ஞானானந்தம்

உனக்குத் தருவதற்கு விஷயங்கள் தயாராக இருக்கின்றன. போ நீ உன் காதுகளைத் தயார் செய்து கொண்டு வா!
- திருச்செந்தூர் சித்தரின் உபதேசம்
ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் சிரசில் நடுவில் குழியைப் பார்த்து பதறிப் போனாள் அந்தச் சிறுமி!
பிற சிறுவர்களுக்கும் அழைத்துக் காட்டினாள்! கூடிவந்து, சுவாமியின் முதுகில் ஏறி மடியில் நின்று உரிமையோடு அந்த ஞானகிரியின் தலையைப் பார்த்த இளசுகள் - பதறிப் போயின! தாத்தா! பெரிய குழி! பெரிய காயம்! உங்க மண்டைல..."
கவலையோடு குழந்தைகள், சத்குருவைப் பார்த்து தாயைப் போல கதறின! பிள்ளைமையில் சுடர்ந்து மிளிர்ந்த அந்தத் தாய்மையை, ஞானானந்தர் ரசித்துச் சுவைத்தார்!
சொல்லுங்க தாத்தா... எப்படி வந்தது இந்தக் குழி உங்க மண்டையில்...?" கன்னத்தில் வழிந்த கண்ணீருடன் அடம்பிடித்துக் கேட்ட குழந்தைகளை சத்குரு கூர்ந்து பார்த்து, இப்படித்தானோ? வேடன் கண்ணப்பன், சிவலிங்கத் திருமேனியின் விழியில் குழிவிழுந்து குருதி வழிந்தபோது, தவித்திருப்பான்?" என்று நினைத்துப் பரவசித்திருக்கலாமோ என்னவோ!
குழந்தைகளின் தேம்பலை, அவர்களைத் தட்டித் தூக்கி சமாதானப்படுத்தி அமரச் செய்து பேசியது அந்த ஞானானந்தகிரி!
சுவாமி இப்படித்தான் நெடுக யாத்திரை போன காலத்தில்..."
எந்தக் காலத்துல தாத்தா?"
அது எப்பவோ அம்மா... இப்படி நடந்து நடந்து ஒரு ஊரில சுவாமியை நினைத்து உட்கார்ந்தது சுவாமி."
சுவாமியே நீதானே தாத்தா! நாங்களெல்லாம் உன்னைத்தானே சுவாமின்னு கூப்பிடறோம்! கும்பிடறோம்! நீ எந்த சுவாமியை நினைச்சுக்கற?"
ஞானானந்தர், பாலமுருகனைப் பாசத்துடன் பார்த் துப் பரவசிக்கும் பரமசிவன் போல அந்த பாலகனைப் பார்த்தார்! ‘அஹம் பிரும்மாஸ்மி’ என்ற அதி உன்னத வேதக்கதிர், எப்படி இந்தக் கள்ளமில்லாப் பிள்ளையின் நாவில் சாமான்யமான வாசகமாகி ‘சுவாமியே நீ தானே’ என்று விளைகின்றது என்று சத்குரு சிலிர்த்திருக்கலாம்.
கேளு இதை! சுவாமி அப்படி செலையாய் உட்காந்தப்போ... நெறைய நாள் உட்காந்திடுத்தோ என்னமோ... யாரோ ஒருத்தர், நம்மைப் பாத்துட்டு, சுவாமி அவ்வளவுதான் சமாதியாயிடுத்துன்னு நெனச்சிண்டு என்ன பண்ணினான் தெரியுமோ?"
குழந்தைகள், திகில் கதையின் முடிவை பயத்துடன் கேட்க ஆயத்தமாவது மாதிரி முகங்களை வைத்துக் கொண்டு, நெஞ்சைப் பிடித்துக் கொண்டன. சுவாமி தொடர்ந்தார்!
சமாதியாயிடுத்து சுவாமின்னு தீர்மானிச்சு 108 தேங்காய் வாங்கி சுவாமி தலையில உடைக்க ஆரம்பிச்சிருக்கான்!"
சத்குரு, அபிநயம் பிடித்தே காண்பித்தார் தேங்காய் உடைப்பதை! அதை தத்ரூப சித்திரமாய்ப் மனக் கண்ணில் பார்த்து, அந்த இளந்தளிர்கள் தாங்க முடியாமல் கண்ணில் நீர்வடிய சத்குருவை ஆறுதலாய் அணைத்துக் கொண்டு நின்றன... ஒரு சிறுவன், சுவாமி தலையின் மீது தன் தளிர்க்கையை வைத்து எப்போதோ தேங்காய் உடைத்ததை இப்போது மானசீகமாகத் தடுத்தான் பாவம்!
ரொம்ப வலிச்சுருக்குமே தாத்தா..." ஒரு குழந்தை கேவிக் கொண்டே கேட்டாள்....
