உயிர்ப்புடன் உலவும் நந்தி!

டிசலான தேகம்; கண்களில் பிரகாசமான ஒளி; அதில் அப்படியொரு தீட்சண்யம்; பார்க்கும்போதே பரவசம் உண்டாக்கும் தோற்றம்! ஏற்கெனவே மழை பொய்த்து, நிலம் வறண்டு, விவசாயம் மெள்ள அழிந்து கொண்டிருந்த தங்கள் ஊருக்கு அவர் வந்ததை நல்ல சகுன மாகவே கருதினர் ஊர்மக்கள். அவரால் தங்களின் வாழ்க்கை வளமாகும் என்று நம்பிக்கையும் கொண்டனர். அவரையே பின்தொடர்ந்தனர். 

நேரே ஊருக்குள் வந்த அவர், எல்லையில் இருந்த வனப் பகுதிக்குள் நுழைந்தார். ஒரு வன்னி மரத்தடியில் சுயம்புவாய் எழுந்தருளியிருந்த சிவலிங்கம் முன்னே அமர்ந்தார். கண்கள் மூடித் தியானித்தார். அதுவரையிலும், அந்த மரத்தின் அடியில் சுயம்புலிங்கம் இருந்தது தங்கள் கண்களுக்குப் புலப்படாமல் இருந்ததைக் கண்டு மக்களுக்கு வியப்பு! அதேநேரம், புதிதாய் வந்த அடியாரின் வழிகாட்டலால் சிவனாரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியும் கொண்டனர்.
மக்களின் முகக்குறிப்பை உணர்ந்த சிவனடியார், ''என்னை ஏன் பின்தொடர்ந்து வந்தீர்கள்?' என்று கேட்டார். 'சாமிஞ் ஊர்ல சொட்டுத் தண்ணி இல்ல. வானம் பார்த்த பூமியாகிப் போச்சு! உங்க மூலமா ஏதாவது வழி கிடைக்கும்னு நம்பி வந்தோம்' என்றார்கள்.
'மழை இல்லைன்னா, தண்ணியைப் பெருக்க, சேமிக்க நீங்க என்ன செஞ்சீங்க? மழைத் தண்ணியைச் சேர்த்து வைக்க ஏதும் பண்ணீங்களா?' என்று அவர் கேட்க, அங்கே பேரமைதி நிலவியது. அவர்களுக்கு அதுவரை தோன்றாத யோசனை அது!
அடுத்தடுத்து நடந்ததெல்லாம் ஆச்சர்யத்தின் உச்சம். விவசாயத்துக்கு வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தன்னுடன் வரச் சொல்லி உத்தரவிட்டவர், அருகிலிருந்த வெட்டவெளியான இடத்துக்கு அழைத்துப் போனார். எல்லோரும் சேர்ந்து அங்கே குழி தோண்டும்படி சொன்னார். அதன்படி, ஊரார் சேர்ந்து வேலை செய்திட, அங்கே ஒரு குளம் உண்டானது. 76 ஏக்கர் பரப்பளவில் அது வெட்டப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மழை கொட்டோ கொட்டெனக் கொட்ட, குளத்தில் நீர் தளும்பி வழிந்தது. அந்த நீரை வைத்து விவசாயம் செய்த மக்கள், வறட்சியில் இருந்து மீண்டனர். பின்னர், சிவனுக்கு அங்கேயே சிறிய அளவில் ஆலயம் எழுப்பி, வழிபடத் துவங்கினர்.
மக்களை வறட்சியின் பிடியில் இருந்து காத்த அந்தச் சிவனடியார், தாத்தப்பர். சம்பவம் நிகழ்ந்த இடம், தேனி மாவட்டத்திலுள்ள கம்பம். தன்னை விடவும் அடியார்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார் சிவபெருமான். அந்த வகையில், இந்தத் தலத்தில் சிவனுக்கும் தாத்தப்பர் என்ற பெயரே சூட்டப் பட்டது. சிவனடியாரால் வெட்டப்பட்ட அந்தக் குளம், கோயிலில் இருந்து சற்றுத் தொலைவில் இப்போதும் உள்ளது. அந்தப் பகுதி இன்றளவும் 'தாத்தப்பர் குளம்’ என்றே அழைக்கப்படுகிறது.
