தென்தமிழ் நாட்டின் வற்றாத ஜீவநதியாகப் புகழ்பெற்ற தாமிரபரணி நதியை ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தூய்மைப்படுத்தியதாக ஒரு தகவலை திருக்குறுங்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்ற நண்பர் நம்மிடம் கூறினார். தன்னில் நீராடுபவர்களின் பாவங்களை எல்லாம் இல்லாமல் செய்து, புண்ணியம் சேர்ப்பிக்கும் அந்தப் புனித நதியை தூய்மைப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்ற கேள்வி நம்முடைய மனதில் தோன்ற, அதன் விளைவே இந்தக் கட்டுரை...
தாமிரபரணியின் தோற்றம்:
தென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடமாம்; ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி...
(கம்பராமாயணம் நாடவிட்டபடலம்)
'பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி’ என்று இங்கே கம்பர் புகழ்ந்தும் வணங்கியும் சிறப்பிப்பது இன்றைய தாமிரபரணி நதியைத்தான்.
பொன் துகள்கள் கலந்து வரும் காரணத்தினால், 'திருநதி’ என்று கம்பர் போற்றும் தாமிரபரணியின் புராதனமான பெயர் பொருநை நதி என்பதாகும். நம்முடைய இந்து தர்மம், நதிகளை தெய்வமாகப் போற்றி வணங்கச் சொல்கிறது. நதிகள் இலக்கியங்களில் பெண்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிக் கொண்டாடும் புண்ணிய பூமி அல்லவா நம் பாரத தேசம்?!
எத்தனையோ பல புனித நதிகள் நம்முடைய தேசத்தை வளப்படுத்தினாலும், வேறு எந்த நதிக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கு உண்டு. வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப் பெறும் தாமிரபரணி, அகத்திய முனிவரின் திருவுள்ளப்படி வெளிப்பட்டதாகும்.
இந்த நிகழ்ச்சியை வால்மீகி முனிவர் பின்வருமாறு விவரிக்கிறார்.
தஸ்யாஸீனம் நகஸ்யாக்ரே
மலயஸ்யம் ஹெளஜஸம்
த்ரக்ஷயதாதித்ய ஸங்காஸம்
அகஸ்த்யம்ருஷி ஸத்தமம்
ததஸ்தேநாப்யநுக்ஞாதா:
ப்ரஸந்நேந மஹாத்மநா
தாம்ரபர்ணீம் மஹாக்ராஹாம்
தரிஷ்யத மஹாநதீம்
''மலைய மலையின் உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரியபகவானைப் போல மிகுந்த ஒளியுடன் திகழ்பவருமான அகஸ்திய முனிவர் பெருமானை தரிசிப்பீர்கள். அந்த இடத்தில் அதுவரையிலும் தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த தீர்த்தத்தை, பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, மனம் உவந்து விடையளிக்க, அந்தத் தீர்த்தமே பெரிய பெரிய முதலைகள் நிரம்பப் பெற்ற பெரிய நதியாகிய தாமிரபரணி'' என்கிறார்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து, விநாயகப் பெருமானின் திருவுள்ளப்படி காவிரி நதி வெளிப்பட்டது நமக்குத் தெரியும். ஆனால், தாமிரபரணியோ அகத்திய முனிவர் பெருமான் மனம் உவந்து தம்முடைய திருவுள்ளப்படி, அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்துக்கு விடை கொடுக்க, அதன் பயனாகத் தோன்றிய புண்ணிய நதியாகும். அதனால்தான் வால்மீகி, 'அந்த மஹாத்மாவினால் மனமுவந்து விடையளிக்கப்பட்ட’ என்று குறிப்பிடுகிறார்.
சிவபார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலையங்கிரிக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
உண்மையில் அது வெறும் முத்தாரம்தானா..?
இல்லை. பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன! அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..?
சிவபெருமான் தேவியான பார்வதிதேவி ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர். அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று சொல்ல, அவர்களோ, தேவி நாராயணனாக வந்து தங்களை மணக்கவேண்டும் என்பதாக வரம் கேட்டனர். தன்னில் சரிபாதியைத் தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனம் இல்லாத தேவி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாராயணனாகவும், நாரணியாகவும் வடிவெடுத்தாள். நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.
தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாற, அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.
சிலகாலம் சென்றது.
தாட்சாயினியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராணத் தியாகம் செய்துகொண்டாள்.
பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பி, பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள். பராசக்தி, தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள். அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.
அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது. அவ்வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர். பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்று கூறி, அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
குடதிசைக் குடகுமலைப் பகுதியில் விநாயகப் பெருமான், அகத்தியர் அறியாமல் அவருடைய கமண்டலத்தைக் கவிழ்க்க, அதில் இருந்து சிந்திய சிறிது நீரில் இருந்து தோன்றியதே காவிரி என்பது நமக்குத் தெரியும். பின்னர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்த அகத்தியர், கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார். மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார். கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி. அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும் தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
அமாவாசைதோறும் கங்கை, யமுனை போன்ற நதிகள் எல்லாம் தாமிரபரணியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, அமாவாசைதோறும் இங்கு வந்து பாணதீர்த்தத்தில் நீராடினால், அளவற்ற புண்ணியம் பெறலாம்.
காசியில் கங்கை புனிதநதியாகப் போற்றப்பெறுவதற்குக் காரணம், கங்கை அங்கே உத்தரவாகினியாகப் பாய்கிறாள் என்பதுதான். ஆனால், கங்கைக்கும் புனிதம் சேர்ப்பிக்கும் தாமிரபரணியோ, குப்தசிருங்கத்தில் இருந்து பாணதீர்த்தம் வழியாக பூர்வவாகினியாக (கிழக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சி வரையிலும், பிறகு உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சியிலிருந்து சேரன்மகாதேவி வரையிலும், பின்பு அங்கிருந்து வைகுண்டம் வரை மறுபடியும் பூர்வவாகினியாகவும் எனப் பல திசைகளிலும் போக்குக் காட்டி நடைபயின்று, தன் குழந்தைகளாகிய நாம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தக் கட்டங்களை வைத்திருக்கிறாள். வேறு எந்த நதிக்கும் இப்படி ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எந்தெந்த தீர்த்தகட்டங்களில் எந்தெந்த மாதத்தில் நீராடவேண்டும், அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பது பற்றி தாமிரபரணி மஹாத்மியம் விளக்குகிறது.
தீர்த்தக்கட்டங்கள் மட்டும்தானா? தாமிரபரணி நதிக்கரையில்தான் எத்தனை எத்தனை திருக்கோயில்கள்?! வடக்கில் இருப்பது ஒரு கயிலாயம்தான். ஆனால், தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கிய நம் தெ(தே)ன் தமிழ்நாட்டிலோ நவகயிலாயங்கள்! வடதிசையில் இருப்பது ஒரு திருப்பதிதான். இங்கேயோ நவதிருப்பதிகள்!
நவகயிலாயம் உருவான வரலாறு:
அகத்தியரின் சீடரான உரோமசர், முக்தி பெறவேண்டும் என்ற தமது விருப்பத்தை அகத்தியரிடம் தெரிவித்தார். அகத்தியர் அதை ஈசனிடம் தெரிவித்தார். மும்மூர்த்தியருக்கும், முப்பெரும் தேவியருக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நிகரானவரான அகத்திய முனிவருக்குப் பெருமை சேர்க்க நினைத்த ஈசன் அவரிடம், ஒன்பது தாமரை மலர்களை உரோமசரிடம் கொடுத்து அவற்றை தாமிரபரணி நதியில் இடும்படி சொல்லச் சொன்னார். அவை ஒதுங்கும் ஒவ்வொரு இடத்திலும் கயிலைநாதர் என்ற திருநாமத்துடன் உரோமசர் தன்னைப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றும், இப்படி நவ கயிலாய திருத்தலங்கள் உருவானபிறகு, உரோமசருக்கு முக்தி கிடைக்கும் என்றும் கூறினார். இதுவே, நவ கயிலாய திருத்தலங்கள் உருவான வரலாறு.
நவ கயிலாயத் திருத்தலங்கள்: பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு,ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி, சேந்தமங்கலம்.
நவ திருப்பதி திருத்தலங்கள்:
சிவபெருமானுக்கு உரிய நவகயிலாய திருத்தலங்களைப் போலவே, தாமிரபரணி நதிக்கரையில் மன் நாராயணனுக்கு உரிய நவதிருப்பதிகளும் அமைந்துள்ளது விசேஷமாகும். இந்த நவ திருப்பதிகள்: ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, தொலைவில்லிமங்கலம், திருக்குழந்தை, தென்திருப்பதி, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி. இத் திருத்தலங்கள் பாண்டியநாட்டு நவகிரக க்ஷேத்திரங்களாகக் கொண்டாடப்படுகின்றன.
