேர்ச் சக்கரத்தை ஏந்திச் சுழற்றியபடி, துரோணரை நோக்கி முன்னேறினான் அபிமன்யு; தேர்ச்சக்கரத்தை மிக வேகமாகச் சுழற்றி, எவரும் தன்னை நெருங்கமுடியாமல் செய்தான். ஆனாலும் துச்சாதனனின் புதல்வன், தருணம் பார்த்து அபிமன்யுவை கதாயுதத்தால் அடித்தான். திடீர்த் தாக்குதலால் நினைவிழந்தான் அபிமன்யு. கூடிநின்ற வீரர்கள் அவனை அடித்து நொறுக்கினர். தனியருவனை அழிக்க, வீரர்கள் பலரும் ஒன்றுசேர்ந்தனர்; அழித்தனர். வீரமரணம் அடைந்த அபிமன்யு, இன்றைக்கும் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
உப்புச்சப்பில்லாமல் நீண்டநாள் வாழ்வதைவிட, புகழுடன் தோன்றி மறைவதே சிறப்பு என்கிறது சாஸ்திரம். எவனது பிறப்பு குலப்பெருமையை நிலைநாட்டுகிறதோ, அவனே இந்த உலகில் தோன்றியவன்; மற்றவரெல்லாம் பிறந்தும் பிறவாத வர்கள் என்பார் அரசர் பர்த்ருஹரி (ஸஜாதோயேன ஜனதேனயாதிவம்ச ஸமுன்னதிம்).
வியூகத்தைக் கடந்து உள்ளே நுழையும் வழிமுறைகள் அபிமன்யுவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இக்கட்டான சூழலில் அதிலிருந்து வெளியேறும் நடைமுறை அவனுக்குத் தெரியாது. அன்னையின் கருவறைக்குள் இருந்தபோதே... வெளியே நிகழ்ந்த வியூகச் செயல்பாடுகள் குறித்த விரிவுரை யைக் கவனித்து வந்தவன் அபிமன்யு. வியூகத்தை உடைப்பதை அறிந்தானே தவிர, வியூகத்தில் இருந்து வெளியேறும் வழி முறைகள் அவன் காதுக்கு எட்டவில்லை. இந்தச் சாதக பாதகங்களை அறிந்தவன்தான் எனினும், வீரத்தை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைத்ததில் அகம் மகிழ்ந்த அவனது மனம், வேறு எதையும் பொருட்படுத்தவில்லை.
ஆபத்து நெருங்கும் வேளையில், புத்தி தெளி வாகச் செயல்படாது. தங்க மான் என ஒன்று இல்லை என்பது தெரிந்தும், அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஸ்ரீராமர் இறங்கினார்; சீதையை இழந்தார். அதேபோல், ஆபத்தை உணராத இந்தப் பிஞ்சு மனம், சிந்திக்கத் தவறியது; உயிரைக் கொடுத்தாவது பிறப்பின் உயர்வை அடைய வேண்டும் என்று எண்ணியது.
நிராயுதபாணியாக நின்ற ராவணனுக்கு ஒரு வாய்ப்பு தந்தார் ஸ்ரீராமன். 'சீதையை ஒப்படைத்துவிட்டுச் சரணடைந்துவிடு; மன்னிப்பு உண்டு' என்றார். கோழையாக வாழ விரும்பாத ராவணன், ஸ்ரீராமனின் பாணத்துக்கு இரையாக விரும்பினான். வீரன், கோழையாவது இழுக்கு; வீரத்தோடு மறைவதே சிறப்பு என்று சொல்வது உண்டு. வீரனாகப் பிறந்து, வீரனாக வாழ்ந்து, வீரனாகவே மறைந்தவன் அபிமன்யு. 'வீரர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல; திறமைதான் பெருமைப்படுத்தும்' என்கிறார் பர்த்ருஹரி.
குருக்ஷேத்திர யுத்தம் என்பது அறப்போர். அதில் வெல்ல இயலாது என அறிந்து, அறத்துக்குப் புறம்பான வழிகளில் சென்று, வெற்றியைத் தேடிக்கொண்டனர் கௌரவர்கள். அதர்மம் தலைதூக்காமல் இருந்திருந்தால்... வீர அபிமன்யுவை அழித்திருக்கவே இயலாது. அதர்மம் தலைதூக்கியது; அபிமன்யு அழிந்தான். ஆனாலும், இன்றைக்கும் வாழ்ந்து வருகிறான்!
 
 

Comments