''வார்த்தைக்கு வார்த்தை ஸ்ரீஐயப்பனின் திருநாமத்தை உச்சரித்தால்தான் மனசுக்கு நிம்மதி; உடம்புக்குத் தெம்பு; முகத்திலும் மலர்ச்சி!'' என்கிற வீரமணிதாசன், தனது இந்த வாழ்க்கையே சபரிமலைநாதன் போட்ட பிச்சை என்று நெக்குருகிச் சொல்கிறார்.
அதுமட்டுமா? மலேசியா, சிங்கப்பூர்னு பலநாடுகள்ல கச்சேரி பண்ணியிருக்கேன். அங்கெல்லாம் ஐயப்ப நாமத்தைச் சொன்னாலே உருகிடுறாங்க, ஜனங்க!'' என்று சிலிர்ப்புடன் சொன்ன வீரமணிதாசன், அம்மன், விநாயகப் பெருமான், முருகன், சிவபெருமான் ஆகியோருக்கான பக்திப் பாடல்களையும் எழுதி, மனமுருகப் பாடி, இசையமைத்து, சி.டி-க்களாக வெளியிட்டுள்ளாராம். தவிர, வீடியோ ஆல்பமும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் வீரமணிதாசன்.
''எண்பதுகள்ல, திருவல்லிக்கேணியில தங்கி, பல தொழில்கள் செஞ்சேன். எல்லாமே எக்கச்சக்க நஷ்டத்தைக் கொடுத்துச்சு. ஒருகட்டத்துல, எதுவுமே செய்யமுடியாம முடங்கினப்பதான், வீரமணி ஐயா பாடின ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் பாடல்கள் மிகப் பெரிய உரமா அமைஞ்சுது. ஒவ்வொரு பாட்டும், அவரோட குரலும் எனக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்துது. நாளடைவுல, பாட்டு தந்த கிறக்கம், ஐயப்ப ஸ்வாமி மேல பெரும்பக்தியா மாறுச்சு. ஒருமுறை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் பாடல்களைப் பாட வாய்ப்புக் கிடைச்சுது. குருநாதர் மேல இருந்த அளவற்ற பக்தி, குருவுக்கும் குருவான ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் பேரருள்... எல்லாமா சேர்ந்துகொண்டதில், ரகுராமனா இருந்த நான், வீரமணிதாசனா மாறிப்போனேன்!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார்.
''ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் மகிமையைப் பத்தி இதுவரைக்கும் சுமார் 6,000 பாடல்கள் பாடியிருக்கேன். கிட்டத்தட்ட 500 கேசட்டுகள் வெளியிட்டிருக்கேன். அது தவிர, ஸ்ரீராமானுஜ சுப்ரபாதம் மாதிரியான கேசட்டுகளையும் ரிலீஸ் பண்ணியிருக்கேன். தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகள்ல பாடின ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பாடல்களுக்கு நல்ல வரவேற்பு! இந்தியா முழுக்க சபரிகிரி வாசனுக்கு பக்தர்கள் லட்சக்கணக்குல இருக்காங்கன்னு நான் தெரிஞ்சுகிட்டது அப்போதான்.
''இத்தனைக்கும், நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை. 'நல்லா பாடறியேப்பா’னு நாலு பேரு பாராட்டுறாங்க. 'பரவாயில்லியே, இவன் பொழைச்சுக்கிட்டானே..!’னு ஊரும் உறவும் வியப்பும் சந்தோஷமுமா சொல்லுது. இது எல்லாத்துக்கும் ஸ்ரீஐயப்பனோட பேரருள்தான் காரணம்! அவரோட பெருங்கருணைதான் என்னை வழிநடத்திட்டிருக்கு. இந்த என் வாழ்க்கை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி எனக்குப் போட்ட பிச்சை!'' என்று கண்ணீர் மல்கச் சொன்னவர் தொடர்ந்தார்...
''வருஷத்துக்கு எப்படியும் மூணு நாலு தடவை ஐயப்ப மலைக்குப் போய், ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடுவேன். சமீபத்துல பொதிகை மலைக்குப் போயிருந்தேன். அன்னிக்கி சித்ரா பௌர்ணமி. அங்கே.. அகத்திய மாமுனியின் விக்கிரகத்துக்கு அபிஷேகம் செஞ்சு பிரார்த்தனை பண்ணினேன். மனசுக்கு நிறைவான பயணம் அது! 'குரு மண்டலம்’னு அறக்கட்டளையை நிறுவி, இறைப்பணியும் சமூக சேவையும் செய்துட்டு வரேன். இதுல கிடைக்கற ஆத்ம திருப்திக்கு ஈடு இணையே இல்லை. எல்லாம், ஐயன் ஐயப்பனின் மகிமை!'' என்று சொல்லிவிட்டு, மெல்லிய குரலில் சரணத்தைச் சொல்லி, பந்தளராஜனின் புகழைப் பாடத் துவங்கினார் வீரமணிதாசன்.
அவர் வாழ்க்கை துவங்கியதும், துலங்கியதும் ஸ்ரீஐயப்ப பாடல்களில்தானே?!
Comments
Post a Comment