சிவனடியார் பற்றியும், அவரது பெயரால் அமைந்த தாத்தப்பர் சுவாமி பற்றியும் மளமளவெனப் புகழ் பரவத் தொடங்கியது. அந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னருக்கும் செய்தி போனது. ஆச்சர்யப்பட்ட அவர், சிவன் சந்நிதிக்கு வந்தார். சுவாமியைத் தொழுது நின்றவர், அந்தச் சிவனடியாரையே தனது மந்திரியாக நியமிக்க விரும்பி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.ஆனால், எங்கிருந்தோ வந்த ஒருவர் தங்களுக்கும் மேலான முக்கியப் பொறுப்பில் அமர்வதை யாரேனும் விரும்புவார்களா? குளக்கரையில் சிவனை நினைத்து தியானத்தில் இருந்தபோது, அந்தச் சிவனடியாரின் தலையை வெட்டி எறிந்தனர் எதிரிகள்.
இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்திருந்த தாத்தப்பர், தனக்கு எந்தவிதமான அசம்பாவிதம் நேர்ந்தாலும், சிவ வழிபாட்டை மட்டும் விடாமல் தொடரும்படி முன்னரே சொல்லி வைத்திருந்தார். அதன்படி, சிவாலயத்தில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. சிவனடியார் அந்தத் தலத்திலேயே ஐக்கியமானார்.
கம்பம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். விஸ்தாரமாக அமைந்த கோயில். பிரமாண்டமான கோபுரங்கள், முகப்பு, கொடிமரம், பலிபீடம் ஆகிய அமைப்புகள் இல்லை. அது மட்டுமா? சிவனாரை நித்தியப்படி தொழுதுகொண்டிருக்கும் நந்திக்கும் இங்கே சிலை இல்லை. உலகில் எந்தச் சிவாலயமாக இருந்தாலும் சரி, அங்கே சிவனார் முன் ஜம்மென அமர்ந்து, அவருடைய நித்திய தரிசனத்தைப் பெற்றபடி இருப்பார் நந்தியார். எப்போதும் சிவனைத் தொழுதுகொண்டிருக்கும் பேறு பெற்றதால், அவரை எல்லா ஆலயங்களிலும் தரிசிக்க முடியும். பிரதோஷ தினங்களிலும், விசேஷ நாட்களிலும் அவர் மீதமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் புரிவார் சிவபெருமான். ஆனால், இங்கே அந்த அமைப்பு இல்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது.
தாத்தப்பர் சந்நிதிக்கு அருகிலேயே, நந்தகோபாலருக்கு (கிருஷ்ணர்) தனிக்கோயில் இருக்கிறது. இங்கே நாம் காணும் இன்னொரு அதிசயம், சுவாமிக்கு சிலை வடிவம் கிடையாது. பசுக்களை மேய்த்து அங்கேயே விளையாடித் திரிந்தவர் என்பதால், பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொட்டத்தையே (பசுமடம்) சந்நிதியாகவும், அதன் நடுநாயகமாக உயர்ந்திருக்கும் தூணையே சுவாமியாகவும் வணங்குகின்றனர். எந்நேரமும் இங்கே மாடுகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருக்கும்.
கயிலாயத்தில் சிவனைத் தொழும் நந்தீஸ்வரர், இங்கு உயிர்ப்போடு எந்நேரமும் வலம் வந்து வணங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் சிவனாரின் சந்நிதிக்கு முன்பாக தனியாக நந்தி சிலை வடிக்கப்படவில்லை. பிரதோஷ பூஜையின்போது, லிங்கத்துக்கு 16 விதமான அபிஷேகங்களும், விசேஷ அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.
