இசை ஞானம் அருளும் இறைவன்!

புராணக் காலத்தில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் எப்போதும் யுத்தம்தான். பெரும்பாலும் தேவர்களே பாதிக்கப்படுவது வழக்கம். எனவே, தேவர்கள் அனைவரும் இந்திரன் தலைமையில் ஆலோசித்தனர். அதற்கான ஒரே தீர்வாக அவர்களுக்குத் தோன்றியது, பாற்கடலில் இருந்து அமிர்தம் பெற்று அருந்துவது என்பதுதான். அனைவரும் ஸ்ரீமன் நாராயணனிடம் சென்று இதுகுறித்து முறையிட்டனர். 
பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் வரும் என்று கூறினார் பரந்தாமன். 'பாற்கடலைக் கடைவதா?’ என விக்கித்து நின்றனர் தேவர்கள். வாசுகியைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு, பாற்கடலைக் கடையும்படி கூறினார் மகாவிஷ்ணு. அதன்படியே தேவர்கள் முயற்சிக்க, அவர்களால் மட்டுமே அது இயலாத காரியமாகத் தோன்றியது. அவ்வேளையில் அசுரர்கள் பாற்கடல் கடைவதில் உதவுவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தில் தங்களுக்கும் பங்கு தரவேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களும், வால்பக்கம் தேவர்களும் பிடித்துக்கொண்டு கடைந்தனர். அடியில் சரியான பிடிமானம் இல்லாததால் மந்தரமலை வழுக்கிக்கொண்டே இருந்தது. அவர்களுக்கு உதவ திருமால் முன்வந்தார். ஆமையாகத் தோன்றி, மந்தரமலையின் அடியில் சென்று, வழுக்காமல் தாங்கிப் பிடித்தார்.
அமிர்தமும் தோன்றியது. ஆனால், ஒப்பந்தப்படி அசுரர்களுக்குப் பங்கு தரத் தயங்கினார்கள் தேவர்கள். மீண்டும் திருமாலிடம் முறையிட்டனர். அவரும் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்களே அருந்தும்படியாகச் செய்தார்.
வஞ்சகமாக அசுரர்களை ஏமாற்றியதால், மோகினி வடிவத்தில் இருந்து தன் சுயவடிவுக்கு மாற ஸ்ரீ மகாவிஷ்ணுவால் முடியவில்லை.
எனவே, அவர் இத்தலத்துக்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பயனாக சுய வடிவம் பெற்றார். மால் பேடு (மால் திருமால்; பேடு பெண்) பெண் வடிவில் திருமால் வழிபட்டு, மெய் உருக் கொண்டதால் மெய்ப்பேடு என்றும் அழைக்கப்பெற்ற இத்தலம், தற்போது மப்பேடு என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருத்தலத்தில் இறைவன் எழுந்தருளியதன் பின்னணியில் ஈசனின் திருநடனமே காரணமாக அமைந்திருக்கிறது.
புனிதவதியாராக இருந்து, ஆழ்ந்த சிவ பக்தியினால் காரைக்கால் அம்மையாராகப் புகழ்பெற்றவர், சிவபெருமானின் ஆனந்த நடனம் காணவிரும்பினார். அவருக்குத் திருவாலங்காட்டில் திருநடனம் புரிவதாக ஈசன் கூறி அருளினார். அதன்படி, பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்தின சபையான திருவாலங்காட்டில் திருநடனம் புரிந்தார். அப்பொழுது சிங்கி என்ற நந்தியெம்பெருமான், சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். அதன் காரணமாக, அவரால் ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயலவில்லை. இறைவனின் திருநடனம் நிறைவுற்ற பின்னர், காரைக்கால் அம்மையார் உட்படப் பலரும் எம்பெருமானின் திருநடன அழகைப் பலவாறாகப் பாராட்டினர். அதைக் கேட்ட சிங்கி, 'எம்பெருமானே! பலரும் புகழ்ந்து போற்றும் தங்கள் திருநடனத்தைத் தரிசிக்க எனக்குப் பேறு கிடைக்கவில்லையே?’ என்று முறையிட, 'என் நடனத்துக்கு ஏற்ப மிருதங்கம் இசைத்த உனக்கு, மெய்ப்பேடு என்னும் திருத்தலத்தில் திருநடனம் புரிவோம். எனவே, நீ அங்கு செல்க’ என்று கூறி அருளினார் சிவபெருமான். அதன்படி, மெய்ப்பேடு திருத்தலம் வந்து சேர்ந்த சிங்கி என்ற நந்திக்கு சிவபெருமான் திருநடனம் புரிந்தமையால், இத்தலத்து இறைவன் 'சிங்கீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் ஏற்றார்.
இத்தலத்து அம்பிகை, நறுமணம் மிக்க மலர்களுக்கு உரியவளாக இருப்பதால், ஸ்ரீபுஷ் பகுசாம்பாள் என்னும் திருநாமம் கொண்டார்.
காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்ட இத்திருக்கோயிலுக்கு 16ம் நூற்றாண்டில், தளவாய் அரியநாத முதலியார் என்பவர் ராஜகோபுரம், மதில்சுவர், பதினாறு கால் மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்வித்தார். ஆயினும், அந்நியர் ஆதிக்கத்தினால் மீண்டும் சிதிலம் அடைந்துவிட்ட இத்திருக்கோயிலில், வடசென்னிமலையைச் சேர்ந்த குஹஸ்ரீ காமாட்சி சுந்தரேச சுவாமிகளால் நிறுவப்பட்ட சத்சங்கத்துடன், இந்து சமய அறநிலையத் துறை, திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 14.7.2008 அன்று கும்பாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீமுருகன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாக அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கி அருளும் அம்பாளைத் தரிசித்துவிட்டு வரும்போது, வடகிழக்கு மூலையில் ஒரு மண்டபம் இருக்கிறது.
அதனுள், ஸ்ரீபாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு வீற்றிருக்கிறார் ஈசன். கல்லால் ஆன அந்தச் சிவலிங்கத் திருவடிவைத் தொட்டால், கல்லின் கடினத் தன்மையை நம் விரல்கள் உணராவண்ணம் மிக மென்மையாக இருக்கும் என்கிறார்கள்.
பொலிவுடன் திகழும் ஸ்ரீபாலீஸ்வரரைத் தரிசித்துவிட்டு கிழக்குப் பிராகாரத்தில் ஈசனின் சந்நிதி நோக்கி அமைந்திருக்கும் கொடிமர பீடம், நந்தி மண்டபம் போன்றவற்றைக் கடந்து, மறுபடியும் மேற்குப் பிராகாரத்தில் உள்ள வாயில் வழியாக ஐயனின் கருவறைக்குள் நுழைகிறோம்.
நமக்கு நேர் எதிரில் நடராஜப் பெருமான் எழிலார்ந்த கோலத்துடன் திருக்காட்சி தருகிறார். நமக்கு இடப்பபுறம் ஈசனின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஈசனுக்கு இங்கு அருள்மிகு சிங்கீஸ்வரர் என்று திருப்பெயர்.
ஈசன் கருவறையின் வெளிப்புறச் சுவரில் தெற்கு நோக்கி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கி திருமால், வடக்கு நோக்கி பிரம்மா, துர்கை திருவடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.
மெய்ப்பேடு தலத்தின் மெய்ப்பொருளாம் பரமனைத் தரிசித்துத் திரும்பிய பின்னும், சிங்கி என்னும் நந்தியின்பொருட்டு திருநடனம் புரிந்த ஆடல் அரசனின் அருட்கோலம் நம் மனதை விட்டு அகலாத நிலையில்...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடனே எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே
என்ற நாவுக்கரசரின் தேவாரப் பாடலே நம் நினைவில் ரீங்கரிக்கின்றது.

