தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணபரமாத்மா விளையாடியதெல்லாம் வெறும் விளையாட்டல்ல; தெய்வீகத் திருவிளையாடல்கள்! ஆனால் நாமோ, கண்ண பரமாத்மாவின் சிறுவயது வாழ்க்கையை ஏதோ விளையாட்டுப் போலக் கருதி, பின்னர் அவன் பஞ்சபாண்டவர்களுக்கு அருளியது, மகாபாரத யுத்தத்தில் அவன் புரிந்த லீலைகள், முடிவாக அவன் அருளிய கீதை போன்றவற்றைத்தான் பெரிதாகப் பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அப்படியானால், அவன் ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து, வெண்ணெய்யைத் திருடித் தின்று, கொக்கு அரக்கன், பாம்பு அரக்கன், அந்த அரக்கன், இந்த அரக்கன் எனக் கொன்று திரிந்ததற்கு வேறு பொருளோ, காரணமோ இல்லையா?
பொழுது போக்குவதற்கும், படமாக வரைவதற்கும், புத்தகங்கள் போட்டு விற்றுக் கல்லாவை நிரப்புவதற்கும், கார்ட்டூன் படங்களாகவும் திரைப்படங்களாகவும் திகிலூட்டும் பின்னணி இசையோடு பார்த்துப் பின்பு மறப்பதற்கும், பலர் பணமாய் சம்பாதிப்பதற்கும், அளவே இல்லாமல் விளம்பரங்களைச் சேர்த்துத் தொலைக்காட்சிமுன் குழந்தைகளை உட்கார வைத்து மூளைச் சலவை செய்வதற்கும், கண்களை உருட்டி, வாயை விரித்துக் கதைகளைக் கூறி சோறு ஊட்டுவதற்குமானதா அவன் பால்ய கால லீலைகள்?
இப்படிக் கதை கேட்டுச் சோறு உண்ட குழந்தை வளர்ந்து, 'நானும் கொக்கைப் பிடித்துக் கொல்லப் போகிறேன். அடுத்த வீட்டில் வெண்ணெய் திருடப் போகிறேன்’ என்று கிளம்பினால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
இதுவரை எவராவது இதன் உட்பொருள் என்னவென்று விளங்கிக்கொண்டு சொன்னதுண்டா? கம்ஸன் அரக்கர்களை ஏவினான்; கண்ணன் அவர்களைக் கொன்றான். இதுதானே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. கம்ஸன், கண்ணனைக் கொல்ல அரக்கர்களை ஏவினால், அதனால் நமக்கென்ன? இதை ஏன் நம் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும்? படமாக, சிலையாக ஏன் பார்க்க வேண்டும்? வேண்டியதில்லையல்லவா? பாகவதத்திலேயே மாமன் மருமகன் பிரச்னையை ஓரிரு வரியில் முடித்திருக்கலாமே..! அப்படியாயின், இதற்கு ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும்; பெரிய வாழ்வியல் தத்துவங்கள் இருக்க வேண்டும். இல்லாதது ஏதுமில்லை நமது புராண இதிகாசங்களில்!
பரம்பொருள் பிறப்பெடுத்தால் நிச்சயம் அதன் தன்மை வெளிப்பட்டுத்தான் ஆகும். அவனது ஒவ்வொரு அசைவும், மனித குலத்துக்குப் பாடமாக அமையும்.
அவன் பிறப்பில் இருந்தே பார்ப்போமே! முன்வினை காரணமாக (இதை அப்படியே வைத்துக்கொள்வோம்) பெற்றோர் சிறைச்சாலையில் இருக்க, கண்ணன் பிறப்பு அங்கே நிகழ்கிறது. பின் அங்கிருந்து இடம் பெயர்கிறான். காரணம், மாமன் கொன்றுவிடுவான் என்கிற பயம், பெற்றவர்களுக்கு. இதுதானே பாகவதத்தின் ஆரம்பம்!
இதை மிக எளிதாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்க முடியும். குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்கள் மனதில் இவை பதியவேண்டும். குழந்தைகளுக்கு எப்படி நாம் கண்ணன் கதைகளைக் கூறவேண்டும் என்பதற்காகத்தான் இது. முக்கியமாக, குழந்தைகளுக்கு அரக்கர் கதைகளைக் கூறும்போது, அவை நம் வாழ்க்கையோடு பொருந்துவது போல் சொல்லவேண்டும். அப்போதுதான் அவற்றின் உட்கருத்து குழந்தைகள் மனதில் பதியும். அதுதானே வேண்டும் நமக்கு?