தாமிரபரணியின் தனிப்பெரும் சிறப்புகள்:
கலச பூஜையின்போது சொல்லப்படும் ஸ்லோகத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு நதிகள் போற்றப்பட்டு இருந்தாலும், தாமிரபரணியைப் பற்றி சொல்லவில்லையே என்று நாம் நினைக்கலாம். காரணம், தாமிரபரணியைப் பொறுத்தவரை நாம் நேரில் சென்று தரிசித்து நீராடினால்தான் நமக்குப் புண்ணியம் கிடைக்கும். இது பற்றிய ஒரு ஸ்லோகம் தாமிரபரணி மஹாத்மியத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஸ்லோகம்:
ஸ்மரண தர்சனாத்யாநாது ஸ்நாநாத்பாநாது அபித்ருவம்
கர்ம விச்சேத்தீநீ ஸவுஜம் தூநாம் மோக்ஷதாயிநீ (23வது ஸ்லோகம்)
இதன் பொருள்: தாமிரபரணியை தரிசித்து, அதில் ஸ்நானம் செய்பவர்களின் அனைத்துப் பாவங்களும் நீங்கி, அவர்கள் மோக்ஷத்தை அடைவார்கள்.
கங்கை முதலான நதிகள், மக்கள் தங்களிடம் சேர்க்கும் பாவங்களைப் போக்கிக்கொள்ள வருடத்துக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதாக ஐதீகம். ஆனால், தாமிரபரணி மட்டும் அப்படி வருவதில்லை. அதற்கான அவசியமும் தாமிரபரணிக்கு இல்லை என்பதே உண்மை. எப்படி அகத்தியர் தமக்கு இரையான வாதாபியை ஜீரணித்துக்கொண்டாரோ அப்படி தாமிரபரணியும் தம்மில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டாலும், அதன் காரணமாக சிறிதும் களங்கப்படுவதில்லை. தாமிரபரணியின் இந்தத் தனிச்சிறப்பின் காரணமாகத்தான், அமாவாசைதோறும் கங்கை முதலான நதிகள் தாமிரபரணி நதியில் ஸ்நானம் செய்வதாக தாமிரபரணி மஹாத்மியம் போற்றுகிறது.
இந்தத் தாமிரபரணி நதிக்கரையில்தான், தசாவதாரத்தில் நிறைவான அவதாரமான கல்கி அவதாரம் நிகழப்போவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உலகத்திலேயே மிக அரிதான விலை உயர்ந்த முத்துக்கள் விளைந்ததாக இலக்கியங்களும் வரலாறும் பேசுகின்றன. தொன்மை வாய்ந்த இந்தத் தாமிரபரணி நதியானது, கடல்கோள் நிகழ்வதற்கு முன்னதாக இன்றைய இலங்கை வரை சென்று செழுமை சேர்த்திருக்கிறது. இதுபற்றிய குறிப்புகள் வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் நிறையவே காணப்படுகின்றன.
இதிகாச புராணங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் மகோன்னத பெருமைகளுடன் திகழ்ந்ததாகப் போற்றப்பட்டிருக்கும் தாமிரபரணி.
தாமிரபரணி புஷ்கரம்
அக்காலத்தில் குரு பகவான் விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், தாமிரபரணி நதியில் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியிலும் ஒரு புராண சம்பவம் சொல்லப்பட்டு இருக்கிறது.
பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் தமக்கு வேண்டும் என்பதற்காக, குருபகவான் பிரம்மதேவரைப் பிரார்த்திக்க, பிரம்மதேவரும் அதற்கு இசைவு தெரிவிக்கிறார். ஆனால், புஷ்கர தீர்த்தாதிபதியான புஷ்கரனோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய விரும்பவில்லை. எனவே, பிரம்மதேவர் குருபகவானுக்கும் புஷ்கரனுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்துவைத்தார். அதன்படி, குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும்போது குருபகவானின் பார்வை ஒவ்வொரு குறிப்பிட்ட நதியின் மேல் பதியும் என்றும், அப்போது யாகாதி பூஜைகள் செய்து புஷ்கர வழிபாடு செய்வதும் வழக்கமானது. அதன்படி, விருச்சிக ராசியில் குருபகவான் பிரவேசிக்கும்போது, தாமிரபரணியில் புஷ்கர விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.
பாண தீர்த்த மகிமை!
சிவபெருமான் திரிபுராசுரர்களை சம்ஹாரம் செய்தபோது, விஷ்ணு பாணமாக இருந்தார். அசுரர்களை சம்ஹாரம் செய்தபிறகும் பாணத்தின் வெம்மை தணியாமல் தகித்தபடியே இருந்தது. எனவே, சிவமூர்த்தி அந்த பாணத்தை கலம்பகர்த்த தடாகத்தில் வைத்துவிட்டார். அகத்தியர் திருவுள்ளமுவந்து விடையளிக்கத் தோன்றிய தாமிரபரணி கலம்பகர்த்த தடாகத்தில் வெள்ளமெனப் பாய்ந்து பாணத்தின் வெம்மையைத் தணிவித்தாள். எனவே, இந்த பாணதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு விஷ்ணுமூர்த்தியின் அனுக்கிரஹம் கிடைக்கும் என்று ஹயக்கிரீவர் திருவாய்மொழியாக தாமிரபரணி மஹாத்மியத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
Comments
Post a Comment