தெரியாதேம்மா... சுவாமிதான் சுவாமியோடு இருந்ததே... அப்போ 108வது தேங்காயை உடைக்கப் போறச்சே முழிச்சுண்டது... தேங்காய் உடைக்க வந்த வர் நிறுத்திட்டார்... அந்தக்குழிதான் இந்தக்குழி!"
பிறவி என்ற சுற்றுக் குழியில், கர்மம் என்ற பற்றுக் குழியில், கர்ப்பவாசம் என்ற கருக்குழியில், பாவம் என்ற புற்றுக் குழியில் தன்னை அண்டிய அன்பர்கள் விழுந்து உளையாதபடி - காத்தருள வந்த சத்குரு - தன் உச்சிக்குழி பற்றி பாசமுடன் விசாரித்த குழந்தை களை உச்சிமுகர்ந்து மெச்சி அருளினார்.
ஏன் தாத்தா... உங்க அம்மா - அப்பாகிட்ட சொன்னியோ இதைப்பத்தி?" ஒரு சிறுவன், ஆதங்கத்துடன் சுவாமியைக் கேட்டான்...
ஒரு சிறுமி பெரிய மனுஷித் தோரணையில் குறுக்கிட்டாள்: தாத்தாவே சுவாமி. சுவாமிக்கு எப்படிடா அப்பா அம்மா இருக்கும்?"
தாயில்லான், தந்தையில்லான், தனக்கென்றோர் ஊர் இல்லான் என்ற சிவ சூத்திரத்தின் உட்பொருளை அநாயாசமாக அந்தப்பிள்ளை சொல்வதைக் கேட்ட சத்குரு - தன் மர்மச் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னார்: ஏன் இல்லை? அம்மா அப்பா சுவாமிக்கு இருக்காளே!"
மழலைச் செல்வங்களுடன் மகான்களின் மகான் நடத்திய இந்த ஆனந்த நாடகத்தை ஒட்டுக் கேட்ட அன்பர்கள், காதுகளை இன்னும் தீட்டிக் கொண்டார்கள். சத்குருவின் திருவாயாலேயே தன் பெற்றோர் பெயரை வெளியிடப் போகிறார்!
இருக்காளா அம்மா அப்பா? உனக்கா? எங்கே... இருக்கா? யாரு?"
பூர்வோத்ரம் விசாரித்தன புண்ய புருஷனை அந்தப் பூந்தளிர்கள்... சத்குரு சொன்னார்:
இதோ பக்கத்தில்தான்! திருவண்ணாமலையில்..."
அப்பா யாரு தாத்தா?"
அவரும் ஒரு மலைதான் அண்ணாமலை."
அம்மா?"
அம்மா பேரு உண்ணாமுலை."
அப்பாடா நம் தாத்தாவுக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள்" என்று கேட்டறிந்து சாந்தமான குழந்தைகள் மேலும் கேள்வி கேட்கும் முன், கிளம்புங்கள் சாப்பிடப் போங்கள்" என்று முதுகில் தட்டி திசை திருப்பி விட்டது ஞானானந்தகிரி.
அடடா தபோவனத்தில் இருந்த சத்குருவின் திருவிளையாடல் காணும் சுகத்தில் கிறங்கி இமயமலை அடிவாரத்திலும் மேல் உள்ள பனிக்குகையிலும் ‘தாங்கருந் தவம்’ செய்து கொண்டிருக்கும் சத்குருவை அப்படியே விட்டு விட்டோமே! என்ன ஆயிற்று அங்கே? கொஞ்சம் தெரிந்து கொள்ள இமயம் போய் பார்த்துவிட்டு வந்து விடுவோமா?
காலக்கணக்கு விபரம் கையில் இல்லை. ஆனால், நீண்ட நெடுந்தவம்! கொடுந்தவம்! கற்றைச் சடையான் கயிலாயன் இருப்பிடத்தில் ஒற்றை வஸ்திரத்துடன், பற்றில்லாமல் - ஒற்றில்லாமல் - வற்றலாய்த் தேகம் ஒடுக்கி ஞானானந்த சத்குரு பூண்டிருந்த தவம் பற்றி அவர் திருவாய் மலர்ந்து விளக்காவிட்டாலும் - நமக்கு கொஞ்சமாவது காட்டிக் கொடுத்தவர் கதிர்காமம் சுவாமிகள்!
சீர்காழியில் தன் ஜீவசமாதியில் அமைதிகொண்டு அருளிக் கொண்டிருக்கும் ‘கதிர்காமம் ஸ்வாமிகள்’ சத்குருவை அவர் காஷ்மீரப் பகுதி பனிமலையில் தவம் செய்து கொண்டிருந்த போது தரிசித்து, அவரின் பாதரேகையாய் ஒட்டிக் கொண்டு சிலகாலம் தொடர்ந்து இலங்கை வரை கூடச் சென்றவர்!