படங்கள் வரைவதில் எனக்கு இருந்த அதீத ஆர்வம், என்னை எப்போதும் வரைந்தபடியே இருக்கத் தூண்டியது. இரண்டு வயதிலேயே பென்சில், பேப்பர் என்று இருந்தபோது, சுற்றி இருந்த சொந்தங்கள் மிகுந்த கல்வியறிவும் கலாரசனையும் மிகுந்து இருந்தபோதும், நான் சதா வரைந்து கொண்டிருப்பதை அவர்கள் குறை கூறவே செய்தார்கள். ஆனால், என் தந்தையார் வசுதேவர்போல் என்னைக் காத்து, நான் வரையும்போது அவர்கள் பார்வை என் மேல் படாதவாறு பார்த்துக்கொண்டார். சித்திரம் எனக்குக் கைப்பழக்கமானது.
உறவினர்களுக்கும் குழந்தைகள் இருக்கும். அவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்து, அது பொறாமையாய் மாறும்போது இடத்தை மாற்றி, நம் விருப்பத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான். சரி... ஆறு வழி விட்டு, நாகம் குடை பிடிக்குமா என்றால், சூழ்நிலை மாறி வழிவிடும், வாய்ப்புகள் குடை பிடிக்கும் என்று பொருள். பின்னால் உனக்கான வழியையும், உனக்காகக் காத்திருக்கும் வெண்கொற்றக் குடைகளையும் தயார் பண்ண ஆரம்பித்துவிடும்.
நமது ஆர்வமும் விருப்பமும் முளையிலேயே கிள்ளியெறியப்படும் நிலை வருமாயின், கண்ணன் வழியே நம் வழி! விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எவ்வளவு உண்மை. அதுவும், கலைகளைப் பொறுத்தவரை அது பட்டவர்த்தனமாகத் தெரியும். அது கம்ஸ குணம் கொண்ட சில உற்றார் உறவினர்களாலேயே கருகிவிட நேரலாம். அப்போது பொறுமை காத்து, இடத்தை மாற்றி, குழந்தைகளின் ஆர்வம் எதில் மிகுந்து உள்ளதோ, அதைத் தொடர்ந்து செய்ய ஊக்குவித்து, உற்சாகமூட்டினால், உலகம் உங்கள் குழந்தையின் வாய்க்குள்! மன்னிக்கவும், உங்கள் குழந்தையின் கையில்!
கண்ணன் வெண்ணெயைத் திருடியதுபோல், உங்கள் குழந்தை தன்னுடைய திறமையால், மற்றவரின் உள்ளங்களைத் திருடலாம். கண்ணன் செய்தது அதைத்தான்!
அழகாய் குழந்தை வளர்கிறது, கண்ணனைப் போலே! பள்ளியிலும் வெளியிலும் பாராட்டுகளும் பரிசுகளும் வாங்குகிறார்கள். சும்மா இருப்பார்களா சுற்றி இருப்பவர்கள்? பூதனை போலப் புறப்பட்டு வருவார்கள். வஞ்சப் புகழ்ச்சி மழை பொழிவார்கள். அப்போது செய்ய வேண்டியது என்ன? கண்ண பரமாத்மா பூதனை போக்கிலேயே போய், அவள் கதையை முடித்ததுபோல், இந்த வஞ்சப் புகழ்ச்சிக்காரர்களின் போக்கிலேயே போய், அவர்களையும் அவர்களது சதி வேலைகளையும் வெற்றிகொள்ள வேண்டும்.
சரி, இந்தக் கொக்கு அரக்கன் ஏன்? அது என்ன உணர்த்துகிறது? ராட்சதக் கொக்கின் நீண்ட கூரிய அலகு தண்ணீரில் வெகு தூரம் நுழைந்து மீனைப் பிடிப்பதுபோல், பலர் தங்களின் கூரிய வார்த்தைகளால் உங்கள் அடிமனம் வரை போய்த் தைப்பார்கள். உங்கள் ஆற்றலை மெள்ள ஆட்டம் காண வைக்க முயல்வார்கள். கொக்கைப் போலக் காத்திருந்து, நேரம் பார்த்து வீழ்த்த முனைவார்கள். கூரிய சொற்களால் காயப்படுத்துவார்கள். அப்போது, கண்ணபரமாத்மா கொக்கின் அலகைப் பிளந்து கிழித்ததை நினைவுகூர்ந்து, பொறாமைக்காரர்களின் கூரிய சொற்களைக் கிழித்துத் தூரப் போடுங்கள். கொக்கைப் போன்ற இவர்கள் உங்கள் உள்ளத்தின் உரம் கண்டு ஒதுங்கிப் போவார்கள்; ஒடுங்கிப் போவார்கள்.