* த்திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள சந்நிதியில் அருளும் ஸ்ரீவீரபாலீஸ்வரர் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இங்கே சந்தியா காலத்தில்,ஸ்ரீஆஞ்சநேயர் வீணையில் அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத் துறையில் பிரகாசிக்க விரும்பும் அன்பர்கள், மாலை வேளையில் இத்திருக்கோயிலுக்கு வந்து, ஸ்ரீவீரபாலீஸ்வரார் சந்நிதிமுன் அமர்ந்து இசைப் பயிற்சி மேற்கொண்டால், இசைத்துறையில் புகழ் பெறலாம் என்பது ஐதீகம்.
* இங்குள்ள துர்கை சந்நிதியில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நாற்பத்திரண்டு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில், துர்கை சந்நிதியில், எலுமிச்சம்பழத் தோலில் நெய்தீபம் ஏற்றி வழிபட, திருமணம் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.
* கொடிமரத்தின் அருகில் உள்ள நவவியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷ காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது இன்னும் சிறப்பு.
* இத்தலத்தில் சிவபெருமான் மூல நட்சத்திரத்தில் எழுந்தருளியதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இத்திருக்கோயில் சிறப்பான பிரார்த்தனை ஸ்தலம் ஆகும்.

திருவிழாக்கள்...
* ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரி அன்று ஐந்தாம் திருவிழா நடைபெறும் வகையில் பிரம்மோற்சவம்.
* அம்பிகைக்கு நவராத்திரி விழா, மார்கழி மாதம் ஆருத்ரா மற்றும் புத்தாண்டில் லட்சார்ச்சனைப் பெருவிழா.

Comments