ஆனால், சத்குரு அவரை நேபாள ஸ்வாமிகள் என்றுதான் அழைத்தாராம்! கதிர்காமம் ஸ்வாமிகள், சத்குருவை சந்தித்த காலத்தில் சுவாமி ‘தமிழ்’ பேசவில்லை என்றும், சத்குருவும் கதிர்காமம் சுவாமிகளும் இலங்கையில் இருந்தபோதுதான் தமிழ் பேசவும், எழுதவும் சத்குரு கற்றுக் கொண்டார் என்பதும் ஒரு ஆச்சர்யத் தகவலாக நமக்குக் கிடைக்கிறது ஞானானந்த நூல்களில்! (பின்னாளில் சத்குரு வெண்பாவும், விருத்தமும் ஆசுகவியாய்ப் பொழிந்ததைக் கேட்டவர்கள், சத்குரு தமிழை பின்புதான் கற்றார் என்பதை இன்னும்கூட நம்ப மறுக்கிறார்கள்!)
இமயத்திலிருந்து, நேபாளம், பர்மா, மலேசியா எல்லாம் யாத்திரை செய்து, திரும்ப பாரதம் வந்து, பாரதத்தை இருமுறை காலாலேயே அளந்து வலம் வந்து பிறகு இலங்கை சென்று கதிர்காமத்தில் சிலகாலம் சத்குரு தவம் செய்ததாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன!
சத்குரு - கதிர்காமம் பகுதியில் தவம் செய்ததை தாமே நேரடியாக விவரிக்காவிட்டாலும், பூடகமான சில விளக்கங்கள் மூலம் அந்தத் திருத்தலத்தை விளக்கியது அழகோ அழகு!
‘கதிர்காமம் என்ற தலம் முன்பு ‘கார்த்திகேய கிராமம்’ என்று முருகப் பெருமான் பெயராலேயே பற்பல நூற்றாண்டுகள் அழைக்கப்பட்டு, மருவி, கதிர்காமம் என்று ஆனதாம்’ என்று, சத்குரு இனிமையாக விளக்கியதை அன்பர்கள் குறித்து வைத்துள்ளார் கள்! உதிரி உதிரியாய் சத்குரு கொடுத்த கதிர்காமத் தகவல்களை ஒருசேரத் தொகுத்தளித்த ஞானானந்த தரிசனத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களோ, நம்மை பிரமிப் படையவும், தமிழர் மாண்பு பற்றி பெருமைப் படவும் வைக்கின்றன.
ஈழத்தில் - ஒரு காலத்தில் சித்தர் பரம்பரை வேர் பாய்ச்சி விழுது நீட்டி கிளை பரப்பி இருக்கிறது! யாழ்ப்பாணத்தில் நீராவியடியில் கடையிற்சுவாமிகள்! கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக்குட்டி சுவாமிகள்! கிழக்கே காரைத்தீவில் சித்தானைக்குட்டி ஸ்வாமிகள் ஆகியோரின் ஜீவசமாதிகள் உண்டு. திருமூலம் மரபில் வந்த சித்தர்கள் கூட்டம் அங்கே - மறைந்தும் திரிந்தும் உறைந்ததும் உண்டு!
அந்த ஈழத்துக்குச் சென்ற ஞானானந்தகிரி சுவாமிகள், எட்டா உயரத்தில் இருந்த திரிகோணமலை, நுவரேலியா கிரிகளில் தங்கித் தவம் இயற்றியதும் பொருத்தம்தானே!
இதற்கெல்லாம் முத்தாய்ப்பான தகவல் - நம் பரத கண்டத்தில் கிரி பரம்பரை சார்ந்த கல்யாண்கிரி சுவாமிகள்தான் கதிர்காம தலத்தின் மகிமை கண்டறிந்து உலகம் முழுக்க பிரகாசிக்க வைத்தார் என்பது!
மொத்தத்தில் - கிரிகள் நிரம்பிய ஈழம், கிரி பரம்பரையைச் சார்ந்த இந்த ஞானகிரியை வந்து கொஞ்சம் இருந்து போகச் சொல்லி ஈர்த்துவிட்டது என்று மட்டும் சொல்லலாம்!
ஞானானந்த சத்குருவைத் துதிக்கும் ஒரு சுலோகத்தில் இறுதி அடி ‘ஞானானந்த மஹாநதி!’ என்று நிறைவுறும்! அது எவ்வளவு பொருத்தமானது என்று உணர முடிகிறது - ஞானானந்தப் பெருக்கு எங்கே இருந்து கிளம்பி எங்கெல்லாம் நடந்து.. திருக்கோவிலூரில் வந்து தேனமுதம் தெளிக்கும்
தேவ குமுதங்கள் மலர்ந்து சிரிக்கும் ஞான அமுதப் பொய்கையாய் நிலைகொண்டு விட்டது என்பதை அறியும்போது!
