''பிரமாண்டமான ஐயப்ப பஜனையும் பூஜையும் எங்கே நடந்தாலும், நிறைஞ்சி போயிரும் மனசு. பாட்டும் இசையும் கொடுத்த பரவசத்துலதான் நம்மூர்ல, அதுவும் நம்ம ஏரியாவுல ஐயப்ப ஸ்வாமிக்குக் கோயில் கட்டணும்னு நாங்க முடிவு பண்ணி, அற்புதமா ஒரு கோயிலைக் கட்டினோம்'' என்று தெரிவிக்கின்றனர், சென்னை அம்பத்தூர் ஐயப்ப பக்தர்கள்.
அம்பத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், செங்குன்றம் சாலையில் உள்ளது கள்ளிக்குப்பம். இங்குதான், நெய்யபிஷேகப் பிரியனான ஸ்ரீஐயப்ப சாஸ்தாவுக்கு கோயில் அமைந்துள்ளது. சபரிமலையைப் போலவே ஆலயம் அமைந்திருப்பது, தனிச்சிறப்பு!
இடப்புறத்தில் ஸ்ரீகடுத்த ஸ்வாமி; வலப்புறத்தில் ஸ்ரீகருப்பண்ணசாமி; நடுவே பதினெட்டுப் படிகள். அதைக் கடந்து செல்ல, மேற்கு நோக்கியபடி, அருளும் பொருளும் அள்ளித் தருகிற ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் சந்நிதானம்; அழகும் கருணையும் திருமுகத்தில் ததும்ப, சபரிகிரிவாசனின் அற்புதத் தரிசனம்! ஆலயத்தில் ஸ்ரீகணபதி, ஸ்ரீபால முருகன், ஸ்ரீநாகர், ஸ்ரீமாளிகைபுரத்து அம்மன் ஆகியோருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
கோயிலுக்கு மேற்கே, புழல் ஏரி அமைந்துள்ளது. இங்குதான் ஸ்வாமி ஐயப்பனுக்கு ஆராட்டு உத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. வருடந்தோறும், டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிற விழாவில், பள்ளி வேட்டை, ஆராட்டு விழா எனக் களைகட்டுமாம் ஆலயம்! ஆங்கிலப் புத்தாண்டின்போது (ஜனவரி-1), உத்ஸவருக்குப் புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியனவும் சிறப்புற நடைபெறுமாம்.
''கார்த்திகை மாதம் துவங்கிவிட்டாலே, சென்னையின் பல பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்து மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வார்கள். கார்த்திகை மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும், மற்ற மாதங்களில் முதல் மற்றும் கடைசி ஞாயிறுகளிலும் அன்னதானம் நடைபெறுகிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று, சுற்றியுள்ள பல கோயில்களுக்குத் திருவாபரணத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மாலையில் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு திருவாபாரணம் சாற்றி, கற்பூர ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஐயனைத் தரிசிக்க... வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
இதேபோல், மாளிகைபுரத்து அம்மனும் சக்தி வாய்ந்த தேவியாகப் பெண்களால் போற்றப்படுகிறாள். சந்நிதியின் வெளிச் சுற்றில் உள்ள கம்பியில் மூன்று தேங்காய்களைக் கட்டிவிட்டு, தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தரிசித்துப் பிரார்த்திக்க, திருமணத் தடை அகலும்; பிள்ளை வரம் கிட்டும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.
தட்டு ஒன்றில், பச்சரிசியைப் பரப்பி, இரண்டு தேங்காய்மூடிகள் வைத்து, அவற்றில் நெய் தீபமேற்றி சாஸ்தாவை வழிபட... இளை ஞர்களுக்கு நல்ல வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனச் சிலிர்ப்புடன் சொல்கின்றனர் பெண்கள்.
Comments
Post a Comment