கர்ப்பகிரகத்தில் சிவலிங்கத்தின் பின்புறம், வன்னி மரம் கொப்பு வடிவில் சிறிதாக இருக்கிறது. சிவனடியாரான தாத்தப்பர் இங்கே அரூபமாக (உருவம் இல்லாமல்) ஐக்கியமாகியிருப்பதால், தீபாராதனையை முதலில் இங்கே காட்டிவிட்டு, அதற்குப் பின்னரே சுவாமிக்குக் காட்டுகின்றனர். வாரத்தில் இரு முறை, வண்டு ஒன்று கர்ப்பகிரகத்துக்குள் வலம் வரும். சிவலிங்கத்தை மூன்று முறை சுற்றி வந்து, பின்னர் வெளியேறிவிடும். இங்கே ஐக்கியமான தாத்தப்பரே, வண்டு வடிவில் வந்து வழிபட்டுச் செல்வதாகச் சொல்கிறார்கள். சந்நிதிக்கு அடியில் எப்போதும் நீர் ஊறுவதால், கர்ப்பகிரகம் மட்டும் குளிர்ச்சியாக இருக்குமாம். பக்தர்கள் இக்கோயிலை பஞ்ச பூதத் தலங்களில் நீர் தலமாகவே பாவித்து வணங்குகின்றனர். எத்தனை துன்பங்களுடன் வந்து வேண்டிக்கொண்டாலும், அதன் தாக்கம் குறைந்து, மனம் குளிரும். ஆவணி மாதத்தில் ஒரு நாள், சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மேலே விழும்.
இங்கே, அம்பாள் சந்நிதியும் இல்லை. கோயிலுக்கென தனிக் கொடி மரம் அமைக்கப்படவில்லை என்பதால், விழாக்களின்போது சந்நிதி எதிரே உள்ள தீப ஸ்தம்பத்தில் காப்பு கட்டி விழாவைத் தொடங்குகின்றனர். அருகிலேயே நாகர் புற்று உள்ளது. விபூதி, குங்கும பிரசாதங்களைப் போல இங்கே தரப்படும் மற்றொரு விசேஷ பிரசாதம் குபேர குங்குமம். வில்வம், வன்னி, அத்தி மர இலைகளோடு, தாழம்பூ சேர்த்து அரைத்து, பச்சை நிறத்தில் இந்தக் குங்குமம் அமைந்துள்ளது.
சுவாமியை வணங்கி, குபேர குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். இந்த பிரசாதம் வாங்குவதற்காகவே பக்தர்கள் இங்கே அதிக அளவில் வருகிறார்கள்.  
விவசாயம் செழிக்க, வீட்டில் ஐஸ்வர்யம் பெருக, பிள்ளைகளுக்குத் திருமண பாக்கியம் கிடைக்க... தாத்தப்பரை மனமுருகப் பிரார்த்தித்துக் கொள்கின்றனர் பக்தர்கள். இவரை வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. இவ்வாறு வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தாத்தப்பன், தாத்துராஜ் என்ற பெயர்களைச் சூட்டுகிறார்கள். இந்தப் பெயர்களுடன் வலம் வருவோரின் எண்ணிக்கை இங்கே அதிகம்.
விழாக்களுக்கும் இங்கே குறைவில்லை. சித்ரா பெளர்ணமி, ஆடிப்பெருக்கு, மகாளய அமாவாசை மற்றும் தீபாவளியன்று மகா அபிஷேகத்துடன் விசேஷ பூஜை இங்கே விமரிசையாக நடக்கும். தவிர, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம் என சிவாலயத்துக்குரிய அனைத்து விழாக்களும் உண்டு.
நந்தகோபாலர் கோயில் என்று சொன்னால்தான் இந்தப் பகுதியில் தெரிகிறது. ஆக, சிவனையும், பெருமாளையும் ஒருசேரத் தரிசிக்கலாம். நந்தகோபாலர் சந்நிதியில் மாட்டுப் பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அக்கம் பக்கத்திலுள்ள கூடலூர், லோயர்கேம்ப், கே.கே.பட்டி, கே.ஜி.பட்டி, சுருளிப்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் எனச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் பாதயாத்திரையாக வந்து சுவாமியைத் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள்.
 

Comments