அதென்ன பாம்பு அரக்கன்..? பாம்பைப்போல் அழகாகப் படம் எடுத்து மயக்கி, 'மடார்’ என்று கவ்வி இழுக்க உலகத்தில் பலர் இருக்கிறார்கள். 'நான் இவனை எப்படிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்; இவனை என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்று சுருட்டிப் பிடித்து முடக்கப் பார்ப்பார்கள். அவற்றுக்கெல்லாம் மயங்கி மாட்டிக்கொள்ளவே கூடாது. பாம்பின் விஷ மூச்சைப் போன்றது இவர்களது இனிக்கும் பேச்சு. அதற்கு நாம் மயங்கினோமோ போச்சு! ஓங்கி அதன் தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கிவிட்டு, உங்கள் சாதனையை நோக்கிப் பயணப்படுங்கள் குழந்தைகளே!
கழுதை அரக்கனைப்போல் எட்டி உதைக்கவும், குதிரை அரக்கனைப்போல் திமிறித் தாக்கவும், சுழற்காற்றாக வாழ்க்கையைப் புரட்டிப் போடவும் பலர் காத்திருப்பார்கள். இவர்களையெல்லாம் கண்ணன் காட்டிய பாதையில் போய் சாதுர்யமாகக் கடப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
எல்லாம் சரி! யானை ஒன்று தாக்க வருமே, அது? ஆம்! மிகப் பெரிய அசுர பலத்தோடு அதிகாரம், ஆணவம், பதவி என்ற பல யானைகள், நம்மைச் சுற்றிப் பிடித்துச் சுழற்றி அடித்து, நசுக்கக் காத்துக்கொண்டுதான் இருக்கும். அவற்றை நமது உறுதியாலும், நேர்மை மற்றும் இறைபக்தியாலும் வீழ்த்திவிடலாம்.
அவ்வளவு பெரிய மதங்கொண்ட ராட்சத யானையைச் சின்னக் கண்ணன் தும்பிக்கையைப் பிடித்துத் தூக்கியடித்தது இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதற் குத்தானே தவிர, வேறெதற்கும் இல்லை. கண்ணன் இப்படியாக லீலைகள் நிகழ்த்தியது இதையெல்லாம் நமக்குச் சொல்லத்தான். இவற்றை வளர்ந்து பெரியவனாகித்தான் நம்மால் சாதிக்க முடியும் என்றில்லை; பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே இதுபோன்ற சவால்களை மேற்சொன்னவற்றின் துணையோடு முறியடித்து வெற்றிநடை போடமுடியும். அதனால்தான் கண்ணன் சிறுவனாக இருக்கும்போதே இவற்றைச் செய்து காட்டினான்.
அவன் இறைவன். பாதை காட்டுவதும் அவன்தான்; பாடம் கூறுவதும் அவன்தான். அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங் கள். வெறுமனே அரக்கர்களைக் கொல்வது அவன் வேலையல்ல. அந்த அரக்கர்கள் யாரும் இல்லாமலேயே, அவனால் வளர்ந்திருக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள். பிறப்பிலிருந்து இந்தப் பள்ளி, கல்லூரிப் பருவம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய மானது! எத்தனை இனிமையானது! ஆனாலும், இடையிடையே இதுபோன்ற சோதனைகளும் வரும். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க, உதாரணங்களுடன் விளக்கி உள்ளத்தில் உரமேற்றவே இந்தத் திருவிளையாடல்கள்.
அவன் அர்ஜுனனுக்குச் சொன்னது மட்டும்தான் கீதை என்று எண்ணிவிடாதீர்கள். அவனது வாழ்க்கை முழுவதுமே கீதைதான்; பாடம்தான். பாடம் என்றால் பலருக்கு வேப்பங் காயாகக் கசக்குமல்லவா? எனவேதான், அதைச் சுவாரஸ்யமாக நமக்குக் காட்ட, அவன் சில வண்ணங் களைச் சேர்த்துக் கொண்டான் (வனமாலி அல்லவா!). புரிந்து நடக்க வேண்டியது நமது கடமை.
இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் அவன் தன் பெற்றோரை யும், பெரியவர்களையும் மதித்த பாங்கைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வையுங்கள். இத்தனை அரக்க குணங்களையும் தாண்டி வந்து சாதித்து, தடைபோட முயன்றவர்களை வியப்பிலாழ்த்தி, இந்த உலகம் உய்ய, நாம் பிறந்த நாடு முன்னேற, கீதை அளவுக்கு இல்லாவிட்டாலும், சில உயர்ந்த தத்துவங்களை, உண்மைகளை, பொன்மொழிகளை, வழிகாட்டுதல்களை நம்மாலும் அளிக்க முடியும் என்பதுதான் ஸ்ரீகண்ணபிரான் நமக்கெல்லாம் உணர்த்தும் பாடம்; காட்டும் வாழ்க்கை நெறி!
'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல, நமது முயற்சிகள் அத்தனைக்கும் அந்தக் கண்ணனே துணை இருப்பான் என்கிற உறுதியான நம்பிக்கையோடு நடைபோடுங்கள்.
நிச்சயம் நாரணன் உங்கள் கூடவே இருப்பான்!
Comments
Post a Comment