பரமன் அருளட்டும்...கோயில் எழும்பட்டும்

பொன்மேனியிலே திருநீற்றை அணிந்தாற்போன்று விளங்கி நிற்கும் பனி மலையின் உயர்ந்த முடியே திருக்கயிலை மலை. இங்குதான் உலகையே கட்டியாளும் சிவனார் குடிகொண்டிருக்கிறார். 'திருக்கயிலையின் முதல் கோபுர வாயிலில் திருமால், பிரம்மா, இந்திரன் முதலானவர்களும் முனிவர் பெருமக்களும் சிவனடியார்களும் சிவனாரின் அருள் வேண்டி நிற்பார்களாம். அங்கே, உடைவாளும் பொற்பிரம்புமாக காவல்புரிந்துகொண்டிருப்பார் நந்தியம்பெருமான்’ என்று சேக்கிழார்பிரான், திருக்கயிலாயக் காட்சியை விவரிக்கிறார். 
திருநாவுக்கரசரும், 'கயிலைமலையானே போற்றி போற்றி’ என்று உருகுகிறார். அவருக்கு திருவையாறு தலத்தில் கயிலைக் காட்சியை காட்டியருளினார் சிவபெருமான்!
தென்னாடுடைய இறைவனே 'அம்மை’ என்றழைத்த பெருமைக்கு உரிய காரைக்கால் அம்மையாரோ, 'ஈசன் உறையும் கயிலையில் கால் பதிப்பது தகாதது’ என்று மண்ணில் தலையை பதித்து, தலைகீழாக பயணித்து கயிலைநாதனைத் தரிசித்தாள்!
ஆனால், இந்த பாக்கியம்  திருக்கயிலை தரிசனம் மண்ணுலகில் எல்லோருக்கும் சாத்தியப்படுவது, அவ்வளவு எளிதானதா என்ன?!
இல்லைதான்!
அதற்காகவே... வறுமை, வயோதிகம் என இயலாமையால் தவிக்கும் அடியவர் அனைவரும் தன்னைத் தரிசித்து மகிழவேண்டும் என்று திருவுளத்துடன், திருக் கயிலாயநாதர் எனும் திருப்பெயர் கொண்டு இந்த பூவுலகில் பல்வேறு ஆலயங்களில் குடிகொண்டிருக்கிறது சிவப்பரம்பொருள். இந்தத் தலங்களையெல்லாம் பூலோக கயிலாயம் என்றே அடியார்கள் சிறப்பிப்பார்கள். அப்படியான ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தையே இங்கே நாம் தரிசிக்கப் போகிறோம்.
தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் போலவே சோழர்களின் இறைபக்தியைப் பறைசாற்றும் மற்றொரு தலம் வீரசோழபுரம். கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் உள்ளது வீரசோழபுரம். இந்த ஊருக்கு அருகில் அமைந்துள்ள வானவநல்லூர் எனும் கிராமத்தில், ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது.
ராஜேந்திர சோழனின் போர்ப்படை வீரர்கள் தங்கிய இடம் என்பதால், இந்த ஊருக்கு வீரசோழபுரம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலை அடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள மிகப்பெரிய கோயில் என்று வானவநல்லூர் கோயிலைத்தான் சொல்கிறார்கள் பக்தர்கள்.
ஊருக்கு நடுவில் அமைந்துள்ளது சிவாலயம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீகயிலாசநாதர். சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் இது. ஆனால், பல வருடங்களாக இங்கே பூஜையோ வழிபாடோ இல்லை. பராமரிப்புப் பணிகளும் செய்யப்படாமல், இப்போது மிகவும் சிதிலம் அடைந்த நிலையில் காணப்படுகிறது கோயில். கோயிலின் முகப்பே, தற்போதைய அவலநிலையைச் சொல்லிவிடுகிறது. உலகத்துக்கே படியளக்கும் எம்பெருமானின் கோயில் ஊர்க்காரர்கள்கூட வந்து தரிசிக்கமுடியாதபடி, முள்ளும் புதருமாக மாறிவிட்டதுதான் கொடுமை!  
கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார் கயிலாசநாதர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகாமாட்சி. மாங்கல்ய வரம் வேண்டி அம்பாளை வெள்ளிக்கிழமையில் வணங்கினால், திருமணம் விரைவில் நிகழுமாம். பெளர்ணமி நாளில், கோயிலை 48 முறை வலம் வந்து பிரார்த்தித்தால், நினைத்தது நடந்தேறும் என்பது ஐதீகம்!
மிகப் பெரிய பிராகாரம். ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேசர் ஆகியோர் தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு உத்ஸவ விக்கிரகங்களும் இருக்கின்றன. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீசந்திரசேகர மூர்த்தி.
மார்கழியில் திருவாதிரை, மாசி மக நாளில் தீர்த்தவாரி என ஒருகாலத்தில் இங்கே விழாக்கள் தடபுடலாக நடந்திருக்கின்றன.ஆனால், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எந்த வழிபாடுகளும் நடைபெறவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
'எனக்குச் சொந்த ஊர் வானவ நல்லூர்தான். எனக்குத் தெரிந்து இந்தக் கோயில் வெகு காலம் பூட்டியேதான் இருந்தது. எங்கள் ஊர் கோயில் புதுப்பொலிவு பெற வேண்டும், இங்கே மீண்டும் திருவிழாக்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருப்பணிக் குழு அமைத்து, கோயிலைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிவனடியார் களும் ஸ்ரீகயிலாசநாதரும் மனது வைத்தால், விரைவில் கும்பாபிஷேகம் நடத்திவிடலாம்'' என்கிறார் திருப்பணி கமிட்டியில் உள்ள துரைசாமி.
''மாசி மக நாளில் நடைபெறும் தீர்த்தவாரியின்போது, கங்கைகொண்ட சோழபுரத்து சிவனாரும் குருவாலப்பர் கோயில்ஸ்ரீவீரநாராயணப் பெருமாளும் கொள்ளிடக் கரைக்குச் செல்வதற்கு முன்பாக, வானவநல்லூர் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்துக்கு வந்து செல்வார்களாம்'' என்கிறார், திருக்கோயில் கமிட்டி உறுப்பினர் ராமலிங்கம்.
தற்போது கருவறை, அம்பாள் சந்நிதி, சுற்றுச்சுவர், பிராகாரப் பகுதியைச் சீர்படுத்துதல் முதலான திருப்பணிகளைச் செய்து வருகிறார்கள். ஆன்மிக அன்பர்கள் கை கொடுத்தால், கயிலாசநாதர் ஆலயத்துக்கு விரைவிலேயே கும்பாபிஷேகம் நடைபெறும் எனத் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
கயிலாசநாதர் கோயில் திருப்பணிக்குக் கரம் கொடுப்போம்; கயிலைநாதனின் கருணைக்குப் பாத்திரமாவோம்!

Comments