அந்தத் தடாகத்துக்கு வேலி இல்லை; ஆனால், அதில் குளித்துக் கரையேற வேண்டுமெனில் - நீச்சல் வீரராய் இருக்க வேண்டாம்! நிர்மலமான மனசுக்காரராய் இருந்தால் மட்டும் போதும் என்பது எவ்வளவு எளிய உபாயம்!
நீட்டி முழக்கிய உபதேங்கள் இல்லை... நாவுக்குச் சுளுக்கு வரவைக்கும் கடினபத மந்திரங்கள் இல்லை! ஆர்ப்பாட்டமான கோஷச் சடங்குகள் இல்லை! சத்குருவின் உபதேச சாரம் - சரண் என்ற மூன்று எழுத்து மட்டுமே என்பது எவ்வளவு எளிமையான உபாயம்!
அந்த எளிமையான உபதேசத்தை - நடைமுறையில் பாமரர்களுக்கு விளக்க - அந்த ஞானமேரு, நமக்காக தன்னை எப்படி சுலபன் ஆக்கி வந்து ஆண்டு அருளி இருக்கிறது!
சத்குருவின் நிர்மல ஸ்படிக நெஞ்சில் கருணை - வேலியில்லா வானமாய் விரிந்திருந்தது என்பதற்கு இந்த ஒரு சிறு சம்பவம் போதும்.
வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்தவர்கள் ஒரு சிலர், சத்குருவை சரண் அடைந்தபோது அவர்களுக்கு நேர்ந்த சறுக்கல்களை முகஞ்சுளிக்காமல் அக்கறையுள்ள மருத்துவன் போல் விவரித்தபோது, நேரம் ஒதுக்கி செவிமடுத்து கேட்டுக் கொண்டிருந்தார். ‘பிரமுகர்களெல்லாம் காத்திருக்க, - அந்தப் பேர் வழிகளுக்கு இவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டுமா சத்குரு? அதற்கு இவர்கள் தகுதியானவர்களா என்ன’ என்று ஒரு அன்பருக்கு நினைப்பு!
அந்த அன்பரின் முகபாவத்திலிருந்தே அதைக் குறிப்பெடுத்துக் கொண்ட மகாஞானகுரு, அந்த அன்பர்களை அனுப்பிவிட்டு, அவரை அழைத்துச் சொன்னார்! அந்த வாசகம், உலகத்தின் எல்லாத் துறையினருக்கும் சொல்லிய இருவரி கீதை!
சேற்றில் இறங்கித் தத்தளிக்கிறவனை தூக்கிவிட வேண்டுமெனில், நாமும் சேற்றில் இறங்கித்தான் தூக்கிவிட முடியும்! கால்களில் சேறு அப்புமே என்று பார்த்தால் காப்பாத்தறது எப்படி?"
சத்குரு - தபோவனத்தில் நடத்திக் காட்டிய ஒரு ஞானக்குறும்பு பளிச்சென்று நினைவுக்கு வருகிறது!
ஏகாதசிக்கு முதல்நாள்! தபோவனத்தில் சத்குரு சன்னிதிகளைச் சுற்றி வருகிற நேரத்தில் அங்கிருந்த ஒரு அன்பர் தன் நண்பரிடம் சற்று சுயப்பெருமையான தொனியில் நாளைக்கு ஏகாதசி... கடுமையான உபவாசம் இருக்கப் போகிறேன்!" என்று சொல்லிக் கொண்டிருந்தார்!
அவரது நேரம் - அவர் சொன்ன ‘ஏகாதசி சபதம்’ சத்குரு காதில் விழுந்தது. சட்டென்று நின்றார். ஏகாதசி உபவாசக்காரர்களை கிட்டே வரச் சொல்லி அழைத்தார். கேட்டார்.
உபவாசம் இருப்பது பற்றி ஏதோ பேசினீர்களோ?"
ஆம் சுவாமி."
உபவாசம் இருப்பது எப்படி என்று தெரியுமோ?"
தெரியாது சுவாமி."
ரொம்ப நல்லது! உபவாசம் எப்படி இருப்பது என்பதை சுவாமி உங்களுக்கு நாளை சொல்லித் தரும்."
சந்தோஷமாகத் தலையாட்டினார்கள் அந்த அசடுகள்! தெரியுமா அவர்களுக்கு சுவாமி அவர்களுக்காகவே தயாரித்து வைத்திருந்த பயங்கரமான ‘விசேஷ ஏகாதசி உபவாச’ சதித்திட்டம்!!
அப்படி என்னதான் செய்தார் ஸ்வாமி?

Comments

  1. ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!

    ReplyDelete

Post a Comment