செயலில் செயலின்மை

எவர் ஒருவர் பிறர் செய்யும் செயலின்மையில் செயலைப் பார்க்கிறாரோ அவர்தான் ஞானி, பலம் பொருந்தியவர்" என்றார் ஸ்வாமி குருபரானந்தா, தமது பகவத் கீதை சொற்பொழிவில்...
கர்மண்ய கர்ம ய:
பஷ்யேத்
அகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமான்
மநுஷ்யேஷு
ஸ யுக்த: க்ருத்ஸ்
நகர்மக்ருத்
இந்த ஸ்லோகத்தை பற்றி வியாசமஹரிஷி என்ன சொன்னார் தெரியுமா? ‘பகவத் கீதையில் உள்ள சில ஸ்லோகங்களின் உள்ளர்த்தத்தை நான் அறிவேன். என் மகன் சுகர் அறிவார். ஆனால், இனிவரப் போகும் தலைமுறையினர் இதன் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வார்களா, புரிந்து கொள்வார்களா என்பது தெரியாது’ என்று குறிப்பிட்டு, வியாசர் சொன்ன ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.
ஒருவன் நடந்து போய் கொண்டிருக்கிறான். அவன் நடப்பதை பார்த்துவிட்டு, அவன் நடக்காமல் இருப்பதைபோல எவன் புரிந்து கொள்கிறானோ; அதே போல ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்றால், அவனைப் பார்த்து அவன் ஏதோ செயல்கள் செய்து கொண்டு இருப்பவன் போல எவன் பார்க்கிறானோ, அவனே ஞானி.
இதென்ன ஆச்சர்யம்? கர்மத்தில் கர்மத்தை பார்ப்பதும், அகர்மத்தில் அகர்மத்தை பார்ப்பதும் தானே ஞானம்? செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் பார்ப்பது விபரீத ஞானம் இல்லையா? என்ற கேள்வி நம்மைப் போலவே ஆதிசங்கரருக்கும் தோன்றி இருக்கிறது. அந்த கேள்விக்கான விடை என்ன என்பதையும், அவரே தனது விளக்க உரையில் கொடுக்கிறார். உபதேசங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று நேரானது (direct). மற்றொன்று மறைமுகமானது (indirect).
ஒருவன் காட்டில் இருக்கிறான். அவனுக்கு 2 அடி தூரத்தில் பாம்பு இருக்கிறது. அவன் அதைப் பார்க்கவே இல்லை என்றால், நேராக அவனிடம் சென்று, ‘இங்கே பார் பாம்பு’ என்று சொல்லலாம். அதே காட்டில் இன்னொருவன் நிற்கிறான். அவனுக்கு 2 அடியில் கயிறு இருக்கிறது. அதைப் பார்த்து பாம்பு என நினைத்துக் கொண்டு நிற்கிறான். அவனிடம் சென்று ‘அது கயிறு’ எனச் சொன்னால் அவன் புரிந்து கொள்ளமாட்டான். அவன் நிலைக்கு சென்று குருவானவர், ‘நீ எதை பாம்பு என நினைத்துக் கொண்டிருக்கிறாயோ, அங்கு கயிறுதான் இருக்கிறது’ என விளக்க வேண்டும். தப்பாக புரிந்து கொண்ட ஒருவனை, தெளிய வைக்க உபதேசம் செய்கிற குரு, எந்த யுக்தியை பயன்படுத்துகிறாரோ, அதையேதான் தப்பாக புரிந்துகொண்ட ஜீவர்களாகிய நமக்கு புரிய வைக்க, பகவான் கிருஷ்ணர் கீதையில் பயன்படுத்துகிறார்.
ஓடும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு வெளியில் பார்த்தால், ஓடாத மரங்கள் கூட ஓடி வருவதை போலத் தோன்றும். அங்கே நகர்கின்ற மரங்களில் நகராத தன்மையையும், தூரத்தில் கடலில் நகரும் கப்பல் என்பது கடற்கரையிலிருந்து பார்த்தால், நகராதது போல இருக்கும். அங்கே செயலின்மையில் செயலை பார்க்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நகராத கப்பலில் நகரும் கப்பலின் தன்மையைப் பார்க்கப் பழகுவோம்.
நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அத்தனை துயரங்களுக்குமே காரணம், செயலும், செயலின்மையும்தான். அந்த வகையில், இந்த ஸ்லோகம், நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது."

 

Comments